Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வள்ளலார் பகுதி-2 வள்ளலார் பகுதி-2
முதல் பக்கம் » வள்ளலார்
வள்ளலார் பகுதி-1
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

08 பிப்
2011
17:53

வள்ளலார் தோற்றம்: கலியுகாதி 4925 ஆம் ஆண்டு, சுபானு ஆண்டு, புரட்டாசித் திங்கள் 21 ஆம் நாள்(5.10.1823) ஞாயிற்றுக்கிழமை 29.55 நாழிகையில் மாலை 5.55 மணிக்கு சின்னம்மையாருக்கு ஐந்தாவது மகவாகத் திருவருட் பிரகாச வள்ளலார் தோன்றினார்.

வள்ளல் பெருமானின் ஜாதகத்தை ஓர் அன்பர் கணித்து பலன் குறித்துள்ளதை, வள்ளல் பெருமானின் திருவருட்பிரகாச வள்ளலார் திவ்ய சரித்திரம் என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த ஜாதகமுடையோன் சிரஞ்சீவி இவன் உயிர் போவதில்லை. உலகு அனைத்தும் வள்ளலாய் வாழ்வான். தைரியவான். கனதனங்கருதான் சுழுத்தி நாட்டமுடையான். உலகுயிரின் பால் பேரிரக் கங்கொண்டவன் பத்தாவது ஆண்டில் ஒன்றில் காதலனாவான். கற்பமும் உலகத்தைத் திருத்தும் குணமும் சக்தியால் உணர்வான். முப்பதாம் ஆண்டில் பிறப்பு இறப்பு அற்ற நிலையடைவான். நாற்பதாம் ஆண்டில் கைவல்ய ஞானம் பெறுவான். ஞான சித்தியால் ஐம்பதில் பொன்னுடலாகிப் பொலிவான். இவன் ஞானவுடல் எடுத்த பெரியோன். மந்திரம், யோகம், வைத்தியம், வாதம், நூல் நுணுக்கம்- சிந்தையில் எண்ணிய உடனே எய்துவான் என்பதாம்.

கடலூர் அருகிலுள்ள திருமருதூர் கிராமத்தில் வசித்த ராமையா பிள்ளையின் ஆறாவது மனைவி சின்னம்மை. தனது முந்தைய ஐந்து மனைவிகளும் தொடர்ந்து இறந்ததால் ஆறாவதாக சின்னம்மையை மணம் முடித்திருந்தார். இவர்களுக்கு சபாபதி, பரசுராமன், சுந்தரம்மாள், உண்ணாமலை என்ற நான்கு பிள்ளைகள் பிறந்தனர். ராமையா பிள்ளையும், சின்னம்மையும் சிறந்த சிவபக்தர்கள். தினமும் வீட்டிற்கு ஒரு சிவனடியாரை அழைத்து வந்து அவருக்கு அன்னதானம் செய் வதை வழக்கமாக கொணடிருந்தனர். ஒருநாள் மதியவேளையில் சிவனடியார் ஒருவர் புலித்தோல் உடுத்தி ராமையா பிள்ளையின் வீட்டிற்கு வந்தார். அப்போது ராமையாபிள்ளை வெளியில் சென்றிருந்தார். சின்னம்மையார், அவரை வீட்டிற்குள் அழைத்து வந்து, விருந்து படைத்தார். வயிறும், மனமும் நிரம்பப் பெற்ற சிவனடியார் சின்னம்மையிடம், உனக்கு ஒரு புதல்வன் பிறப்பான். தெய்வ மகனான அவன் இறைவனுக்கு நிகரானவனாக இருப்பான் என்று வாழ்த்திவிட்டு விபூதியும் தந்து சென்று விட்டார்.விபூதியை நெற்றியில் வைத்து, சிறிதுவாயிலும் போட்ட சின்னம்மை, சற்றுநேரத்தில் மயக்கமடைந்தார். வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய ராமையாபிள்ளை, மனைவி மயக்கமடைந்திருந்ததை கண்டு அதிர்ந்தார். அவரை எழுப்பி, என்ன நடந்தது ? என்று விசாரித்தார். சிவனடியார் வந்த விஷயத்தையும், அவர் தனக்கு குழந்தை பிறக்கும் என்று சொன்னதையும் மிரட்சியுடனும், சந்தோஷத்தடனும் சொன்னார். ராமையா பிள்ளையும் மகிழ்ந்தார். சில நாட்கள் கழித்து சின்னம்மையின் வயிற்றில் இறைவன் ஜோதி வடிவமாக புகுந்தார். பத்து மாதங்கள் கருவை சுமந்த சின்னம்மை, 1823, புரட்டாசி 21 (அக்டோபர் 5)ஞாயிற்றுக்கிழமையன்று, சித்திரை நட்சத்திரத்தில் ஒரு தெய்வத்திருமகனை பெற்றெடுத்தார். அக்குழந்தை பிறந்ததால் திருமருதூர் கிராமமே அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தது. ராமையாபிள்ளையும், அவர் மனைவி சின்னம்மையும் மகிழ்ச்சிக் கடலின் எல்லைக்கே சென்றனர். குழந்தை பிறந்த நேரத்தில் பசுமையுடன் இருந்த அவ்வூர், மேலும் செழிப்பானது.அக்குழந்தைக்கு ராமலிங்கம் என்று பெயர் வைத்தனர்.

ராமலிங்கத்திற்கு ஐந்து வயதானபோது, அவரது பெற்றோர் அவரைக் கூட்டிக்கொண்டு சிதம்பரம் தில்லையம்பலம் கோயிலுக்கு சென்றனர். கோயிலில் நடராஜருக்கு பூஜைகள் நடந்து கொண்டிருந்தது. மக்கள் நடராஜரின் அழகில் லயித்து அவரை வணங்கிக் கொண்டிருந்தனர். கோயில் முழுதும் நிசப்தமாக இருக்க, அரங்கமே அதிரும் வகையில் ஒரு சிரிப்பொலி கேட்டது. அனைவரும் சிரிப்பு சத்தம் கேட்ட திசையைப் பார்க்க அங்கு சிறுவனாக இருந்த ராமலிங்கம், நடராஜரைப் பார்த்து பலமாக சிரித்து கொண்டிருந்தார். நடராஜரைக் கண்டு சிரிக்கும் இக்குழந்தை ஞானக்குழந்தை என அங்கிருந்த பக்தர்களில் சிலர் கூறினர். சிலர் அவரைத் தொட்டு வணங்கிவிட்டு சென்றனர். சிதம்பரம் கோயிலுக்கு சென்று வந்த சில நாட்களிலேயே ராமையா பிள்ளை இறந்து போனார். ராமலிங்கத்தின் குடும்பம் வறுமையில் வாடியது. குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்ட சின்னம்மை, அவர்களை அழைத்துக் கொண்டு சென்னை சென்றார். அங்கு வித்வான் சபாபதி முதலியாரிடம், தனது மூத்த மகன் சபாபதிக்கு கல்வி கற்பிக்கும்படி கேட்டுக்கொண்டாள். சபாபதி சிறந்த தமிழாசிரியர். அவரிடம் பயின்ற சபாபதி, குறுகிய காலத்திலேயே கற்றுத் தேர்ந்து, புராண விரிவுரையாளரானார். குடும்பம் வறுமையில் இருந்து சற்று மீண்டது. சபாபதி, தன் தம்பி ராமலிங்கத்தை பெரிய அளவில் படிக்க வைத்து அவரை முன்னேற வைக்க வேண்டும் என விரும்பினார். ஆனால், ராமலிங்கத்திற்கோ கல்வியில் நாட்டம் செல்ல வில்லை. ஆன்மிகத்தில் ஈடுபாடு காட்டினார். அவரை நல்வழிப்படுத்துவதற்காக, தன் குருநாதரான வித்வான் சபாபதி முதலியாரிடம் கல்வி பயில அனுப்பி வைத்தார் சபாபதி.ராமலிங்கம் அங்கும் சரியாக படிக்கவில்லை. வகுப்பு முடிந்ததும் கந்தகோட்டம் சென்று முருகனை வணங்குவார். ஒருநாள் ராமலிங்கத்தைக் கவனிப்பதற்காக கந்தகோட்டம் முருகன் கோயிலுக்குச் சென்றார் சபாபதி முதலியார். முருகன் சன்னதி முன்பு அமர்ந்திருந்த ராமலிங்கம், ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறுவு கலவாமை வேண்டும், என்று மனமுருக பாடிக்கொண்டிருந்தார். பெரும் பொருளுடனான அப்பாடலை ராமலிங்கம் பாடுவதைக் கண்ட சபாபதி முதலியார் மெய்மறந்து நின்று கண்ணீரே வடித்துவிட்டார். ராமலிங்கத்தின் அண்ணன் சபாபதியிடம், உனது தம்பி ஒரு தெய்வப்பிறவி. அவனுக்கு சாதாரண உலகியல் கல்வி தேவையில்லை. எனவே, இனிமேலும் அவனுக்கு கற்பிக்க தன்னால் முடியாது, என்று சொல்லிவிட்டார்.

