பதிவு செய்த நாள்
05
பிப்
2013
11:02
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், சுவாமிக்கு மலர் மாலை சாற்றுவதற்காக வசூலிக்கப்பட்டு வரும் கட்டணம், பக்தர்களின் வேண்டுகோள்படி ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், 4 கோடி ரூபாய் செலவில், திருப்பணி நடந்து வருகிறது. இப்பணிகள், கடந்த ஜூலை மாதம் துவக்கப்பட்டன. இப்பணிகளை, அறநிலையத் துறை ஆணையர் தனபால், கூடுதல் ஆணையர் ராஜா, இணை ஆணையர் செந்தில்வேலன் ஆகியோர், நேற்று பார்வையிட்டனர். ஆய்விற்கு பின் ஆணையர் தனபால் கூறியதாவது: கோவிலில், வைகாசி மாதம் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏற்றவாறு பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். ஆக்கிரமிப்பு இடங்களை மீட்டு வருகிறோம். குத்தகை பாக்கி வைத்திருப்போர் நிலங்கள், ஆக்கிரமிப்பு வகையில் மீட்கப்படும்.
வெள்ளி கதவு: இக்கோவிலுக்கு சொந்தமான, 108 ஏக்கர் விவசாய நிலங்களை, முழுமையாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இக்கோவில் வெள்ளி இருப்பிற்கு ஏற்றவாறு, முதல்வரின் அனுமதியுடன் கருவறை கதவிற்கு வெள்ளிக் கதவு அமைக்கப்படும். கோவிலில், சுவாமிக்கு மலர் மாலை சாற்றுவதற்கு வசூலிக்கப்படும், 1 ரூபாய் கட்டணம், பக்தர்களின் வேண்டுகோள்படி ரத்து செய்யப்படுகிறது. பக்தர்கள் திருக்கோவிலுக்கு, திருமடத்திற்கு கட்டளை வழங்கும் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தலாம்.
புகார் செய்யலாம்...: காணிக்கைகளை உரியவரிடம் செலுத்தி, கையொப்பத்துடன் கூடிய ரசீது தவறாது பெற்றுக் கொள்ள வேண்டும். ரசீது அளிக்க மறுத்தால், புகார் தெரிவிக்கலாம் என, அலுவலக தொலைபேசி எண், செயல் அலுவலரின் கைபேசி எண், ஆகியவை தகவல் பலகையில் எழுதி வைக்கப்பட்டு உள்ளது. முறைகேடாக நடைபெறும் திருமணங்களுக்கு தடைவிதிக்கப்படும். பி.வி.களத்தூர் ராமர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். இக்கோவில் ஆதீனம், கடந்த ஆண்டு சிவபேறு பெற்றார். அந்த பொறுப்பிற்கு, தகுதி வாய்ந்த ஆதீனத்தை முறையாக நியமிக்க வேண்டும், என, பொதுமக்கள் மனு கொடுத்தனர். காஞ்சிபுரம் உதவி ஆணையர் மோகனசுந்தரம், செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியேர் உடன் இருந்தனர்.