பாலக்காடு: கேரள பிராமண சபையின் மாநிலக் குழு சார்பில் நடத்தப்பட்டு வரும், ஸ்ரீ சங்கர சந்தேசா யாத்திரைக்கு, பாலக்காடு சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் மாவட்டக் குழு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது. ஸ்ரீ சங்கர ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அத்வைத தத்துவங்களைப் பரப்புவதற்கும், சனாதன தர்மத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கும் இந்த யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது நடைபெற்ற கூட்டத்தில், ஆதிசங்கரரின் பிறந்தநாளான சங்கர ஜெயந்தி தினத்தை, தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று ஒருமனதாக வலியுறுத்தப் பட்டது. மேலும், அன்றைய தினத்தில் சங்கராச்சாரியாரின் படைப்புகள் மற்றும் தத்துவங்கள் குறித்த கருத்தரங்குகளை, நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப் பட்டது. கோவில் நிர்வாக குழுத்தலைவர் கரிம்புழை ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், சபையின் மாநிலத் தலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் பரமேஸ்வரன், பொருளாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பொதுச் செயலாளர் சிவராமகிருஷ்ணன், ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் ராமன் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் விஸ்வநாதன், மூர்த்தி, சுந்தரராமன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.