பதிவு செய்த நாள்
24
ஜன
2013
11:01
புதுச்சேரி: கொம்பாக்கம் ஸ்ரீ வேங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று வெகு விமர்சையாக நடந்தது. கொம்பாக்கத்தில், 120 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட பஜனை மடம், காலப்போக்கில் பழுதடைந்தது. பஜனை மடம் இருந்த இடத்தில், கொம்பாக்கம் கிராம மக்களின் சீரிய முயற்சியால், 75 லட்சம் ரூபாய் செலவில், மூன்று மாதங்களில், வேங்கடாசலபதிக்கு அழகிய கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை மீது மூன்று நிலைகளைக் கொண்ட, உயரமான விமானம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மூலவர் சன்னதியுடன், அலர்மேல்மங்கை தாயார், ஆண்டாள் ஆகியோருக்கும் அழகிய சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. 21 அடி உயர அபய ஆஞ்ஜநேயர் சிலை, சக்கரத்தாழ்வார் - நரசிம்மர் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ வேங்கடாஜலபதி கோவில் சம்ப்ரோக்ஷண விழா, கடந்த 20ம் தேதி அனுக்ஞையுடன் துவங்கியது. நேற்று காலை 8.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, ஐந்தாம் கால ஹோமம், யாத்ரா தானம், கும்பங்கள் புறப்பாடு நடந்தது. காலை 9.00 மணிக்கு மேல், 10.30 மணிக்குள், மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில், நமச்சிவாயம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி., ராமதாஸ், இந்து சமய நிறுவனங்கள் ஆணையர் மோகன்தாஸ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை, கோவில் அறங்காவல் குழுத் தலைவர் தேவராஜ், துணைத் தலைவர் ஜானகிராமன், செயலாளர் சிவக்குமரன், பொருளாளர் வீரப்பன், உறுப்பினர் வீரராகு மற்றும் விழாக் குழுவினர், கிராம மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.