ஆழ்வார்குறிச்சி:கடையம் வில்வவனநாதர் - நித்யகல்யாணி அம்பாள் கோயில் தேரை முழுமையாக பாதுகாக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடையத்தில் ராமநதி அணைக்கு செல்லும் வழியில் வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் கடந்த 23ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலில் சித்திரை மாதத்தில் தேரோட்டம் நடைபெறும்.கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள் அனைத்தும் கடையம் ஊரின் மத்தியில் உள்ள கைலாசநாதர் பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் நடைபெறும். வில்வவனநாதர் நித்யகல்யாணி அம்பாள் கோயில் தேர் கடையம் பஸ் ஸ்டாண்டில் உள்ளது.பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. எப்போதும் போக்குவரத்து நிறைந்திருப்பதால் அதிகளவு புழுதி மற்றும் தூசிகள் காணப்படும். இந்த தூசிகள் அனைத்தும் தேரின் மீதும், சிற்பங்கள் மீதுதான் படிகிறது.
இதனால் தேர் மிகவும் பழுதாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.தற்போது ஒரு தேர் செய்வதென்றால் ஏராளமான பொருட்செலவாகும். அதுமட்டுமின்றி பழைய காலத்தை போல நவீன சிற்பங்களை கொண்ட தேர் செய்வதற்கு அதிக நாட்களாகும்.கடந்த ஆண்டு மே மாதம் 4ம் தேதி தேரோட்டம் நடந்தது. தேரோட்டம் முடிந்த பிறகு தேரின் மேல் பகுதிமட்டும் தகடுகளால் மூடப்பட்டுள்ளது. ஆனால் கீழுள்ள பகுதிகள் மூடப்படாமல் திறந்து கிடக்கிறது. தேரை முழுமையாக மூடாமல் மேற்பகுதி மட்டும் மூடி வைத்துள்ளனர்.இதனால் மழை பெய்தால் தேரின் மூடப்படாத பாகங்கள் நனையும். மேலும் தேரில் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் மழையில் நனைந்த தேர்ச் சக்கரங்கள் துருபிடிக்க அதிக வாய்ப்புள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மரத்தால் ஆன சக்கரங்கள் சரியான பாதுகாப்பு இல்லாததால் சேதமடைந்தது.தற்போது பொருத்தப்பட்டுள்ள இரும்பு சக்கரங்கள் மழையில் நனைந்து துருபிடிக்காமல் இருக்க வேண்டுமானால் ஆழ்வார்குறிச்சியில் சிவசைலபதி பரமகல்யாணி அம்பாள் தேரை முழுமையாக மூடியிருப்பது போல் இங்கேயும் முழுமையாக மூடவேண்டும் என சிவ பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறும் நேரங்களில் தூசி படிந்திருக்கும் தேரை சீரமைத்து சுத்தப்படுத்த பெரும் தொகை செலவழிக்கப்படுகிறது. முழுமையாக மூடினால் தேரை சுத்தப்படுத்த அதிக செலவு தேவைப்படாது. தேரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.