பரமக்குடி சித்திரை திருவிழாவில் கள்ளழகர் தசாவதார காட்சி அளித்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2026 08:05
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார காட்சி அளித்தார்.
பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா நடக்கிறது. மே 1 அதிகாலை 3:00 மணிக்கு கள்ளழகர் வெண்பட்டு உடுத்தி பூப்பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார். நேற்று தல்லாகுளத்தில் இருந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். இரவு 1:00 மணிக்கு வண்டியூர் பெருமாள் கோயிலை அடைந்தார். அங்கு சந்தன காப்பு முதலான சைத்யோபசாரம் நடந்தது. முன்னதாக ஆற்றுப்பாலம் பகுதியில் ஆயிரம் பொன் சப்பரத்தில் குதிரை வாகனத்தில் அழகர் அருள் பாலித்தார். தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் மின்விளக்குகளால் ஜோடிக்கப்பட்ட ஆயிரம் பொன் சப்பரத்தை 3 கி.மீ., தூரம் வைகை ஆற்றில் வண்டியூர் பெருமாள் கோயில் வரை இழுத்துச் சென்றனர். இன்று மாலை 5:00 மணிக்கு அழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். மகாதீப ஆராதனைக்கு பின் வண்டியூரில் இருந்து புறப்பாடாகினார். இரவு 8:00 மணிக்கு வைகை ஆற்றில் மட்டா மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு அழகர் சாப விமோசனம் அளித்தார். தொடர்ந்து வாணியர் மண்டகப்படியில் இரவு 11:00 மணிக்கு சேர்க்கையாகி, விடிய விடிய தசாவதார காட்சி அளித்தார். திருவிழாவை ஒட்டி வைகை ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கப்பட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.