பதிவு செய்த நாள்
05
பிப்
2013
11:02
தஞ்சாவூர்: சிந்து சமவெளி நாகரீகம் தொடர்பான எச்சங்கள் ஏறத்தாழ, 2,500 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, என இந்திய தொல்லியல் துறை புதுடில்லி வட்ட கண்காணிப்பு தொல்லியலாளர் பிரபாகர் தெரிவித்தார்.தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலை கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை சார்பில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. பல்கலை கல்வெட்டியல் மற்றும் தொல்லியல்த்துறை தலைவர் செல்வகுமார் வரவேற்றார். இந்திய தொல்லியல் துறை புதுடில்லி வட்ட கண்காணிப்பு தொல்லியலாளர் பிரபாகர் பேசியதாவது:சிந்து சமவெளி நாகரீகம் கி.மு. 2,600 முதல், 1,900 வரை உட்பட்டது என, பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். ஏறத்தாழ, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த நாகரீகம் மேற்கு உத்திரபிரதேசம், குஜராத், பலுசிஸ்தான் என, 15 லட்சம் சதுர அடி பரப்பளவில் பரவி இருந்தது. இதன் எச்சங்கள், 2,500 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இந்த நாகரிகம் குறித்த ஆய்வு, 19ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டாலும், 1920க்கு பிறகுதான் வெளியுலகுக்கு தெரியவந்தது. இந்த நாகரீகம் முற்கால ஹரப்பா, பிற்கால ஹரப்பா என, இரு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. ஆனால் கி.மு. 2,600 முதல், 1,900 வரை, 700 ஆண்டுகள் தான், இது முழுமையான நாகரீகமாக இருந்துள்ளது. அதன்பிறகு இந்த நாகரீகத்தில் சரிவு ஏற்பட்டது. ஹரப்பா பண்பாட்டில் திட்டமிட்ட மாநகரம், நகரம் போன்றவை இருந்துள்ளன. ஹரப்பா, மொகஞ்சதரோ, கன்வேரிவாலா, ராக்கிஹார்கி, சோலிஸ்தான் போன்றவை அப்போதே மாநகரங்களாக இருந்துள்ளன.இந்த நாகரீகத்துடன் எகிப்து, மெசபடோமியா போன்ற நாகரீகங்கள் வணிகம் உள்ளிட்ட தொடர்புகள் இருந்துள்ளன. இந்த நாகரிக தொடக்கத்தில் மண்பாண்டம் பயன்பாடு இல்லை. காலப்போக்கில் மண்பாண்டம், செம்பு உள்ளிட்ட பயன்பாடுகள் வந்தன. தாமிர உலோகத்தில் செய்யப்பட்ட கருவிகள், ஆயுதங்கள், பிளேடு, தராசு, வளையல்கள், நீளமான பாசிமணிகள், தட்டுகள், ஜாடி, அலங்கார மண்பாண்டம் போன்றவை தயாரிக்கப்பட்டுள்ளன.இந்த நாகரீகத்தில் கற்களை துளையிட பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எந்தவகை உலோகத்தில் தயாரிக்கப்பட்டது என்பது, இதுவரை கண்டறிய முடியவில்லை. இது இயற்கையான பொருளா?, மூலப்பொருளை கொண்டு தயாரிக்கப்பட்டதா? என்ற விவாதம் முடிவுக்கு வரவில்லை. இந்த துளையிடும் கருவியை எர்னஸ்டேட் என்பவர் கண்டறிந்தார். அதனால் அதற்கு அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஹரப்பாவில் எழுத்துக்கள் கிடைத்துள்ளன. இவையெல்லாம் என்ன எழுத்துக்கள் என கண்டறிய ஆட்கள் இல்லை. அதனால் அவற்றின் பெருமைகளை புரிந்து கொள்ள முடியவில்லை.இவ்வாறு அவர் பேசினார்.