சென்னை-வேலூர் வழியில் சுமார் 90 கி.மீ தொலைவில் அமைந்துள்ள காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில் சுமார் 14 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஞானமலை. இங்கு நின்றநிலையில் வள்ளி-தெய்வானை தேவியருடன் அருள்பாலிக்கிறார் முருகன்! முருகனின் பின் இரு கைகளில் பிரம்மாவின் கமண்டலம் மற்றும் ஜபமாலை; முன் இரு கைகளில் ஒன்று அபய ஹஸ்தமாகவும் மற்றொன்று இடுப்பில் வைத்தபடியும் திகழ்கிறது. இங்கு முருகனின் திருநாமம் ஞானபண்டித சுவாமி. ஞானமலை கோயிலில் விசேஷ தரிசனத்துக்கு உரியவர் குறமகள் தழுவிய குமரன். இவரின் உத்ஸவ மூர்த்தம் மலை அடிவாரத்தில் ஞானாஸ்ரமத்தில் உள்ளது. அழகும் சாந்நித்தியமுமான மூர்த்தி இவர்!
ஞானமலையில் வெப்பாலை மரங்கள் விசேஷம். இந்த மரத்தின் இலைக்கு தோல் நோய்களை குணமாக்கும் சக்தி உண்டு. வெப்பாலை மர இலைகளில் பட்டுவரும் காற்றை சுவாசித்தால் தாம்பத்ய உறவு வலுப்படும். ஞானபண்டித சுவாமி கல்வி-ஞானம் அருள்பவர். பள்ளி, கல்லூரி அட்மிஷனுக்காக காத்திருப்போர் இவரை வழிபட, அவர்கள் விரும்பியபடியே அட்மிஷன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் வள்ளியை மணந்துகொண்டு திருத்தணி செல்லும் வழியில் முருகப்பெருமான் முதன்முதலாக தங்கி இளைப்பாறிய இடம் இது என்பதால், திருமணப் பாக்கியம் அருளும் தலமாகவும் திகழ்கிறது ஞானமலை. மட்டுமின்றி இந்தத் திருத்தலத்தில் ஞானவெளி சித்தர் என்ற மகானின் சமாதியையும் தரிசிக்கலாம்.