திருமலைக் கோயில் தங்கத் தேர் ஓடு தளம் அமைக்கும் பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2013 11:02
கடையநல்லூர்: தங்கத் தேர் இயக்குவதற்காக பண்பொழி திருமலைக் கோயிலில் ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.கடையநல்லூர் அருகேயுள்ள பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் 5 கோடி ரூபாய் செலவில் மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்களின் கூட்டம் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்து தரிசனம் செய்கின்றனர்.இதன் காரணமாக கோயிலில் உண்டியல் வருமானம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அதிகரித்து வருகிறது. இந்த வருமான அதிகரிப்பால் இந்து அறநிலையத்துறையினர் திருமலை கோயில் நிர்வாகத்திற்கும் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.இதனிடையில் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் பொருட்டு தங்கத் தேர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக மரத்தினால் ஆன தேர் செய்யும் பணி முழுமையாக முடிக்கப்பட்டுள்ள நிலையில் கோயில் வளாகத்திலேயே தங்கத்தேர் நிறுத்துவதற்கான கான்கிரீட் கட்டடமும் பலலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.இதனிடையில் உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ள தங்க தேர் அமைக்கும் பணிக்கு முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம் மற்றும் உபயதாரர்கள், கட்டளைதாரர்கள், முருக பக்தர்கள் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஆலோசனையின்படி கோயில் நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படியும் இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இதனிடையில் பண்பொழி திருமலை கோயில் தங்கதேர் இயக்கப்படுவதற்காக மலைக்கோயிலில் சுற்றுப்பிரகாரம் முழுவதும் சீரமைப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.சுமார் 20 லட்சம் செலவில் இதற்கான பணிகள் மேற்கொள்ள பூமி பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து தற்போது தங்கத்தேர் ஓடுதளம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. இப்பணிகளுடன் திருமலைக் கோயிலில் உள்ள காம்பவுண்ட் சுவர்களும் அதற்கேற்றார் போல் உயர்த்தி கட்டப்பட்டு வருகிறது. தங்கதேர் ஓடு தளம் அமைக்கும் பணிகள் கோயில் நிர்வாகத்தின் மேற்பார்வையில் வேகமாக நடந்து வரும் நிலையில் மரத்தினால் செய்யப்பட்டுள்ள தங்க தேரில் தங்க தகடுகள் பொருத்தும் பணி விரைவில் நடக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.இப்பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதால் திருமலைக்குமரனின் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வரும் வைகாசி விசாகரத்திற்குள் தங்கதேர் திருமலைக்கோயிலில் வெள்ளோட்டம் காணப்படலாம் என்ற நம்பிக்கையும் பக்தர்கள் மத்தியில் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.