பழநிமலை அடிவாரத்திலுள்ள திரு ஆவினன்குடி முருகனின் மூன்றாம் படை வீடு ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். குழந்தை வடிவமாக இருப்பதால், வள்ளி, தெய்வானை இல்லை. இவர் சிவ அம்சம் என்பதால், கருவறை சுற்றுச்சுவரில் (கோஷ்டம்) தட்சிணாமூர்த்தி, பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரர் இருக்கின்றனர். பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்குள்ள பெரியாவுடையாரைத் தரிசித்துவிட்டு, பின் பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோயிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம். பெரியநாயகி அம்மன் கோயிலில் தான் தைப்பூசக் கொடியேற்றம் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பூசத்தன்று தேரோட்டமும் இந்த கோயிலின் ரதவீதிகளில் தான் நடக்கும். இக்கோயிலில் உள்ள உற்சவர் முத்துக்குமார சுவாமி( முருகன்) தைப்பூச விழா நாட்களில் வீதியுலா வருவார். இன்றைய நிகழ்ச்சி காலை 10.00: முத்துக்குமார சுவாமி கொடிக்கட்டி மண்டபத்தில் எழுந்தருளல் 10.30 : கொடியேற்றம் இரவு 7.30: புதுச்சேரி சப்பரத்தில் சுவாமி பவனி.