பதிவு செய்த நாள்
22
ஜூன்
2026
08:06
பல்லடம்; பல்லடத்தில், கைலாய வாத்தியங்கள் முழங்க அருளானந்த ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா துவங்கியது.
பல்லடம் பட்டேல் வீதியில், நூற்றாண்டுகள் பழமை ஓய்ந்த அருளானந்த ஈஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், பல ஆண்டுகளாக புனரமைக்கப்படவில்லை. பல்லடம் பகுதி பக்தர்கள், தொழில் துறையினர், பொதுமக்களின் பங்களிப்புடன், கோவில் புனரமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. இதனையடுத்து, ஜூன் 24 கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, ஜூன் 4ம் யாகசாலை அமைக்கும் பணிகள் துவங்கின. நேற்று காலை, 9.00 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், கோ பூஜை, அஸ்வ பூஜை உள்ளிட்டவை நடந்தன. மாலை, 5.00 மணிக்கு, அங்காளம்மன் கோவிலில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. கைலாய வாத்தியங்கள் முழங்க, வானவேடிக்கையுடன், கோபுர கலசங்கள், முளைப்பாலிகை, தீர்த்தக் குட ஊர்வலம் நடந்தது. நந்தி வாகனத்தில் அம்மையப்பராக சிவபெருமான் அருள்பாலிக்க, பல்லடமே திரண்டு வந்தது போல், பக்தர்கள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். திருச்சி ரோடு, என்.ஜி.ஆர்., ரோடு, மங்கலம் ரோடு வழியாக, ஊர்வலம், அருளானந்ந ஈஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பல்லடம் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.