பதிவு செய்த நாள்
21
ஜன
2013
01:01
தமிழ் நாட்டில் உள்ள இந்து அறநிலையத்துறைக்கு உட்டபட்ட கோயில்களில் புதுவருடப்பிறப்பு, பொங்கல், தீபாவளி, போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் கோயில்களுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கான கட்டணங்கள் மற்றும் பக்தர்கள் சுவாமியை வழிபடுவதற்கான கட்டணம் ஆகியவை கடுமையாக உயர்த்தப்படுகின்றன. இந்த கட்டணமானது சாதாரண நாட்களில் வாங்குவதை விட மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகமாகவாக வசூலிக்கப்படுகிறது என பக்தர்கள் வேதனைப்படுகின்றனர்.
கடந்த ஜனவரி முதல் நாளன்று, திருத்தனி முருகன் கோவிலில் காரில் செல்பவர்களுக்õன நுழைவு கட்டணம் என, 50 ரூபாய் வசூலித்தனர். அதற்காக கொடுக்கபட்ட ரசீது லாரி, பஸ், டிராக்டர் வாகனங்களுக்கு உரித்தானது. இது பற்றி விசாரித்த போது, வாங்கிய 50 ரூபாய்க்கு, ரசீது கொடுத்துவிட்டோமே... இது மேலிடத்து உத்தரவு, அதன்படி வசூலிக்கிறோம் என்று மட்டும், பதில் வந்தது. கோவில் வாசலுக்குச் சென்றால், அங்கே, சிறப்பு நுழைவு அனுமதி சீட்டு, 150 ரூபாய் என, அறிவிப்பு உள்ளது. சாதாரண நாட்களில், 50 ரூபாய் கட்டணம். தற்போது, மும் மடங்கு உய ர்த்தி உள்ளனர்.
அருகிலுள்ள சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலிலும் அதே பாணி தான். கோவில் நுழைவு பாதையில், கார்த்திகை திருவிழா சுங்க ரசீது, 2012-2013 குறிப்பிட்டு, அதற்கு கட்டணம், 50 ரூபாய் என, சீட்டைக் கொடுத்து, அடாவடியாக வசூல் செய்தனர். 50 ரூபாய் என்பதற்கு, ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதித்திருந்தனர். தமிழக கோவில்கள் என்ன சினிமா தியேட்டரா? புத்தாண்டு புதுப்படம் ரிலீஸ் என்றால் , அதிக கட்டணம் வசூலிப்பர். அது போல முக்கிய தினம் என்றால், இரட்டிப்பு கட்டனம் எதற்கு? இந்த திடீர் கட்டண உயர்வை ஆளும் கட்சியினரும், அரசியல் கட்சியினரும், அரசியல் வாதிகளும் இக்கட்டணங்களைச் செலுத்துகின்றனரா என்பது, அந்த இறைவனுக்கே வெளிச்சம். பண்டிகை நாட்களிலும் சாதாரண கட்டணம் இருந்தால் தான் பக்தர்கள் நிம்மதியாக கோயிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியும்.