பிரம்மீஸ்வரர் கோவில் புனரமைப்பு வரும் 7ல் மஹா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மே 2026 10:05
உத்திரமேரூர்: பினாயூர் பிரம்மீஸ்வரர் கோவிலில், 18 ஆண்டுகளுக்கு பின், வரும் மே 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையடுத்து புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பினாயூர் கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், திரிபுரசுந்தரி சமேத பிரம்மீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் மேல்புறத்தில் காவல் தெய்வங்கள் உள்ளிட்ட சுவாமி சிலைகள் சிதிலம் அடைந்து இருந்தது. மேலும், விமான கோபுரம் பழுதடைந்து பலவீனமாகி வந்தது. கோவில் வளாகத்தை சுற்றிலுமான தரைதளத்திற்கான கான்கிரீட் தரை பெயர்ந்து சேதமானது. இக்கோவிலில் கடைசியாக 2008ல் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையடுத்து, கோவிலில் சிதிலம் அடைந்த பகுதிகளை சீரமைத்து, 18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி மக்கள் தீர்மானித்தனர். அதன்படி, அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் சில மாதங்களாக கோவில் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. கோவிலில் உள்ள விநாயகர் மற்றும் முருகன் சன்னிதிகளுக்கு புதிய மண்டபம், நந்தி, நவ கிரகம் உள்ளிட்டவை புதிதாக அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. புனரமைப்பு பணி நிறைவு பெற்றதும் வரும் 7ம் தேதி, மஹா கும்பாபிஷேகம் விழா நடத்த கோவில் நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.