சிவகங்கை, நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் வைகாசி திருவிழா மே 21 அன்று மாலை 5:15 மணிக்கு அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இன்று காலை 9:35 மணி முதல் 10:25 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. வைகாசி திருவிழாவை முன்னிட்டு தினமும் காலையில் கண்ணுடைய நாயகி வெள்ளி கேடகத்திலும், இரவு 7:00 மணிக்கு தினமும் அம்மன் சிம்மம், காமதேனு, யானை, பூத, வெள்ளி ரிஷபம், அன்னம், வெள்ளி குதிரை வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். விழாவின் 9ம் நாளான மே 30 அன்று காலை 10:35 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். அன்று இரவு 7:00 மணிக்கு கண்ணுடைய நாயகி புஷ்ப பல்லக்கில் திரு வீதி உலா வரவுள்ளார். பத்தாம் நாளான மே 31 அன்று காலை 8:00 மணிக்கு பால்குடம், பூக்குழி இறங்குதல், இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக மே 28 அன்று மாலை 6:00 மணிக்கு உட்பிரகாரத்தில் தங்கரதத்தில் அம்மன் வலம் வருகிறார். ஜூன் 1 அன்று உற்சவ சாந்தி, வெள்ளி ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறும். விழா கமி்ட்டியினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.