பதிவு செய்த நாள்
01
பிப்
2013
11:02
சிவகாசி: சிவகாசி சிவன் கோயில் தெப்பத்தில், கழிவு நீர் சேர்வதால் மாசுபட்டு, துர்நாற்றம் வீசுகிறது.இங்கு வரும் பக்தர்களும் அவதிக்குள்ளாகின்றனர். சிவகாசியில் விஸ்வநாதசாமி விசாலாட்சி அம்மன் சிவன் கோயில் உள்ளது. 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை, பெருமை வாய்ந்த இக் கோயில் முன்பகுதியில், "சிவகங்கை தெப்பம் உள்ளது. காலமாற்றத்தில் தெப்பத்திற்கு நீர்வரும் பாதைகள் அடைபட்டதால், மிக குறைந்த அளவே நீர் உள்ளது. கோயில் பயன்பாட்டிற்காக,தெப்பத்திற்குள் ஆழ்துளை குழாய் அமைத்து, நீர் உறிஞ்சி மின்பம்பு மூலம் பயன்படுத்துகின்றனர். இதனால்,கோயில் தெப்பம் நாளுக்கு நாள் மாசுபட்டு வருகிறது. கோயில் நிர்வாகத்தின் அலட்சியமான போக்காலும் இந்நிலை நீடிக்கிறது. கோயிலுக்குள் தினமும் பயன்படுத்தப்படும் அபிஷேக கழிவு நீர், கோயில் சுத்தம் செய்யும் கழிவு நீர், மழைநீர் வெளியேற வழியில்லை. தெப்பத்தின் வலது மூலையில்,6 அடி உயரத்திற்கு பெரிய கழிவுநீர் தொட்டி கட்டியுள்ளனர். கோயிலுக்குள் சேரும் கழிவுநீர் அனைத்தும், இத் தொட்டியில் சேகரமாகி, மின்பம்பு மூலம் வெளியேற்றுகின்றனர். தொட்டியில் சேகரமாகும் கழிவு நீர்,ஊழியர்களின் அலட்சியம், மின்பம்பு பழுது என பல்வேறு காரணங்களால்,முறையாக வெளியேற்றுவது இல்லை. ஒரு சில நாட்கள் மட்டுமே கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. அபிஷேக கழிவு பொருட்களும், கழிவுநீரும் தொட்டிக்குள் நாள்கணக்கில் சேகரமாகும் போது, துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் தொட்டி நிரம்பி வெளியேறும் கழிவுநீர்,தெப்பத்தின் படிவழியாக வழிந்து, தெப்பத்திற்குள் தேங்குகிறது. தெப்பத்தில் உள்ள தண்ணீர் மாசுபட்டு,தெப்பம் கழிவுநீராக மாறிவருகிறது. குறிப்பாக,தெப்பத்தையொட்டிய பைரவர், நடராஜர் சன்னிதி பகுதிகளில், பக்தர்கள் நின்று வணங்க முடியாத அளவிற்கு, துர்நாற்றம் வீசுகிறது. பைரவருக்கு மாதத்தில் தேய்பிறை அஷ்டமியில் நடத்தப்படும் சிறப்பு வழிபாட்டிற்கு வரும் பக்தர்கள், சில மணிநேரம் உட்கார்ந்து வழிபடும் போது, துர்நாற்றத்தால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். புனிதமான கோயிலில், துர்நாற்றத்தால் அவதியுறும் பக்தர்கள் சிரமத்தை போக்க,இதன் மீது கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெப்பத்திற்குள் கட்டியுள்ள கழிவுநீர் தொட்டி அகற்றப்பட்டு, குழாய் மூலம் கழிவுநீர் வெளியே கொண்டு செல்ல , பக்தர்கள் கோருகின்றனர்.