பதிவு செய்த நாள்
21
ஜன
2013
10:01
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா, ஜன.,27ல் நிலைத் தெப்பம் திருவிழாவாக நடக்கிறது. ஆண்டுதோறும் மாரியம்மன் தெப்பக்குளத்தில், செயற்கை முறையில் தண்ணீர் நிரப்பப்பட்டு, இவ்விழா நடத்தப்படும். அம்மனும், சுவாமியும் தெப்பத்தில் உலா வருவர். தற்போது பருவமழை பொய்த்ததாலும், வைகை வறண்டதாலும் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப முடியவில்லை. 36 ஆண்டுகளுக்கு பின், இப்படி ஒரு நிகழ்வு ஏற்பட்டது. கடந்த மாதம், கடைசி முயற்சியாக மணலூர் பம்பிங் ஸ்டேஷனிலிருந்து தண்ணீர் நிரப்பும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இதைதொடர்ந்து, திருவிழாவை எவ்வகையில் நடத்துவது என்பது குறித்து, நேற்று(ஜன.,20) தக்கார் கருமுத்து கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் முடிவு குறித்து, அவர் கூறியதாவது: இந்தாண்டு நிலைத் தெப்பம் என்கிற சம்பிராதயப்படி, தெப்ப உற்சவம் நடத்தலாம் என, பட்டர்கள் தெரிவித்தனர். தற்போது தெப்ப கட்டுமானப்பணிகள் துவங்கியுள்ளன. எப்போதும் போல் பிரம்மாண்ட தெப்பம் அமைக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்படும். வழக்கமான சம்பிரதாய நிகழ்ச்சிகளும் நடக்கும். ஜன.,27 காலை 5 மணிக்கு, கோயிலில் இருந்து அம்மனும், சுவாமியும் புறப்பட்டு, தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் வருவர். பின், காலை 10.30 மணி முதல் 10.54க்குள் தெப்பத்தில் எழுந்தருளுவர், என்றார்.