2. தருமமிகு சென்னையில் சுடர்விடுதல்(1823-1855)
வள்ளல் பெருமானின் இளமைப் பருவம், முதல் அவர் சென்னை வாழ்வை நீத்து ஞான வாழ்வை மேற்கொள்ள திருச்சிற்றம்பலம் நோக்கிச் செல்ல முயன்றது வரை சுமார் 33 ஆண்டுகால சென்னை வாழ்க்கையை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரித்துப் பார்க்கலாம். ஒன்று, 1823-1835 முடிய சுமார் 12 ஆண்டுகால வாழ்க்கையை கந்த கோட்டப் பகுதி என்றும், மற்றொன்று 1835 முதல் 1855 முடிய சுமார் 21 ஆண்டு கால வாழ்க்கையை திருவொற்றியூர்ப் பகுதிய என்றும் பகுக்கலாம்.

1. கந்தகோட்டப் பகுதி(1823-1835)
அறிவியல் முன்னேற்றம் அடைந்து வருகின்ற இந்நாளில் குழந்தைகளின் விருப்பத்திற்கும், மனநிலைக்கும் ஏற்றபடி பயிலும் முறைகளை, பாடத்திட்டங்களை அமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். எந்த ஒரு காரணத்துக்காகவும், விருப்பமில்லாத பாடங்களைக் கட்டாயமாகத் திணிக்கக் கூடாதென்றும் அவ்விதம் கட்டாயப்படுத்தினால் படிப்பின் மீது முற்றிலுமாக வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்பது அவர்கள் கருத்து. இத்தகைய கட்டாயக் கல்வியை அந்தக் காலத்திலேயே விரும்பாதவர்தான் இராமலிங்க அடிகள். பள்ளிக்கூடம் செல்வதுண்டு ஆனால் படிப்பது கிடையாது. என்றாலும் அவரைப்போன்ற படிக்காத மேதை எவரும் இல்லை. இராமலிங்கத்துக்கு வயது ஐந்து, இராமலிங்கத்தின் அண்ணன் சபாபதி பிள்ளை நல்ல தமிழ் அறிஞர். அவர் காஞ்சிபுரம், மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் முறையாகத் தமிழ் பயின்று நல்ல புலமை பெற்றவர், புராணச் சொற்பொழிவுகள் செய்வதிலும் வல்லவர். எனவே, அவர் தன் அருமைத் தம்பியாகிய இராமலிங்கத்தை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்ற ஆசை நிரம்ப ஏற்பட்டது.

ஐந்து வயதானதும் இராமலிங்கத்தைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தார் அண்ணன் சபாபதி. சில நேரங்களில் அவரே ஆசிரியராகவும் அமர்ந்து பாடம் கற்பிக்கவும் செய்வார். ஆனால் இராமலிங்கமோ மிகவும் பயபக்தியுடன் படிப்பதுபோல நடந்து கொண்டாரே தவிர உண்மையில் பள்ளிப்பாடம் படிக்கவில்லை. அவர் பள்ளிக்குச் சரியாகச் செல்வதும் கிடையாது. முறையான ஏட்டுக் கல்வி இல்லையென்றாலும் பரவாயில்லை. முறையான தமிழ்ப் பயிற்சியாவது இருந்தால் பிற்காலத்தில் தன்னைப் போலப் புராணச் சொற்பொழிவாவது செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று கருதிய அண்ணன் சபாபதி. காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடம் தம்பியைப் படிக்க அனுப்பி வைத்தார். இராமலிங்கம் அங்கும் ஒழுங்காகப் படிக்கவில்லை. பள்ளிப் படிப்பில் விருப்பமில்லாமல் ஊர் சுற்றி வரும் தம்பியால் சபாபதிக்குப் பெரிய கவலை ஏற்பட்டது. எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய எவ்விதச் சிந்தனையும் செய்யாமல் சோம்பேறியாகத் திரிந்து வரும் தம்பியின் மீது அடிக்கடி கோபம் ஏற்பட்டது. உருப்படாமல் போகின்றானே என்ற கோபத்தில் ஒருநாள் இராமலிங்கத்தை நோக்கி இனி இந்த வீட்டுப்படி ஏறாதே. இனிமேல் உனக்கு இங்கு சாப்பாடு எதுவும் கிடையாது. வெளியே போ என்று துரத்திவிட்டார் அண்ணன் சபாபதி.

எனினும் சபாபதியின் மனைவி பாப்பாத்தியம்மாள் இராமலிங்கத்திடம் அன்பாகப் பழகுவார் பாசமுடன் இருப்பார். அவருக்கும் இராமலிங்கத்தின் மனப்போக்கு பிடிக்கவில்லை. இருந்தாலும் மைத்துனர் பசியுடன் இருப்பதைப் பார்க்கச் சகியாமல் கணவனுக்குத் தெரியாமல் அவ்வப்போது சாப்பாடு போட்டு கவனித்து வந்தார். அன்று, ஒருநாள் இராமலிங்கத்தின் தந்தையார் நினைவு நாள். அந்நாளில் வழக்கமாகச் சந்நியாசிகளுக்கும் உறவினர்களுக்கும் வயிராற உணவு அளிப்பதுண்டு. அன்றைக்கும் அது போலவே எல்லாருக்கும் சாப்பாடு போடப்பட்டது. ஆயினும் பாப்பாத்தி அம்மாளுக்கு மனது மிகவும் வேதனை அடைந்தது. ஏனென்றால், ஊரில் உள்ள எல்லாரும் தம் வீட்டில் வந்து சாப்பிட்டு மகிழ்வோடு இருக்கும் தருணத்தில் நம் வீட்டுப் பிள்ளை இராமலிங்கம் பசியுடன் எங்கு அலைகின்றானோ என்று மனம் வருந்தினார். அன்று மாலை எதிர்பார்த்த படி வீட்டின் பின்புறமாக இராமலிங்கம் வந்தார். அவரைக் கண்ட அண்ணியார் ஆறிப்போன உணவைப் பரிமாறிச் சாப்பிடச் சொன்னார். அண்ணியின் கண் கலங்கியிருப்பதைக் கண்ட இராமலிங்கம் அண்ணி ஏன் தங்களின் கண்கள் கலங்குகின்றன? என்று வினவினார். அதற்கு பாப்பாத்தி அம்மாள் இராமலிங்கத்தை நோக்கி தம்பி நீ உன் அண்ணன் விருப்பத்திற்கிணங்கி, கல்வி பயின்று வீட்டிலேயே தங்கியிருந்தால் எல்லாருடனும் சேர்ந்து சாப்பிட்டிருக்கலாம். அப்படி இல்லாததனால் இப்படி ஆறிய சோறு சாப்பிடும்படி ஆகிவிட்டது பார்த்தாயா? என்று மனவருத்தத்தோடு கூறினார்.

தாயைவிட மிகவும் அன்பு காட்டித் தனக்குச் சோறு போட்ட அண்ணியின் அன்புக் கட்டளையை ஏற்றுக் கொண்டு இனிமேல் ஒழுங்காகப் படிப்பதாக வாக்குறுதி தந்தார் இராமலிங்கம். தமக்குத் தனியே ஒரு அறையினை ஒதுக்கித் தரும்படியும் வேண்டுகோள் வைத்தார். பொழுது விடிந்ததும் பாப்பாத்தி அம்மாள் தம் கணவரிடம் நடந்தவற்றைக் கூறி மேல் மாடியிலுள்ள அறையினைத் தம்பி இராமலிங்கத்திற்குத் தனியாகப் படிப்பதற்கென்று ஒதுக்கித் தந்தார்கள். மறுநாள் முதல் இராமலிங்கம் அந்த மாடியின் அறையில் தனியே இருந்து படிக்கத் தொடங்கினார். என்ன படிப்பு? அண்ணனும் அண்ணியும் விரும்பிய பிழைப்புக்கான படிப்பா என்றால் அதுதான் இல்லை. அவர் படித்தது ஆன்மீகக் கல்வி என்று சொல்லப்படும் இறைவனை அறியும் கல்வி. அந்த அறையின் ஒரு நிலைக் கண்ணாடியும், திருவாசகமும், திருவிளக்கும் மட்டுமே இருந்தன. திருவிளக்கு ஏற்றி அவ்வறையில் தியானம் செய்து கொண்டும் திருவாசகம் படித்துக் கொண்டும் தனித்திருக்கலானார். பசித்திரு, தனித்திரு, விழித்திரு(மூன்று சொற்களின் முதலெழுத்துக்களைக் சேர்த்தால் பதவி என வரும்) என்ற பின்னாளில் உபதேசித்தபடி முன்கூட்டியே தனித்து இருந்து வரலானார்.

ஒருநாள் தமக்கென உள்ள தனியறையில் உள்ள கண்ணாடிக்கு மாலை சூட்டி, பழம் படைத்து, கற்பூரம் காட்டி, கண் இமை கொட்டாது அதனையே உற்று நோக்கினார். அக்கண்ணாடியில் சிறிது நேரத்திற்கெல்லாம் திருத்தணிகைக் கந்தப் பெருமானின் திருவுருவம் தெரியலாயிற்று. அத்தருணத்தில் .

