பதிவு செய்த நாள்
22
ஜன
2013
11:01
குன்றத்தூர்: குன்றத்தூர் ஒன்றியத்தில் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வரும், பாரம்பரிய கோவில்களை சீரமைத்து, கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் கைப்பற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வரலாற்று சிறப்பு : குன்றத்தூர் பல வரலாற்று சிறப்புகளை கொண்டது. பெரிய புராணம் இயற்றிய சேக்கிழார் வாழ்ந்த ஊர். சுப்பிரமணிய சுவாமி கோவில், அருணகிரி நாதரால் பாடல் பெற்ற தலம்.குன்றத்தூரிலும், அதனை சுற்றியும் கி.பி., 8ம் நூற்றாண்டு முதல், 12ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கட்டப்பட்ட கோவில்கள் பலஉள்ளன. இவற்றில் பெரும் பாலானவை பராமரிக்கப்படாமல், சிதிலமடைந்து உள்ளன.இடியும் நிலையில்...குன்றத்தூர் ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள், 2 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு, ஏறத்தாழ 30 பழமை வாய்ந்த சிவன் கோவில்களும், 25 பெருமாள் கோவில்களும் உள்ளன. வட்டம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட, காஞ்சிவாக்கத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த, இந்த கோவில், சிதிலமடைந்து, இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது.காஞ்சிவாக்கத்தில் இருந்து, வலையகரணை ஊராட்சிக்கு செல்லும் வழியில், இடிந்து விழுந்து, முற்றிலும் அழிந்த நிலையில், ஒரு கோவில் உள்ளது. செரப்பணஞ்சேரி ஊராட்சியைச் சேர்ந்த, நாவலூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த, காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் கோவில் சிதிலம்அடைந்துள்ளது.
கோபுரங்களில் செடிகள்: ஊராட்சியில் அமைந்துள்ள, அகஸ்தீஸ்வரர் ஒரத்தூர் கோவில் விஜயநகர வேந்தன் அச்சுதனால் கி.பி. 1539ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். தற்போது இந்த கோவில் பராமரிப்பில்லாமல் மூடியே கிடக்கிறது. இதேப்போல், இதே பகுதியில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவிலும், பராமரிப்பில்லாமல் மூடியே கிடக்கிறது. ஆதனூர் ஊராட்சியில் இடியும் நிலையில் பழமையான, அகத்தீஸ்வரர் கோவில் பராமரிப்பில்லாமல், கோபுரத்தில் செடிகள் வளர்ந்து சிதிலம்அடைந்து வருகிறது.
இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது:பழமை வாய்ந்த கோவில்கள் முறையாக, பராமரிக்கப்படாமல் உள்ளன. கோவிலுக்கு சொந்தமான, நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டு, குத்தகை பணம் கோவிலுக்கு வராமலும் உள்ளது. மேலும் கோவில் சொத்துக்களை, அபகரிப்பதற்காக கோவில்கள் பராமரிக்கப்படாமல் அழிக்கப்பட்டு வருகின்றன.எனவே, இந்து சமய அறநிலைய துறையினர், அழிந்து வரும் பழமையான கோவில்களையும், கோவில் நிலங்களையும் கைப்பற்றி பராமரிக்க வேண்டும். இவ்வாறு, பக்தர்கள் கூறினர்.
மன்னர்களின் கோவில் திருப்பணி: காஞ்சியை ஆட்சி செய்த, சோழ மன்னர்கள், இப்பகுதியில் பல கோவில்களை கட்டியுள்ளனர். முதற்கால சோழர்களான ஆதித்யசோழன், முதலாம் பராந்தகன், இடைக்கால சோழர்களான முதலாம் ராஜேந்திரன், ராஜாதி ராஜன், சாளுக்கிய சோழர்களான, முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன் ஆகியோர் கட்டிய கோவில்கள் உள்ளன.