பதிவு செய்த நாள்
24
ஜன
2013
11:01
சென்னை: தஞ்சை மாவட்டம், பட்டீச்சரம் கோதண்டராம சுவாமி கோவிலில், குடமுழுக்கு விழா, இம்மாதம், 27ம் தேதி நடக்கிறது. நிழல் போல் தொடர்ந்து வந்த தோஷம் நீங்க, ஈஸ்வர பூஜையை, கடவுள் ஈஸ்வரனே செய்த இடம் பட்டீச்சரம். பட்டுத்தொழில் சிறக்க, சாலிய மகரிஷி முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க,கோதண்டராமன் பட்டீச்சரத்தில் காட்சியளித்தார் என்றும், திருத்தல வரலாறுகள் கூறுகின்றன. இத்தகைய பெருமை பெற்ற, தஞ்சை, பட்டீச்சரத்தில் உள்ள கோதண்டராமர் சுவாமி கோவிலின் குடமுழுக்கு, இம்மாதம், 27ம்தேதி நடக்கிறது. நாளை மாலை, மங்கள ஆரத்தி, வாஸ்து பூஜை நடக்கிறது. சனிக்கிழமை காலை, யாக சாலை பிரவேசம், மங்கள ஆரத்தி நிகழ்ச்சிகளும், மாலை, பெருமாளுக்கு, 108 கலச திருமஞ்சனமும், இரவு, யாக பூஜைகள், ஹோமங்களும் நடக்கின்றன. இம்மாதம், 27ம்தேதிகாலை, யாத்திராதானம், மகா கும்பங்கள் புறப்பாடு நிகழ்ச்சியும், காலை, 6:00 மணிக்கு குடமுழுக்கும், மாலை, பெருமாள் புறப்பாடு வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சிகளில், பங்கேற்க விரும்புவோர், ஆயிரம் ரூபாய் செலுத்தினால், பித்தளை கலசத்துடன் கூடிய பிரசாதம் வழங்கப்படும் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நன்கொடை அனுப்ப, "செயல் அலுவலர், அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோவில், பட்டீச்சரம்- 612 703 என்ற, முகவரிக்கு அனுப்பலாம்.