பதிவு செய்த நாள்
22
ஜன
2013
11:01
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், நேற்று நடந்த தை மாத கிருத்திகை விழாவில், 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், பல மணி நேரம் காத்து இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.திருத்தணி முருகன் கோவிலில், மாதம்தோறும் நடக்கும் கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து மூலவரை வழிப்படுவர். நேற்று தை கிருத்திகை விழாவை முன்னிட்டு, வழக்கத்திற்கு மாறாக அதிகாலை, 5:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை பக்தர்கள் அதிகளவில் மலைக்கோவிலில் குவிந்தனர். 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரத்திற்கு மேல் காத்து இருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள், 100, 50 மற்றும், 25 ரூபாய் சிறப்பு நுழைவு கட்டணம் வாங்கி, ஒரு மணி நேரம் காத்திருந்து முருகப் பெருமானை வழிப்பட்டனர்.
முன்னதாக, அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு பால், பன்னீர், தேன், விபூதி மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து தங்கவேல், தங்க கிரீடம், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.அதே நேரத்தில், ஆபத்சாகய விநாயகர், சண்முகர், உற்சவர், வள்ளி, தெய்வானை, துர்க்கையம்மன் ஆகிய சன்னிதிகளிலும் சிறப்பு தீபாராதனை நடந்தது.இரவு, 7:00 மணிக்கு மலைக்கோவில் வளாகத்தில், உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.