வைத்தீஸ்வரன் கோவிலில் ஆடி கார்த்திகை பூஜை; முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2026 04:08
மயிலாடுதுறை; வைத்தீஸ்வரன் கோவிலில் ஆடி கார்த்திகை பூஜை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற தையல் நாயகி சமேத வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது. நவகிரகங்களில் செவ்வாய், ஆறுபடை வீடுகளுக்கு இணையான செல்வமுத்துக்குமார சுவாமி தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் . இக்கோவிலில் இன்று ஆடி கார்த்திகை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வசேனா உடன் சண்முகர் மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து செல்வ முத்துக்குமார சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தருமபுரம் ஆதினம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடந்த சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் தருமபுரம் ஆதீன தம்பிரான் சுவாமிகள் மற்றும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருக பெருமானுக்கு அரோகரா என கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.