சீர்கொண்ட தெய்வ வதனங்க ளாறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும் அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும் என் கண்ணுற்றதே

எனப் பலவகையான பாமாலைகளைப் புனைந்து அன்று முதல் பாடலானார். அப்போது இராமலிங்கத்திற்கு வயது ஒன்பது. சிறுவர் இராமலிங்கம் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமலேயே எல்லா உண்மைகளையும் புரிந்து கொள்ளும் அபூர்வ சக்தி பெற்றவராக விளங்கினார். இப்படிப்பட்ட அபூர்வ சக்தி பெற்றவர்களை நிராதார யோகி என்பார்கள். திருஞானசம்பந்தர், மெய்கண்ட தேவர், குமரகுருபரர் போன்ற ஞானிகள் சிறுவயதிலேயே இத்தகைய அபூர்வ சக்திபெற்ற நிராதார யோகிகளாக இருந்தவர்கள் என்பதனால் சிறுவயதிலேயே அத்தகைய அபூர்வ சக்தி இராமலிங்கத்திடம் காணப்பட்டதால் அவரிடம் ஒரு தனி தெய்வீக ஒளி காணப்பட்டது. மாடியறையில் மணிக்கணக்கில் அப்படி என்னதான் படிக்கிறான் என்ற சந்தேகத்தில் சபாபதியார், இராமலிங்கம் அறைக்குப் போய் பார்த்தார். தம்பியோ பக்திப் பரவசத்தில் மூழ்கியிருந்தார். பக்தி வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் உதவும் என்கிற சந்தேகம் அவர் உள்ளத்தில் ஏற்பட்டது. இருந்தாலும் பரவாயில்லை. வீணாகக் கெட்டழியாமல் புத்தியைப் பக்தி மார்க்கத்திலாவது செலுத்துகிறானே என்று சபாபதி ஆறுதலடைந்தார். முறைப்படி பள்ளிப்படிப்பு, கல்விப் பயிற்சி என்று இப்படிப் போயிருந்தால் பிற்காலத்தில் அவர் பெற்றிருந்த புலமையையும் ஞானத்தையும் அவர் பெற முடியாமல் ஏதாவது கல்வித்துறையில் பொருள் ஈட்டும் அளவில்தான் வாழ்நாள் கழித்திருக்கக் கூடும்.

ஆனால், இராமலிங்கம் பெற்ற கல்வியோ, கற்றவர்க்கும், கல்லாதவர்க்கும் களிப்பைத் தரும் சத்தியக் கல்வி, அதுதான் சாகாத பெருவாழ்வுக்கு மாமருந்தாய் அமைந்த அருள் ஞானக் கல்வியாகும். அவருக்கு மட்டுமல்லாமல் அவர் உலகத்தவருக்கு அருளிய சாகாக் கல்வியாகும். ஓதாது உணர்ந்து அருட்பெருஞ்சோதியாக ஒளி ஓங்கி வீசிய வள்ளல் பெருமான் அகச்சான்றாகக் குறிப்பிடுவதாவது.

வேண்டார் உளரோநின் அருளை
மேலோரன் றிக்கீ ழோரும்
ஈண்டார் வதற்குவேண் டினரால்
இன்று புதிதோநான் வேண்டல்
தூண்டா விளக்கே திருப் பொதுவில்
சோதிமணியே ஆறொடு மூன்று
ஆண்டாவ திலேமுன் னென்னை
ஆண்டாய் கருணை அளித் தீரே
(6+3= ஒன்பது) (திருவருட்பா-வாதனைக்கழிவு-7)
மேலும் அருள்விளக்கமாலை (23 இல்)

ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக் கேட்க எனைத்தான்
ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச் செய் உறவே

என்றும் அருட்பெருஞ்சோதி அகவலில்.

ஓதாதுணர்ந்திட ஒளிஅளித் தெனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ் ஜோதி
என்றும் பாடியிருப்பதன் மூலம் வள்ளல் இராமலிங்க அடிகள் தமது ஒன்பதாவது வயதிலேயே ஓதாமல் உணரும் அபூர்வ சக்தியைப் பெற்றிருந்தார் என்பது உறுதியாகிறது.

அ) திருப்புமுனை
சென்னையில், முத்தியாலுப் பேட்டையில் வாரந்தோறும், சோமு செட்டியார் வீட்டில் சபாபதிப்பிள்ளை புராணச் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார். ஒருநாள் அவருக்கு உடல் நலம் குன்றி இருந்ததால் சொற்பொழிவிற்குச் செல்ல இயலவில்லை. நடராஜப் பெருமானார் திருவுருவம் பொன்னால் புதிதாக எழுதப்பெற்று, அதனைப் பிரதிஷ்டை செய்து அன்று திருஞான சம்பந்தார் பெருமான் சரித்திரம் சொல்ல ஏற்பாடு செய்திருந்தார் சோமுசெட்டியார். மிக முக்கியமான அந்த விழாவில் கலந்து கொண்டு தம்முடைய புராணப் பிரசங்கத்தைச் செய்ய முடியவில்லையே என்ற கவலை ஒரு புறமும், அதனால் ஏற்படும் பொருள் இழப்பு ஒருபுறமும் அவருக்கு வருத்தத்தைத் தந்தது. சோமு செட்டியாரும், மற்றவர்களும் தம்மைப் பற்றித் தவறாக எண்ணி, ஏமாற்றம் அடைவார்களே என்று கவலையுற்றார்.

இக்கட்டான இந்நிலையில் என்ன செய்வதென்று தன் மனைவியிடம் யோசனை கேட்டார். ஏங்க நம்ம தம்பி இராமலிங்கத்தைச் செட்டியார் வீட்டுக்கு அனுப்பி உங்களுக்கு நலமில்லை என்கிற செய்தியைச் சொல்லிவிட்டு அப்படியே இரண்டொரு பாடல்களையும் படித்துவிட்டு வரச் சொல்லலாமே என்று பாப்பாத்தி அம்மாள் யோசனை கூறினார். இராமலிங்கத்தை அழைத்து விவரத்தைக் கூறினார்கள். அவரும் அதற்கு உடன்பட்டு சோமு செட்டியார் வீட்டை நோக்கி நடைபோட்டார் இளவல் இராமலிங்கம். பிரசங்கம் செய்ய சபாபதியார் வரவில்லை என்றதும் சோமு செட்டியாருக்கும் மற்றவர்கட்கும் பெரும் குறையாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது. மனநிறைவு கொள்ளாத நிலையில் இராமலிங்கத்தை இரண்டொரு பாடல்களை மட்டும் பாட அனுமதி அளித்தார் சோமு செட்டியார். பெரியவர்கள் நிறைந்த அந்தக் கூட்டத்தில் பாடத் தனக்கு அனுமதி கிடைத்ததற்கு நன்றி கூறிவிட்டு இராமலிங்கம் சொற்பொழிவைத் தொடங்கினார். இரவு மணி ஒன்பது ஆயிற்று சிறுவன் இராமலிங்கம், இவன் என்ன பாடப் போகின்றான் என்று அலட்சியமாக இருந்தனர் அங்கு கூடியிருந்தோர். நேரம் ஆக ஆக அரைத் தூக்கத்தில் இருந்தவர்கள் கூட சுறுசுறுப்பாய் நிமிர்ந்து உட்கார்ந்தார்கள். சிறுவர் இராமலிங்கம் வெறும் பாடல்களை மட்டும் பாடாமல் அவருடைய அண்ணன் சொற்பொழிவு செய்ய வேண்டிய பெரிய புராணத்தைப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.

இரவு மணி பன்னிரண்டை நெருங்கியது. உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன் என்று தொடங்கும் பெரிய புராணப் பாடலின் முதல் அடிக்குப் பக்திச் சுவை நனிசொட்டச் சொட்ட சுந்தரத் தமிழில் இன்னிசையுடன் இராமலிங்கம் அளித்த விளக்கம் அங்குள்ள ஆன்மிக அன்பர்களைப் பெரிதும் ஈர்த்தது. தொடக்கத்தில் மிகவும் அலட்சியமாக இருந்த சோமு செட்டியாரும் இராமலிங்கத்தைப் பயபக்தியோடு பாராட்டினார். இனிமேல் இவரே சொற்பொழிவு செய்ய வேண்டும் என்று அங்கு கூடியிருந்தவர்களும் சொல்லவே, சோமு செட்டியாரும் அதற்கு உடன்பட்டார்.

சோமு செட்டியார் வீட்டில் தம்பி நிகழ்த்திய சொற்பொழிவு அற்புதமாக இருந்தது என்று மற்றவர்கள் புகழ்ந்து சொல்லக் கேட்டதும் சபாபதிக்கு ஒரே ஆச்சர்யமாக இருந்தது. தம்முடைய தம்பிக்கு உண்மையிலேயே இவ்வளவு திறமை இருக்கிறதா என்பதையும் நேரில் அறிய ஆசைப்பட்டார் அண்ணன் சபாபதி. அடுத்த நாள் தம்பி இராமலிங்கத்தைச் சொற்பொழிவுக்கு அனுப்பி விட்டு அவருக்குத் தெரியாமல் தனியாக ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு தம்பியின் சொற்பொழிவைக் கேட்டார். இவன் உருப்படுவானா? என்று எண்ணிய அண்ணன் தன் தம்பியின் இசைப் பாக்களையும் அதற்கு அவர் அளித்த பொருள் விளக்கங்களையும் கேட்டுப் பெரிதும் பெருமை அடைந்தார். நல்ல தம்பி என்று பெயர் எடுப்பான் என்ற நம்பிக்கை மேலிட, தம் மனைவியிடம் சென்று, நான் இதுவரை நமது இராமலிங்கத்தைத் தம்பியென நினைத்திருந்தேன் அதனால் பல தவறுகளும் இழைத்தேன். தணிகைக் குமரனே தம்பியாய் அவதரித்திருக்கிறார். இன்றல்லவோ அவ்வுண்மையை உள்ளவாறு உணர்ந்தேன் என்று பற்பலவாக வியந்தும் வருந்தியும் கூறித் தமது தம்பியாரைத் தெய்வமாகக் கொண்டு சீர்பெற்றுய்யுமாறு பணித்தார். அன்று முதல் அண்ணனும் அண்ணியும் இராமலிங்கத்திடம் அளவற்ற அன்புடனும் பக்தியுடனும் பழகினர். இந்நிகழ்ச்சிதான், இராமலிங்க அடிகளின் ஞான வாழ்க்கை வெளி உலகிற்குத் தெரிய பெரியதொரு வாய்ப்பான திருப்புமுனையாகக் கருக்கொண்டு தழைத்தது!

