பதிவு செய்த நாள்
05
பிப்
2013
11:02
கோவை: கோவை அருகே, கோவிலில் காணப்பட்ட சுரங்கப்பாதை போன்ற பெரிய பள்ளத்தால், பரபரப்பு ஏற்பட்டது. போத்தனூரை அடுத்த கோணவாய்க்கால்பாளையம் மூன்றாவது வீதியில், பழனியாண்டவர் கோவில் உள்ளது. நூறாண்டுகள் பழமையான இக்கோவிலில், 11 ஆண்டுகளுக்கு முன், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் வரிசையில் செல்ல வசதியாக, "கிரில் அமைக்க, கோவில் கமிட்டி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, நேற்று முன்தினம், கருவறைக்கு முன் குழி தோண்டப்பட்டது. அப்போது, தரையில் ஒரு பள்ளம் காணப்பட்டது. பணியாளர்கள் உள்ளே இறங்கி பார்த்த போது, 6 அடி அகலத்தில், கோவிலின் தெற்கு பகுதியிலுள்ள கிணறு வரை, சுரங்கம் போல சென்றது. கோவிலில் பெரிய பள்ளம் ஏற்பட்ட தகவல், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்த அப்பகுதி மக்கள், ஆச்சரியத்துடன் பள்ளத்தை பார்த்து சென்றனர். வெள்ளலூர் சுற்றுப் பகுதிகளில் உள்ள பல கோவில்கள், மிகவும் பழமையானவை. பல இடங்களில், கிரேக்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கோவில்களை, ஒன்றுடன் ஒன்று இணைக்கும் வகையில், சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருந்ததா என, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டால், இந்த பள்ளத்துக்கு விடை கிடைக்கும்.