பதிவு செய்த நாள்
28
ஜன
2013
11:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தைப்பூச விழாவையொட்டி, கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில், நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மற்ற கோவில்களிலும் முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வாலாஜாபாத் அடுத்த இளையனார் வேலூர் பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு அபிஷேகமும் மற்றும் ஆராதனையும் நடந்தது. பால் குடம்திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நேற்று தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பால்குடங்களுடன் அலகு, வேல் குத்தி காவடிகளை எடுத்து வந்தனர். கண் மலர் வெள்ளிப்பொருட்களை அர்ச்சனை செய்து காணிக்கை செலுத்தினர். பத்துக்கும் மேற்பட்டோர் துலாபாரம் வழிபாடு செய்தனர். தைப்பூசத்தையொட்டி கோவில் நடை மூடப்படாமல் திறந்திருந்தது.நெல்லிக்குப்பம் வேண்டவராசியம்மன் கோவில், அனுமந்தபுரம் அகோரவீரபத்ர சுவாமி கோவில், திருவடிசூலம் கருமாரியம்மன் கோவிலிலும் தைப்பூசம் மற்றும் பவுர்ணமி பூஜை நடந்தது. இக்கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில், நேற்றுமுன்தினம் அதிகாலை 3:00 மணிக்கு, மங்கள இசையுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, தைப்பூச விழா துவங்கியது. நேற்று மாலை 4:00 மணிக்கு, கோ பூஜைக்கு பிறகு, மூல விளக்கு ஏற்றும் விழா நடந்தது.குன்றத்தூர்: குன்றத்தூர் ஒன்றியத்தில் தைப்பூச விழா விமரிசையாக நடைபெற்றது. படப்பை ஆதனஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில், தைப்பூசத்தை யொட்டி, ஏழுதிரை நீக்கி ஜோதிதரிசன பெருவிழாவும் விமரிசையாக நடந்தது.
இதனைத் தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புஷ்ப அலங்காரம்குன்றத்தூர் மலைகோவிலில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியசுவாமிக்கு, காலை 5:00 மணிக்கு சிறப்பு மகா அபிஷேகமும், விபூதி காப்பு அலங்காரமும், வெள்ளிக்கவச புஷ்ப அலங்காரமும் நடந்தது. காலை 11:00 மணிக்கு ஐந்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து வந்தனர்.மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி தெப்பத்திருவிழா கடந்த 25ம் தேதி துவங்கியது. கடைசி நாளான நேற்று இரவு 7:00 மணிக்கு காமாட்சியம்மன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்தார். இரவு 8:30 மணிக்கு அன்ன வாகனத்தில் காமாட்சியம்மன் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.