ஆ). ஞான வாழ்க்கை

ஒன்பது வயதிற்குள் பெரிய புராணத்திற்குப் பெருவிளக்கம் சொல்லும் பேராற்றலைச் சிறுவர் இராமலிங்கம் பெற்றது எப்படி? அவர் பள்ளிக்குச் சென்று படிக்கவில்லை. குரு ஒருவரிடம் முறையாக அமர்ந்து கற்றதில்லை. வேதங்களை விரிவாய் அறிந்ததுமில்லை. இப்படிப்பட்ட அவருக்கு எப்படி இத்தகைய ஆற்றல் வந்தது என்பதை பின்னாளில் அவரே அது பற்றிக் கூறுகிறார்.

கற்றதுநின் னிடத்தேபின் கேட்டதுநின் னிடத்தே
கண்டதுநின் னிடத்தேஉட் கொண்டதுநின் னிடத்தே
பெற்றதுநின் னிடத்தேஇன் புற்றதுநின் னிடத்தே
பெரியதவம் புரிந்தேன்என் பெற்றஅதி சயமே! (3044 அன்புமாலை 16)

என்று இறைவனே ஞானகுருவாக இருந்ததும்.
அறியாத பருவத்தே என்னை வலிந்து அழைத்தே
ஆடல்செயும் திருவடிக்கே பாடல்செயப் பணித்தார் (5813 அனுபவமாலை 100)

என்று கவிதைபுனையும் ஆற்றலை அளித்ததையும் எண்ணிப் பெருமிதம் அடைகிறார். கந்தகோட்டத்து முருகனிடம் ஒரு அலாதியான ஈடுபாடு அவருக்கிருந்தது கந்தகோட்டம் பழமையான கோயில் என்று கூற முடியாது, வேளூர் மாரி செட்டியாரும். கந்தப்ப ஆசாரியாரும் திருப்போரூர் சென்று வழிப்பட்டு வந்த பொழுது வழியில் புற்று ஒன்றில் கண்ட மருகனது திருவுருவத்தை (சாலிவாகன சகம் 1595 பிரமாதி ஆண்டு)எடுத்து வந்து வழிபட்ட சிறுகோயிலே கந்தகோட்டம் என்று கூறுவர். அந்நாளில் பள்ளிக்குச் செல்லாமல், வீட்டிலும் தங்காமல் அலைந்து கொண்டிருந்த இராமலிங்கத்திற்குப் புகலிடம் தந்தவரே கந்தகோட்டத்து முருகப்பெருமான்தான்.

ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம் மொன்று பேசுவார்
உறவுகலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துவனர்
தலம் ஓங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே! (8-1-1 தெய்வமணி மாலை 8)

இந்த வழிபாட்டு முறையைத் தம்முடைய ஒன்பதாவது வயதிலேயே வகுத்துக் கொண்டவர் வள்ளலார். கந்த கோட்டத்தில் பாடப்பெற்ற தெய்வமணி மாலையும் கந்தர் சரணப்பத்தும் முதன்முதலாகப் பாடப்பெற்ற திருவருட்பா பாடல்களாகும்.

2. திருவொற்றியூர்ப் பகுதி: (1835-1855)

அந்நாளில் செழித்தோங்கிச் சிறந்திருந்த சென்னைக்குச் சிறப்பு சேர்த்த ஒற்றியூர் திருத்தலத்தின் பெருமையை தொழுவூர் வேலாயுதனார் பின்வருமாறு குறிப்பிடுவார். செல்வ மிகுந்தோங்கும் சென்னைக்கு அணித்தாயும், ஆளுடை நம்பி, ஆளுடைய பிள்ளையார். ஆளுடைய அரசு எனும் மூவர்களின் பாடல் கொண்ட முதுமையுடயதாயும் கந்தர மூர்த்தி சுவாமிகளைச் சங்கிலி நாச்சியார் மணவாளராகக் கொண்ட மாண்புடையதாயும். பட்டினத்தடிகள் முக்தி பெற்ற தலமாயும் மாணிக்கத்தியாகர், இளமை தந்த தியாகர், எழுத்தறிபெருமானார், வியாகரண ஈசுவரர் முதலாய மூர்த்திகளையுடையதாயும் விளங்குவது திருவொற்றியூர் திருத்தலம். இராமலிங்க அடிகளாரின் 12வது வயதில், திருவொற்றியூர் சிவபெருமான் தியாகேசரையும், அவரின் அம்மையான வடிவுடை மாணிக்கத் தம்மனையும், அடிக்கடி வணங்குவது வழக்கம். வடிவுடை மாணிக்க மாலை என்னும் இராமலிங்க அடிகளின் பாடல் சிறப்பானதாகும். திருவொற்றியூர் கோயிலில் நூற்றுக்கணக்கான பாடல்களை அடிகளார் பாடியுள்ளார். குடும்ப கோஷம் குருதரிசனப் படலத்திலும், பிற ஒற்றியூர்ப் பதிகங்களிலும் அடிகளார் ஒற்றியூர் அழகை வருணனை செய்துள்ளார்.

அ) மணல்கள் இலிங்கங்களாயின:
திருவொற்றியூர் கடற்கரையிலுள்ள பட்டினத்தார் திருக்கோயிலுக்கு பெருமானார் தவறாமல் சென்று வருவது வழக்கம். இங்கு மணமெல்லாம் சிவலிங்கமாகக் காணும் பேறுபெற்றார் பெருமான். ஒருநாள் அங்கிருந்த அம்மையார் ஒருவர் பெருமானை வணங்கி நின்றார். பெருமான் பிடிமணலை அள்ளி அவ்வம்மையாரின் கையில் கொடுத்தார். அவ்வம்மையாரின் கையில் அம்மணல்கள் சிவலிங்கங்களாக மாறி காட்சி அளித்தனவாம்.

ஆ) உத்தம மனிதர்:
இராமலிங்க அடிகள் இயற்றிய அருட்பெருஞ்ஜோதி அகவலின் இறுதியில்,
உலகினில் உயிர்களுக்கு உறுமிடை யூறெலாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க
சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ் ஜோதி

என்று முடியும்..... இதில் உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை என்று இறைவன் பெருமானுக்கு இளம்வயதிலேயே நிர்வாணித் துறவி வடிவில் வரமளித்ததாகக் கூட கருத வாய்ப்புள்ளது. அப்படியொரு நிகழ்வு வள்ளலாரின் சிறுவயதில் ஏற்பட்டது. திருவொற்றியூர் தேரடித் தெருவில், ஒரு வீட்டுத் திண்ணையில் நிர்வாணத் துறவி அமர்ந்து கொண்டு, தெருவில் வருவோர் போவோரையெல்லாம் கழுதை போகிறது, நாய் போகிறது, மாடு போகிறது என்று விலங்குகளின் பெயரால் உரத்த குரலில் வசை பாடுவது வழக்கம். ஒருநாள் வள்ளல் பெருமான் தேரடித் தெருவழியாக வரவேண்டியிருந்தது. அவரைக் கண்ட நிர்வாணத் துறவி இதோ உத்தம மனிதன் வருகிறார். இவர்தான் உத்தமர் இவர்தான் மனிதர் என்று மிகவும் பரவசப்பட்டு சத்தமாகக் கூறி எழுந்து நின்று தம் உடம்பையும் கைகளால் மூடி மறைத்து நின்றார். வள்ளல் பெருமான் அவரை அழைத்து நிர்வாணம் என்றால் என்ன? என்பதற்கான விளக்கத்தைக் கூறினார். அதன்பின் அத்துறவியார் அவ்விடத்தை விட்டு நீங்கி வேறெங்கோ போய்விட்டார்.

