சோமநாதர் கோயிலில் மாலைகளை பிரசாதமாக பெற்றுச் சென்ற பெண்கள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2026 08:07
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழாவில் அம்மனுக்கு விருஷபரூடராக சோமநாதர் காட்சி அளித்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த மாதம் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் விழா நாட்களின் போது அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.நேற்று முன்தினம் ஆடி தேரோட்ட விழா நடைபெற்றது.நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு அம்மன் தவக்கோலத்தில் கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து மாலை 6:30 மணிக்கு சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் விருஷபரூடராக அம்மனுக்கு காட்சியளித்தார். பின்னர் அம்மனுக்கும், சுவாமிக்கும் மாலைகள் மாற்றப்பட்டு தீபாராதனை நடந்தது.இதனைத் தொடர்ந்து ஏராளமான திருமணம் ஆகாத இளம் பெண்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டும் பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற்று குழந்தை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சுவாமிகளுக்கு சாற்றப்பட்ட மாலைகளை பிரசாதமாக பெற்று சென்றனர். இன்று சந்தன காப்பு உற்சவத்துடன் ஆடித்தபசு திருவிழா நிறைவு பெறுகிறது.