பதிவு செய்த நாள்
21
ஜன
2013
10:01
ஈரோடு: மனைவியிடம் பிரச்னை செய்யும் கணவனுக்காக, உத்தமபுத்திரன் உருவ பொம்மைகளும், கணவனிடம் பிரச்னை செய்யும் மனைவிக்காக, உத்தமபத்தினி சிலைகளும், கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தும் வினோத உருவச்சிலை, ஈரோட்டில் தயாராகி வருகிறது. ஒவ்வொரு மகிழ்ச்சி, துக்கங்களுக்கு கோவிலுக்கு செல்வதும், பரிகாரம் செய்வதும், நேர்த்திக்கடன் செலுத்துவதையும் மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். நேர்த்திக்கடனை, பல உருவமாக செய்து வைத்து, வழிபடுவது காலம், காலமாக நடந்து வருகிறது. கணவன், மனைவி ஒருவருக்குள் ஒருவர் அடங்கி, அன்பாக வாழவும், சிலை செய்து, நேர்த்திக்கடன் செலுத்தும் வினோதம் ஈரோட்டில் நடக்கிறது. ஈரோடு மாநகராட்சி இந்திராபுரத்தைச் சேர்ந்த பழனியப்பன், 75, களி மண்ணால் ஆண், பெண், விலங்குகளின் உருவம் கொண்ட சிலை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு துணையாக, மகன் தட்சிணாமூர்த்தி மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். தவழும் பிள்ளை, தொட்டில் பிள்ளை, நடக்கும் பிள்ளை, மடிகால் பிள்ளை, நடையாள் நடை பெண், ஆடு, பசு, மாடு, குதிரை, வேட்டை நாய், பாதம் ஆகிய உருவங்களை, களி மண்ணால் செய்கிறார்.கணவன், மனைவிக்குள் இருக்கும், குடும்ப பிரச்னை தீரவும், இவர்கள் சிலை செய்கின்றனர். குடித்துவிட்டு, ஊர் சுற்றும் கணவனை திருத்த, பெண்களுக்காக, உத்தமபுத்திரன் சிலை செய்கிறார். அதேபோல், பெண்களால் குடும்பத்தில் பிரச்னை தீர, கணவன்களுக்காக, உத்தமபத்தினி உருவச்சிலையும் செய்து தருகின்றனர்.
இது குறித்து, பழனியப்பன், தட்சிணாமூர்த்தி கூறியதாவது: உருவச்சிலை செய்யும் தொழிலை, பாரம்பரியமாக செய்து வருகிறோம். அவல்பூந்துறை குளத்தில் இருந்து, களிமண் வாங்கி வருகிறோம். சமீபகாலமாக, தமிழகத்தில், குடும்ப பிரச்னை அதிகரித்துள்ளது. கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும், கோவிலில் வேண்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கணவன்களுக்காக உத்தமபத்தினி உருவமும், மனைவிகளுக்காக, உத்தமபுத்திரன் சிலையும் செய்து தருகிறோம். இவ்விரு சிலையும், அளவுக்கு தகுந்தாற்போல், 1,500 ரூபாய் முதல், 3,000 ரூபாய்க்கு, விற்பனை செய்கிறோம். இச்சிலையை கோவிலில், நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டால், குடும்பத்தில் இணக்கம் ஏற்படும்.
கால் நோய்க்கு பாதம்: காலில் ஏற்படும் நோய்க்கு பாதமும், குழந்தை பாக்கியத்துக்கு தொட்டிலுடன் குழந்தை செய்து தருகிறோம். பசு, மாடு, குதிரை, 500 ரூபாய் முதல், 1,500 ரூபாய் வரையும், பாதம், 200 ரூபாய், வேட்டை நாய் மற்றும் ஆடு தலா, 500 ரூபாய்க்கு விற்கிறோம். வெளிமாவட்டத்தினர், அதிக அளவில் இச்சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். இங்கு, ஆண்கள் அதிகமாக சிலைகளை வாங்கி செல்கின்றனர். இச்சிலைகளை வாங்கிச் செல்வோர், தங்களது குல தெய்வம் கோவில் அல்லது ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் நேர்த்திக்கடனாக வைத்து, சுவாமியை பூஜை செய்துவிட்டு சென்றால், தங்கள் பிரச்னை தீரும் என்பது நம்பிக்கை.