இ) ஆடம்பர உலகம்.
உலக போகங்களில் மனம் படியாமல் திருவருளை வழுத்தும் இன்ப உரையே தமது திருவிளையாடலாகக் கொண்டார். சிறுபோது முதல் இத்தியாதி விடயங்களைத் துச்சமாகக் கொண்ட பெரியோன் என்றும், தீவிரமாகவும் செம்பாகவும் பாடும் செந்நாப் புலவரென்றும், அடக்கமே பொருளெனத் தேர்ந்த அருளாளரென்றும் பலர் பிள்ளையவர்கள் பால் அதிசயித்த உணர்விணராய்ப் பழகி வந்தனர். வெள்ளை ஆடை முழங்காலுக்கு மேல் தரித்து ஞான தீபமொத்திலகும் தேகம் தெரிய வொட்டாது மூடிக்கொண்டு பிறர்க்குத் தன்பால் இச்சை செல்ல வொட்டாதபடி முக்காடிட்டு மறைத்த மேனியுடையராய் வீதிகளில் ஓரமாய்ச் செல்வர். திண்ணையிலாவது உயர்ந்த ஆசனத்திலாவது காலின் மேல் கால் போட்டாவது உட்கார்ந்து வீண் வழக்குப்பேச ஒருவருடனும் ஒருப்பட்டார். உயிரிரக்கமும் ஆன்மவுருக்கமும் கொண்டொழுகுவார். சிறுபோது முதல் சுத்த சமத்துவ ஆகாரமே சிற்றுணவாகக் கொண்டிருந்தார்.

அடிகளாரின் இளமைத் தோற்றமும் பண்பும் மேற்கண்டவாறு அமைந்திருந்தது என காரணப்பட்டு ச.மு கந்தசாமி பிள்ளை தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். ஒருநாள் சென்னையில், சபாபதி முதலியார் என்பவர் அவர் வீட்டுத் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு வற்புறுத்தி அழைத்ததன் பேரில் அடிகளார் அங்கு சென்றார். அந்தத் திருமண வீட்டில் படாடோபமாகவும்,. பெரிய செல்வந்தர்களாக வருபவர்களுக்கு மட்டுமே நல்ல உபசரிப்பும் வரவேற்பும் இருந்தது. பகட்டும், தலைப்பாகையும் இல்லாமல், மிகச் சாதாரணமாகச் சென்ற அடிகளாரை வாயிற் காவலன் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. உள்ளம் நொந்துபோன அடிகளார் எதிர்வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்து கொண்டார். இதனை அறிந்த முதலியாரும் அவரது சொந்தக்காரர்களும் நேரில் ஓடிவந்து அடிகளாரிடம் மன்னிப்புக் கேட்டு அடிகளாரை திருமண நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி பெருமான் பாடியதாவது:

சோடில்லை மேல்வெள்ளைச் சொக்காயில்லை நல்ல சோமனில்லைப்
பாடில்லை கையில் பணமில்லை தேகப் பருமனில்லை
வீடில்லை யாதொரு வீறாப்புமில்லை விவாகமது
நாடில்லை நீ நெஞ்சமே எந்தவாறினி நண்ணுவையோ

அடிகளார் பணத்தின் மீதோ பிற பொருள்களின் மீதோ விருப்பு கொண்டதில்லை. அதன் மீது வெறுப்பு கொண்டதனால் அப்பொருளுடையவர்களிடம் அணுகுவதையும் அவர்கள் வெறுத்தார்கள். அவ்வுண்மையினைப் பல பாடல்களில் காணலாம். அவற்றுள் ஒன்று

பணத்திலே சிறிதும் ஆசையொன் றிலைநான்
படைத்தஅப் பணங்களைப் பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன்
கேணியி லெறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை
யெறிகலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக்
கண்டனன் இனிச் சொல்வ தென்னே (பிள்ளைச் சிறுவிண்ணப்பம்-11)

பிறிதொரு நாள், கந்தசாமி முதலியார் என்பவர் தன்னுடைய வறுமை நிலைமையைப் போக்க வேண்டி, அடிகளாருக்குத் தெரிந்த ஒரு சில செல்வந்தர்களுக்கு பரிந்துரைக் கடிதம் கொடுத்தருளும்படி வேண்டினார். அதற்கு அடிகளார் அவரை நோக்கி,

ஏட்டாலுங் கேளய லென்பாரைநான் சிரித் தென்னை வெட்டிப்
போட்டாலும் வேறிடங் கேளேன்என் னாணைப் புறம்விடுத்துக்
கேட்டாலும் என்னை உடையானி டஞ்சென்று கேட்பனென்றே
நீட்டாலும் வாயுரைப் பட்டாலுந் சொல்லி நிறுத்துவனே

என்னும் பாடலை மொழிந்து, நான் எதற்கும் எல்லாம் வல்லவராகிய அருட்பெருஞ்ஜோதி என்னும் பாடலை மொழிந்து, நாம் எதற்கும் எல்லாம் வல்லவராகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வேண்டுவமல்லது. இவ்வுலகமாந்தரை மதித்து ஏற்கமாட்டோம். நீரும் அவ்வழியே பற்றி ஆண்டவரையே வேண்டினால் அவனருளால் உமது வறுமை சூரியனைக் கண்ட பனிபோல் விலகிவிடும் என்று உபதேசம் கூறி அனுப்பினார்கள்.

இராமலிங்க அடிகளார் சிறுவயது முதல் உலக போகங்களைத் துச்சமாகக் கொண்டு, அடக்கமே பொருளாகக் கொண்டு, அடக்கத்தின் சின்னமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு கீழ்க்கண்ட பாடல்களே சான்றுகளாகும்.

கையுற வீசி நடப்பதை நாணிக்
கைகளைக் கட்டியே நடந்தேன்
மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால்
மெய்யெலா மையகோ மறைத்தேன்
வையமேற் பிறர்தம் கோலமு நடையும்
வண்ணமு மண்ணலே சிறிதும்
பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லை
பார்பனேல் பயமிகப் படைப்பேன் (பிள்ளைப் பெரு விண்ணப்பம்-52)

காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்
காலின் மேல் கால் வைக்கப் பயந்தேன்
பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து
நன்குறக் களித்துக் கால் கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை
நினைக்கவும் பயந்தனன் எந்தாய் (பிள்ளைப் பெரு விண்ணப்பம்-67)

வள்ளல் அணைமேல் இருக்கவும் பயந்தேன்
காலின் மேல் கால் வைக்கப் பயந்தேன்
பட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன்
பஞ்சணை படுக்கவும் பயந்தேன்
நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து
நன்குறக் களித்துக் கால் கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை
நினைக்கவும் பயந்தனன் எந்தாய் (பிள்ளைப் பெரு விண்ணப்பம்- 67)

வள்ளல் பெருமான் சிறு வயது முதற்கொண்டே மிக எளிமையாகவும், உலகியல் இன்பங்களில் நாட்டமற்றவராகவும், பொருளாசை, ஆடம்பரம் இவற்றில் விருப்பமற்றவராகவும், அமரருள் உய்க்கும் அடக்கம் பெற்றவராகக் காட்சியளித்தார் என்பதற்கு இப்படி ஏராளமான சான்றுகள் உள்ளன.

ஈ) இலக்கியப் பணிகள் தொடக்கம்:
நான் உரைக்கும் வார்த்தை எலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

என்று பாடிய வள்ளல் பெருமான் தமது ஒன்பதாவது வயது முதல் முப்பத்து ஐந்தாவது வயது வரையில் அதாவது 1832-ம் ஆண்டு முதல் 1858 ஆம் ஆண்டு வரையில் தாம் மேற்கொண்ட நெறியில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றிப் பாடியுள்ளார். சென்னையில் கந்தகோட்டத்துக் கந்தவேளைப் பற்றியும், திருத்தணி முருகனைப் பற்றியும், திருவொற்றியூர்த் தியாகேசனைப் பற்றியும், வடிவுடையம்மனைப் பற்றியும் பாடியுள்ள பாடல்கள் இளமைக்கால இலக்கிய உருவாக்கம் என்று கூட கூறலாம்.

திரு. டி.வி. ஜி. செட்டி ஆங்கிலத்தில் எழுதிய ஸ்ரீ சிதம்பரம் ராமலிங்க சுவாமி- அவரது வாழ்க்கை, (1935) என்ற நூலில் வள்ளலாரின் பாடல்கள் பற்றிக் குறிப்பிட்டிருப்பதன் தமிழாக்கம் வருமாறு:

திராவிட கலாச்சாரத்தில் அண்மையில் தோன்றியவர்களில் ஒருவரும், விலை மதிப்பற்ற அதனுடைய மணிகளின் ஒருவரும் ஆக விளங்கிய இராமலிங்க சுவாமிகள், முனிவரும், கவிஞரும், தத்துவ ஞானியும் ஆவார். இதயத்தையும் உணர்வையும் நேரடியாகப் பிரதிபலிக்கக் கூடிய, உயிர் வாழ்க்கையின் அடித்தளத்திலிருந்து எழுந்த பாடல்களைப் பாடிய பெருமான் சில ஆண்டுகட்கு முன்பு நம்மிடையே வாழ்ந்தவராவார். தமிழ் இனத்தின் தேசீய கருவூலத்தின் பகுதியாக பாடல்களைப் பாடி அருளினார். துன்பமும் இன்பமும் கலந்த காலத்தில் அந்தப் பாடல்கள் நம்மிடம் வந்திருக்கின்றன. பாமர மக்கள் யாவரும் இப்பாடல்களை தம் அங்கமாக வைத்துப் பாடுகின்ற உண்மையின் அடிப்படையே. இப்பாடல்கள் நம் வாழ்க்கையின் அங்கமாகிவிட்டன என்பதற்கு உறுதியான நிரூபணமாகும்.

1) மனுமுறை கண்ட வாசகம்( நூலாசிரியர்)
இராமலிங்க அடிகளின் அபாரசக்தி காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாருக்கு நன்றாகத் தெரியும். அதனால் அவர் பெரிய புராணத்தில் விளக்கப்பட்டுள்ள மனு என்னும் அரசருடைய வரலாற்றைச் சிறுவர்கள் படிப்பதற்கு ஏற்ற முறையில் ஓர் உரைநடை நூலாக எழுதித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவருடைய வேண்டுகோளின்படி செறிந்த செந்தமிழில் நவரசம் ததும்ப அருமையான தமிழ் உரை நடைநூலை எழுதித் தந்தார் வள்ளல் பெருமான். மொழிவளமும், புலமை நலமும் பொருந்திய இந்நூலில் பெருமானின் கவித்துவமிக்க உரைநடைபகுதி உதாரணத்திற்கு ஒன்று.

மனுநீதிச் சோழனின் ஒப்புயர்வில்லா அரசாட்சியிலே, பூவே பறிபடுவது, புனலே சிறைபடுவது. காற்றே அலைபடுவது. கல்லே கடினமுடையது. மாவே வடுப்படுவது; வாழையே குழைபடுவது; வண்டே மதுவுண்பது; பந்தே அடிபடுவது; பரியே கட்டுண்பதுந; மாதிரிடையே குறைபடுவது; தரித்திரமே தரித்திரப்படுவது; துக்கமே துக்கப்படுவது பொய்யே பொய்படுவது.

மனு நீதி சோழன் தன் தேரை நடத்திப் பசுங் கன்றைக் கொன்றான் என்று அறிந்து பதறிய மனு, இந்தப் பிறப்பில் என் புத்தி அறிந்து நான் ஒரு தீங்கும் செய்ததில்லையே! இந்தப் பிறப்பில் இல்லாவிட்டாலும், முற்பிறப்பில்

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப் போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
...................................................................
...................................................................
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மகிழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்று வேதனைப்படும் இதயத்திலிருந்து எழுவதுபோல சுமார் 43 அறிவுரைகளை அற்புதமாகப் படைத்துள்ளார் வள்ளலார். சிறுவர்களுக்கான இலக்கியத்தை உரைநடையில் படைத்த முன்னோடி வள்ளலார் என்றால் அது மிகையில்லை.

2) தொண்டை மண்டல சதகம்:
அப்பொழுது வாழ்ந்த புலவர்களுக்குள் ஒரு பெரிய தர்க்கவாதம் ஏற்பட்டது. என்னவென்றால், தொண்டைமண்டலமா? தொண்டமண்டலமா? இதில் எது சரியானது என்பதை விளக்க வேண்டும் என்று வேண்டினர். அடிகளார் அதற்கு, தொல்காப்பியச் சூத்திரத்தை எடுத்துக்காட்டி பெயர்ப் பாகுபாடு, இலக்கணங்களும் புணர்ச்சி இலக்கணங்களும் கூறியதோடு வேறு சில இலக்கியங்களிலும் உள்ள சான்றுகளை எடுத்துக் கூறியுள்ளார். திருவலிதாயம், திருமுல்லைவாயில் முதலிய இடங்களில் உள்ள கோயில்களின் கல்வெட்டுகளிலும் இதற்கான ஆதாரங்களை எடுத்துக் காட்டினார். அடிகளாரின் இவ்விளக்கத்தை ஏற்ற புலவர்கள் இதனைப் புத்தக வடிவில் வழங்க வேண்டுமென்று வேண்டினர். இவ்விலக்கண விளக்கம் அடிகளாரால் 1854 இல் எழுதப்பட்டு தொண்ட மண்டல சதகம் என்னும் பெயரில் காஞ்சிபுரம் மகாவித்வான் சபாபதி முதலியாரும். புரசை-அஷ்டாவதானம் சபாபதி முதலியாரும் சாற்றுக் கவியளிக்க, கொண்ணூர் ஐயாசாமி முதலியார் விருப்பப்படி வெளியிடப்பட்டது.

3) ஒழிவிலொடுக்கம்(உரையாசிரியர்)
கண்ணுடைய வள்ளல் என்பார் எழுதிய ஞான நூல் ஒழிவிலொடுக்கம் இந்நூலின் சிறப்பு பாயிரத்திற்கு வள்ளல் பெருமான் ஒரு அரிய பேருரை எழுதி அதனை. ஒழிவிலொடுக்கம் சிறப்புப் பாயிர விருத்தி உரை என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இவ்வுரையில், அருணகிரிநாதர் பாடல், கல்லாடம், சித்தியார், ஆளுடைய பிள்ளையார் புராணம், திருக்குறள் தொல்காப்பியம் முதலிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளது அடிகளார் சிறந்த உரையாசிரியர் என்பதை அன்றே புலப்படுத்தியுள்ளது.

4) சின்மய தீபிகை(பதிப்பாசிரியர்)
சின்மய தீபிகை என்னும் அரிய நூலினை அடிகளார் பார்வையிட்டு 1851 ஆம் ஆண்டு பரிசோதித்து வெளியிட்டுள்ளார். இந்நூலின் பதிப்பாசிரியர் என்னும் பெருமை அடிகளாருக்கு உண்டு. மேலும் சிவநேச வெண்பா, நெஞ்சறிவுறுத்தல், மகாதேவமாலை, இங்கிதமாலை முதலிய விழுமிய கருத்துக்களை உடைய பாமாலைகளையும் முதல், இரண்டு, மூன்றாந்திருமுறைகளையும் பாடியருளினார்.

நிட்டாநுபூதி சிதம்பர புராணம், வேதநாயகம் பிள்ளையின் நீதி நூல் ஆகியவற்றுக்குச் சாற்றுக் கவிகளும் அடிகளார் அளித்துள்ளார்.

5) தாய்மொழி-தந்தை மொழி

தாயைப் பழித்தாலும், தமிழைப் பழித்தவனை விடேன் என்பது நம்முடைய முன்னோர் கூறிய மொழி இது. மொழிப்பற்று என்பது தலைவர்கள், அறிஞர்கள், ஞானிகள், துறவிகள் என் எல்லாரிடமும் காணப்படும் பற்று, மொழிப்பற்று இல்லாத மனிதன் முழு மனிதனாக மாட்டான். மகாத்மாக்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு சமயம் திபெத் நாட்டின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான தலைலாமா, காந்தியடிகளுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தைப் பார்த்த காந்தியடிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. காரணம் அது முழுக்க முழுக்க தீபெத்திய மொழியில் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்ட காந்தியின் சீடர்கள் மிகவும் ஆத்திரப்பட்டார்கள். தலைலாமாவின் மொழிவெறியைப் பரிகாசம் செய்தார்கள். மிகவும் அமைதியாக இருந்த காந்தி, பிறகு ஒரு கடிதம் தலைலாமாவுக்கு எழுதினார் முழுக்க முழுக்க குஜராத்தி மொழியில். மகாத்மா காந்தியின் மொழிப்பற்றை நாம் தவறாக எடைபோட முடியாது. அக்காலத்தில் வாழ்ந்த இறையடியார்களான மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், திருமூலர் முதல் அண்மையில் வாழ்ந்த அருணகிரிநாதர் குமரகுருபரர், தாயுமானவர், சிவப்பிரகாசர் போன்ற பெருமக்களெல்லாம் தமிழ் மீது கொண்டிருந்த பற்று அளவிடற்கரியது. அந்த அருளாளர்கள் வரிசையில்.

பற்றுந் செழுந்தமிழால் பழகுகின்றோர் செய்த பெரும்
குற்றங் குணமாகக் கொள்ளுங் குணக்கடலே

எனப்பாடி, சிற்சபையில் நடிக்கின்றாய் செந்தமிழில் வளர்க்கின்றாய் என மொழிந்த வள்ளல் பெருமான் சாகாக் கல்வியைத் தரும்மொழி தமிழ் ஒன்றே ஆகும் என்று உறுதிபட உரைத்துள்ளார்.

அந்நாளில் வாழ்ந்த சங்கராசாரிய சுவாமிகளுடன் அடிகள் அளவளாவ நேரிட்டபோது, சுவாமிகள் வடமொழியே எல்லா மொழிக்கும் தாய் என்று கூறிய பொழுது அதனை ஏற்க மறுத்து, வடமொழியே (சமஸ்கிருதம்) அனைத்து மொழிக்கும் அன்னையாயின. அருந்தமிழே அனைத்திற்கும் அப்பனாகும் எனக்கூறி அதன் சிறப்பை விரிவாக விளக்கினாராம்.

தமிழ் என்னும் சொல்லுக்குக் கீழ்க்கண்டவாறு உரை தந்துள்ளது தத்துவ முறையிலானதாகும்.

தமிழ் என்பது த் அ ம் இ ழ் என்பது ஐந்து அலகு நிலையுடைத்து

த்-ம்-ழ், -ஜடசித்கலை
அ,இ - சித்கலை
அ -அகண்டாகார சித்தை விளக்கும் ஓங்கார பஞ்சாக்கரத்துள் பதிநிலை அக்கரமாம்.
இ- பதியை விட்டு நீங்காத சித்தை விளக்கும் வியவகாரத்தால் அனந்தாகார வியஷ்டி பேதங் காட்டும் ஜீவசித்கலை அக்ரமாம்.

பதி சிதாத்ம கலைகளுக் காதாரமாகி உயிரினுக்குடலையொத்துக் குறிக்கப்படும் த், ம், ழ் எழுத்துக்களுக்கு உரை

த்-ஏழாவது மெய்
ம்- பத்தாவது மெய்
ழ்-15 வது இயற்கை உண்மைச் சிற்ப்பியல் அக்கரமாம்.

ஐந்துலகு நிலையும் உபய கலைநிலையும் மூன்று மெய்நிலையும் அமைந்துள்ளதும், சம்புப க்ஷத்தாரால் அனாதியாய்- சுத்த சித்தாந்த ஆரிஷ ரீதிப்படி கடவுள் அருளாணையால் கற்பிக்கப்பட்டதும், எப்பாஷைகளுக்கும் பிதுர்பாஷை என்று அன்றோர்களால் கொண்டாடப்பட்டதும், இனிமை என்று நிருத்தம் சித்திக்கப் பெற்றுள்ளதுமான தமிழ் என்னும் இயற்கை உண்மைச் சிறப்பியல் மொழிக்குச் சுத்த சித்தாந்த பதஉரை

............  ............  .....................
............  ............  .....................
............  உரை கூறிப்போந்த சுத்த சித்தாந்த ஆரிடரீத முப்பதவுரைப் பொழிப்பு: மருளியற்கை மல இருளைப் பரிபாக சக்தியால் அருளொளியாக்கி, அதற்குள்ளீடான சிதாத்ம சிற்கலா சத்தி என்னும் சுத்த ஆன்மாவானது, தகர, ககன, நடன அருட்பெருஞ்ஜோதி என்னுஞ் சுத்த சிவானந்த பூரணத்தை சுத்த மோனாதீத வியலால் அனுபவிக்கும் இயற்கை உண்மையே தமிழ் என்னும் சொற்பொருள் சுட்டினவாறு காண்க.

இதன் கருத்து யாதெனில், தமிழ்ப் பாஷையே அதிசுலபமாகச் சுத்த சிவானுபூதியைக் கொடுக்குமென்பதாம். தமிழ் மொழியின் மேன்மையை வடமொழியோடு ஒப்பிட்டுக் காட்டி, அதன் சிறப்பையும் எடுத்துரைத்து, கடவுளை அடைய எளிமையான மொழி தமிழே என்றார் வள்ளலார். அவரது பாடல்கள் எளிமையானவை, வளமானவை, இயற்றமிழ் போலவே இசைத் தமிழையும் அவர் வளர்த்தார்.

கடவுள் வழிபாட்டின் போது இசைக் கருவிகளைக் கொண்டு ஆரவாரம் செய்து இராகத்திலேயே மூழ்கிவிடுவதால் கடவுளை ஒன்றி வழிபடுவதற்குத் தடையாக இவ்விசைக் கருவிகள் உள்ளன. எனவே ஒவ்வொருவரும் தாமே ஒன்றிப்பாடி, இணங்கி இசைந்து நெருக்குருகி இறைவனிடம் விண்ணப்பித்து வழிபட வேண்டும் என்பது வள்ளலாரின் கருத்து. ஆகவே அதற்கேற்ப அவரது பாடல்கள் அமைந்திருந்தன.

தோத்திரப் பாடல்கள் மட்டுமின்றி, கீர்த்தனைகள், கும்மி, கண்ணி, சிந்து, தெம்மாங்கு இப்படிப் பலதரப்பட்ட இசை வடிவங்களின் பாடித் தமிழுக்கு வளங்கூட்டி, அதன் வாயிலாகத் தெய்வீகத்தையும் ஊட்டியவர் அடிகளார்.

பல்வேறு வகைப்பட்ட இசைப் பாடல்கள் மூலம் இசைத் தமிழையும், சொற்சுவைமிக்க உரைநடைகளால் இயற்றமிழையும் இலக்கியச் சொற்பொழிவுகள் மூலம் மேடைத் தமிழையும் வள்ளல் பெருமான் வளர்த்ததோடு, பண்டிதர்கள் மட்டுமே பாடக்கூடிய தமிழிசைப் பாக்களை பாமரர்களும் பாடும்படி இலக்கியப் பாதை அமைத்துத் தந்த பாவலர் வள்ளலார் என்றால் அது மிகையில்லை.

6. வைணவ சமய நெறி

வைணவ சமய நெறியுடைய சிலர் அடிகளாரிடம் வந்து வைணவ சமயம் சார்ந்து பொருள்களைப் பற்றிய உபந்நியாசமொன்றைச் செய்தருளும்படி வேண்டினர். அவர்களுடைய விருப்பத்திற்கிணங்க, குரு பரம்பரை பிரபாவம் என்னும் அரிய நூலினை விளக்கிப் பலவகை வைணவப் பிரபந்தங்களின் மேற்கோள்களைச் சுட்டிக்காட்டினார். நம் அடிகளார் வைசசமயம் மட்டுமின்றி வைணவமும் அறிந்தவர் என்பதை இதன்மூலம் நிலை நாட்டினார்.

மயர்வற மதி நலம் அருளப் பெற்ற ஆழ்வார் பெருமக்களாலே மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களுள், தொண்டை நாட்டுத் திருப்பதிகள் 22. அவற்றுள் ஒன்றுதான் திருஎவ்வுள் என வழங்கப்பட்ட இன்றைய திருவள்ளுர் ஆகும். இத்திருத்தலத்துப் பெருமாள் வீரராகவரைப் போற்றி ஐந்து பாடல்களை வீரராகவர் போற்றிப் பஞ்சகம் என்ற தலைப்பில் பாடியள்ளார் நம் அடிகளார் அதில் இரண்டாவது வரும் பாடல்:
பாண்டவர் தூத னாகப்
பலித்தருள் பரனே போற்றி
நீண்டவன் என்ன வேதம்
நிகழ்த்துமா நிதியே போற்றி
தூண்டலில் லாமல் ஓங்கும்
சோதிநல் விளக்கே போற்றி
வேண்டவர் எவ்வு ளூர்வாழ்
வீரரா கவனே போற்றி

அடிகளார், திருக்கண்ணமங்கை என்னும் திருத்தலம் சென்றும் வழிபட்டுள்ளார். வைணவ சமயச் சார்பில் வீரராகவர் போற்றித் திருப்பஞ்சகம் இராமநாமப் பதிகம் இராமநாம சங்கீர்த்தனம் திருக்கண்ணமங்கைத் துதி என மொத்தம் பதினேழு பாசுரங்களைப் பாடியுள்ளார்.

உ) தொழுவூர் வேலாயுத முதலியார் சீடரானது:
சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய செந்தமிழ் வித்வான் தொழுவூர் வேலாயுத முதலியார் மிகக் கடின நடையில் நூறு பாடல்களை இயற்றி அப்பாடல்கள் பழைய பாடல்களாக இருக்கலாம் என்றும் கூறி வள்ளலாரிடம் கொடுத்தார். அப்பாடல்களைப் படித்துப் பார்த்த வள்ளலார், அப்பா! இப்பாடல்கள் பொருள் இலக்கணம் அறிய கற்றுக்குட்டி பாடியவை: சங்கப் புலவர் பாடியவையல்ல; அவர்கள் பாடியிருப்பரேல் இவ்வளவு பிழைகள் இரா என்று கூறினார் வள்ளலாரின் அறிவுத்திறனை வியந்து தம்மை மன்னித்து ஆட்கொண்டருள வேண்டும் என்ற வேண்டவே, வள்ளலாரும் அவரைத் தம் தலைமை மாணாக்கராக ஏற்றுக் கொண்டார் அடிகளின் திருவருளால் பெரும்புகழ் பெற்ற தொழுவூர் வேலாயுதனாருக்கு உபய கலாநிதிப் பெரும்புலவர் என்ற பட்டமும் அளித்து பெருமைப்படுத்தினார் வள்ளலார். சீடன் ஆனேன். இவர் எங்கே ஞானதீட்சை பெற்றார் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை சில ஆண்டுகளுக்குப் பின் பல சீடர்கள் அவரைச் சுற்றியிருந்தனர். இவர் ஒரு பெரும் ரசவாதி (உலோகங்களைத் தங்கமாக மாற்றும் திறன்) புலால் உண்போரை கூட சைவர்களாக மாற்றும் சக்தி படைத்திருந்தார். இவரது பார்வையே புலால் உண்ணும் விருப்பத்தை அழிக்கவல்லது. மற்ற மனிதர்களின் மனங்களைப் படிக்கும் வியத்தகு சக்தியும் பெற்றிருந்தார். தொழுவூர் வேலாயுதனார் போலவே, நரசிங்கபுரம் வீராசாமி முதலியார் பொன்னேரி சுந்தரம்பிள்ளை, ஸ்ரீனிவாச வரதாச்சாரியார், ஞானசுந்தர ஐயா, ஆறுமுக ஐயா போன்ற பலரும் அடிகளாரின் மாணவர்களானார்கள்.

