பதிவு செய்த நாள்
01
பிப்
2013
11:02
கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள கருவளர்ச்சேரி கிராமத்தில், காகபுஜண்டர் யாககுழுவினர் உலக நன்மைக்காக, காகபுஜண்டர் ஜீவநாடியில் அருளியபடி, அகிலாண்டேஸ்வரி சமேத அகஸ்தீஸ்வரர் கோவிலில் லோபமுத்ராதேவிக்கும் அகஸ்திய மாமுனிவருக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதையொட்டி நடந்த வேள்வியில் கர்நாடகாவில் உள்ள தலைக்காவிரியில், காவிரி உற்பத்தியாகும் இடத்தில் வெள்ள உபாதைகளை கருதி, கிழக்கு முகமாக இருந்த நந்தியை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்துள்ளனர். இதனால் இருமாநிலத்துக்கும் பஞ்சம் ஏற்பட காரணமாயிற்று. மீண்டும் காவிரியில் தேவையான நீர் கிடைக்கவும், இரண்டு மாநிலங்களும் செழிப்புடன் திகழவும் யாகம் செய்து, மீண்டும் பழையபடி நந்திபெருமானை கிழக்கு முகமாக பிரதிஷ்டை செய்ய வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் காகபுஜண்டர் யாககுழுவின் முதன்மை சீடரும், தலைவருமான ஸ்ரீகுருதியாகராஜசர்மா, பொன்னமராவதி அகஸ்தீஸ்வர சிவா சுவாமிகள் பங்கேற்றனர். மேலும் சிறப்பு யாகவேள்வியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கடந்த, 28ம் தேதி பகல், 12 மணிக்கு பகுளாதேவிக்கும், காகபுஜண்ட மகரிஷிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. குமுதவல்லிதேவி, மேனகாதேவி சமேத விஸ்வாமித்திர மகரிஷிக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது.