திண்டுக்கல்: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் திருப்பணிக்காக அருகில் உள்ள கடைகளை தற்காலிகமாக காலி செய்ய உரிமையாளர்கள் ஒப்புதல் தெரிவித்திள்ளனர். .திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலை முழுமையாக திருப்பணி செய்து கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டுமென அனைத்து தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வந்தனர். தமிழக முதல்வரிடமும் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திண்டுக்கல் வருகை தந்த சட்டசபை மனுக்கள் குழுவினர் அபிராமி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான பணிகளுக்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் குறித்து தகவல்களை கேட்டிருந்தனர். இதையடுத்து திருப்பணிக் குழு தலைவராக வேலுசாமியும், செயலாளராக குப்புசாமியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆலோசனை கூட்டம்: திருப்பணிக்கான முதல் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் சேம்பர் ஆப் காமர்ஸ் கட்டடத்தில் நடந்தது. அபிராமி அம்மன் கோயிலை சுற்றியுள்ள 60க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். திருப்பணி நடக்க வேண்டுமா னால் முதல் கட்டமாக அதன் முழுமையான விஸ்தீரணத்தை தெரிந்து கொண்ட பின்புதான், எந்தெந்த வகைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்று முடிவு எடுக்க முடியும். எனவே அனைத்து கடைகளையும் உரிமையாளர்கள் தற்காலிகமாக காலி செய்து கொடுக்க வேண்டும். இவர்களுக்கு நகராட்சி சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.திருப்பணிக்கு பின்பு கிழக்கு பகுதியில் நிரந்தரமான கடைகளும், மேற்கு பகுதியில் கடைகள் எதுவும் இடம் பெறாமல் பார்த்துக் கொள் ளப்பட்டு சுற்றுச்சுவர் உயர்த்தி கட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.ஒரு சிலரை தவிர மற்ற அனைத்து கடை உரிமையாளர்களும் கோயில் திருப்பணிக்காக தங்கள் கடைகளை உடனடியாக காலி செய்து தருவதாக உறுதியளித்தனர். எதிர்ப்பு தெரிவித்தவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு மாதத்திற்குள் அப்பகுதியில் உள்ள கடைகளை அகற்றி விட்டு திருப்பணிக்கான பணிகளை முழு வீச்சில் துவக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.