ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் வாகன நிறுத்துமிடம்: பணிகள் தீவிரம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2026 10:07
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக திருப்பாற்கடலுக்கு எதிர்புறத்தில் 98 சென்டில் ரூ. 1.60 கோடியில் சுகாதார வளாக வசதியுடன் கூடிய வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆண்டாள் கோயிலுக்கு உள்ளூர் பக்தர்களை விட வெளிமாவட்டம், வெளி மாநிலங்கள் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். சபரிமலை மண்டல பூஜை, மார்கழி மாதங்களில் மேலும் இரு மடங்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இவ்வாறு வருபவர்களின் வாகனங்கள் கோயில் மாட வீதிகள், ரத வீதிகளில் நிறுத்தப்படுவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மாட வீதிகளில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத அளவிற்கு வாசலை அடைத்து வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனை தவிர்க்க தற்போது இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் நிதியிலிருந்து ரூ. 1.60 கோடியில் 98 சென்ட் பரப்பளவில் வாகன நிறுத்தம் இடம், ராஜபாளையம் ரோட்டில் திருப்பாற் கடலுக்கு எதிர்புறத்தில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட பஸ்கள், கார் வேன்கள் நிறுத்த முடியும். மேலும் சுகாதார வளாக வசதியும் செய்யப்படுகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.