பதிவு செய்த நாள்
05
பிப்
2013
10:02
திருச்சி: தாயுமான அடிகள் முக்தி பெருவிழா, திருச்சி மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோவிலில் வெகு சிறப்பாக நடந்தது."எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே எல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே என்று, திருச்சி மலைக்கோட்டையில் எழுந்தருளியுள்ள தாயுமான ஸ்வாமிகளை பாடி பரவி, அவரின் திருப்பாதங்களில், தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தியடைந்தவர் தாயுமான அடிகள்.ஆண்டுதோறும், தாயுமான அடிகள் முக்தியடைந்த தை மாதம் விசாக நட்சத்திரத்தையொட்டி, இரண்டு நாட்கள் விழா நடப்பது வழக்கம். கோவில் நூற்றுக்கால் மண்டபத்தில், நேற்று முன்தினம் முத்தமிழ் விழா மங்கள இசையுடன் துவங்கியது. ஸ்ரீமத் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் இளம்பரிதி உள்ளிட்டோர் துவக்க விழாவில் பங்கேற்றனர். மலைக்கோட்டை பாலசுப்ரமணிய ஓதுவார் குழுவினரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, புலவர் காசி விஸ்வநாதன், இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் அம்பலவாணனின் சிறப்பு சொற்பொழிவுகள் நடந்தன. நேற்று காலை, திருக்கோவில் ஓதுவார் இன்னிசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. "முப்பெருந்தேவியர் என்ற தலைப்பில், வைத்தியநாதனும், "எங்கும் நிறை நின்ற பொருள் என்ற தலைப்பில், கணபதியும் சொற்பொழிவாற்றினர்.
குருவுக்கு மரியாதை: நேற்று மதியம், தாயுமான அடிகள், அவரது குருநாதர், மௌன குரு ஸ்வாமி விக்கிரங்களுக்கு, தேன், பால், தயிர், மஞ்சள், திரவியப்பொடி, பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபராதனை நடந்தது.அதைத்தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று குருவருள் பெற்றனர். இரவு, 8 மணியளவில், மௌனகுரு, தாயுமான அடிகளின் உற்சவ விக்கிரங்கள், புஷ்ப பல்லக்கில், ஓதுவார் பண், நாதஸ்வர இன்னிசையுடன், திருவீதியுலா வந்தது. ஏற்பாடுகளை, உதவி கமிஷனர் ஜெயப்பிரியா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.