ஊ) இளந்துறவியின் திருமணம்:
பொண்ணாசை மண்ணாசை பொன்னாசை, புகழாசை என்று சொல்லப்படுகின்ற நான்குவிதமான ஆசைகளையும் இளமைப் பருவத்தில் இயல்பாகவே வெறுத்த ஞானியாக விளங்கிய நம் அடிகளாருக்கு ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது. அதுதான் அவருடைய திருமண ஏற்பாடு. தம் வாழ்நாள் முழுமையும் இறைவனுக்குத் தொண்டு புரிவதிலேயே அர்ப்பணிக்க வேண்டும் என்ற பெருநோக்கில் வாழ்நதவர் இராமலிங்க அடிகள். அதனால் குடும்பம், பந்தம், பாசம் என்ற மாயவலைகளில் சிக்காமல் தனித்தே இறையன்பராய் இருக்க விரும்பினார். ஆனால் அவர் நினைத்தது ஒன்று, நடந்தது மற்றொன்று. தாயார், தமையனார், அண்ணியார், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லாருமே அடிகளாருக்குத் திருமணம் செய்து வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆயினும் பலன் ஒன்றுமே இல்லை. கடைசியாக, நம் இராலிங்கர் பெருமதிப்பு வைத்திருந்த சிவயோகி ஒருவர் மூலமாக வற்புறுத்திச் சொல்லவே, சிவயோகியாரின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் அடிகளார் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தார். இராலிங்கர் அவருடைய சொந்த அக்காள் உண்ணாமுலை அம்மையாரின் அருமை மகளான தனக்கோட்டியம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். குடும்ப வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்று இளமைக் கனவுகளுடன் இல்லற வாழ்வில் ஈடுபட்ட தனக்கோட்டியம்மாளுக்கு, அது பேரிடியாக அமையுமென்று எதிர் பார்க்கவில்லை. முதல்நாளே அவர் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இல்வாழ்க்கையை இனிமையாகத் தொடங்க வேண்டிய அன்றைய முதல் இரவில், அடிகளார் திருவாசகம் படிக்க, தனக்கோட்டியம்மாள் அதனைக் கேட்டுப் பக்திப் பரவத்தில் மூழ்கிப் போனார்.

சராசரி மனிதர்களைப் போல், சம்சார சாகரத்தில் மிதந்தாடும் சிறிய தோணிதான் இவர் என்று எண்ணியிருந்தவர்கள் எல்லாம் வியக்கும்படி அனைவரையும் கரைசேர்க்கும் அருள்பெற்ற தோணியானார் அந்த ஞானி. பெயரளவில்தான் அவர் திருமணம் நடந்தது. அடிகளாரை வற்புறுத்தித் திருமணம் நடத்தி வைத்தவர்கள் கூட அவர்கள் தவற்றையும் அறியாமையையும் எண்ணி வேதனைப் பட்டார்கள். மனத்துறவு பூண்ட அடிகள் இல்லறத்தில் ஈடுபட்டார்கள். மனத்துறவு என்பதைப் பிள்ளைப் பெருவிண்ணப்பத்தில் அருளியுள்ளார்.

முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ
தெரிந்திலேன் மோகமே லின்றித்
தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் ஒருத்தியைக்
கைதொடச் சார்ந்தேன்
குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக்
கலப்பிலேன் மற்றிது குறித்தே
பனித்தனன் நினைக்கும்தோறும் உள் உடைந்தேன்
பகர்வதென் எந்தைநீ அறிவாய் (ஆறாந்திருமுறை பிள்ளைப் பெருவிண்ணப்பம்-43)

எ) சென்னை வாழ்கையில் சில அற்புத நிகழ்வுகள்

இராமலிங்க அடிகள் இளமையிலேயே ஓதாமல் உணர்ந்தது! கந்த கோட்டச் சண்முகனை வழிபட்டது! கண்ணாடியில் திருத்தணி முருகனைக் கண்டது! தமையனாருக்குப் புராணப் பாடல்களைப் படித்து உதவியது! எடுத்த எடுப்பிலேயே இணையற்ற சிறப்புடன் சொற்பொழிவாற்றியது! கந்தகோட்டத்து சண்முகனையும், திருத்தணி முருகனையும் பற்றிப் பாடியது!

இந்த அற்புத நிகழ்ச்சிகள் எல்லாமே அடிகளாரின் ஒன்பதாவது வயதிலிருந்து பன்னிரண்டாம் வயதிற்குள் நடந்தவையாகும் என்று ஊரன் அடிகள் சொல்கிறார் அவர் சொல்வது மிகப் பொருத்தமாகவே இருக்கிறது.

முருகன் அருள் பெற்ற சிறுவர் இராமலிங்கம் நிராதாரயோகியானதும், ஓதாது உணர்ந்ததும் யாப்பிலக்கணம் கற்காமல் கவிதை புனைந்தது, மூவிரண்டு வயதில் இறைவன் அடிகளாரைத் தம் தொண்டராக ஆட்கொண்டு அருளியதும் இவை எல்லாமே அடிகளார் 12 ஆண்டுகளை ய்துவதற்குள் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் என்பதை ஜோதி வழியில் வள்ளலார் என்ற நூலில் திருவண்மீகநாதன் ஆதாரங்களோடு நிறுவியுள்ளார். இவை தவிர வள்ளல் பெருமான் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சில அற்புத நிகழ்வுகளைக் காண்போம்.

1) பாம்பென்றால் படையும் நடுங்கும்
பேய், பிசாசு, பூதம் போன்றவற்றிற்குப் பயப்படாதவர்கள் கூட பாம்பு என்றால் பயந்துவிடுவார்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது நம்மிடையே வழங்கி வரும் முதுமொழி ஆனால் அப்படிப்பட்ட பாம்பினைப் பார்த்ததும் பயப்படாமல், அதனைப் பணிந்து போகும்படி கட்டளையிட்டவர்தான் நம் ஐயா இராமலிங்க அடிகள்.

ஒருநாள் இராமலிங்கரோடு மயிலாப்பூரைச் சேர்ந்த தணிகாசல முதலியாரும் மற்றும் சில அன்பர்களும், சென்னைக்கு அருகில் உள்ள வியாசர்பாடிக்குப் பிரசங்கம் செய்யச் சென்றனர். பிரசங்கம் முடிந்து இரவு திரும்பிவரும் வழியில் ஒரு பெரிய பாம்பு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்தப் பாம்பினைக் கண்ட எல்லாரும் பயந்து வெகுதூரம் ஓடிவிட்டார்கள். இராமலிங்கர் மட்டும் பயப்படாமல் அப்படியே அசையாமல் நின்றார். வந்த பாம்பு இராமலிங்கரின் கால்களைச் சுற்றிக் கொண்டது. அந்தப் பாம்பை விலகிச் செல்லும்படி இராமலிங்கர் கட்டளையிட்டதும் அது ஓடிவிட்டது. இதைப் பார்த்த அன்பர்கள் ஆச்சர்யமடைந்தனர். ஆண்டவனின் அருளைப் பெற்றதனால்தான் அடிகளார் இப்படிச் செய்ய முடிந்தது என்று போற்றிப் மகிழ்ந்தனர்.

இதைப்போலவே அடிகளாரின் பிற்காலத்தில் மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அதாவது, கடலூர் அப்பாசாமி செட்டியார் என்பவர் ஒரு வாழைக் கிடங்கு வைத்திருந்தார். அங்கு தோட்டத்தில் பேயன் வாழை மரங்கள் நிறைய இருந்தன. ஒருநாள் அடிகளார் அங்கு சென்றிருந்தபோது வாழை மரத்தின் மீது இருந்த பாம்பு அடிகளாரைத் தீண்டிவிட்டது. அடிகளாரின் தலையில் சிறிது இரத்தம் கசிந்தது. அதனைக் கண்ட சிலர் சுவாமிகளைப் பாம்பு கடித்து விட்டதே என்று பதறியவர்களாய்ச் சிகிச்சை செய்யவும் அப்பாம்பினைக் கொல்லவும் முயன்றனர். அடிகளாரோ அவர்களை நோக்கி அதன் விஷம் நம்மை ஒன்றும் செய்யாது. அப்பாம்பு இறந்து போவதற்காகவே நம்மைத் தீண்டியது. அதுவும் இன்னும் சிறிது நேரத்தில் தானாகவே மடிந்து விடும். ஆகவே அதனை நீங்கள் அடித்தலும் வேண்டாம் என்று கூறினார். என்ன ஆச்சர்யம், அடிகளார் கூறியதுபோல், அந்தப் பாம்பு அங்கே இறந்து கிடந்தது. கடவுளின் அருளைப் பெற்றவர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள் என்பதும், தீயவர்களால் அவர்களுக்கு எவ்விட இடையூறும் ஏற்படாது என்பதற்கும் அடிகளாரின் வாழ்க்கையில் நடந்த இச்சம்பவங்களே நல்ல எடுத்துக் காட்டுகளாகும்.

2) மாணவர்களை அடிக்கலாமா?
மாணவர்களை அடித்து, உதைத்து, பாடம் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியரை அணுகி, ஏங்க இப்படி மாணவர்களைப் போட்டு அடிக்கின்றீர்கள் என்று கேட்டால் அதற்கு அவர் என்ன சொல்லுவார் தெரியுமா? அடி உதவுகிற போல் அண்ணன் தம்பிகூட உதன மாட்டாங்க, அடியாத மாடு படியாது, அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் இப்படிப்பல பழமொழிகளைச் சொல்லியடுக்குவார்கள். இக்காலக் கல்வித் திட்டத்தில்கூட மாணவர்களை ஆசிரியர்கள் அடித்துத் திருத்துவதைவிட அன்பால் திருத்த முயல வேண்டும் என்றுதான் வகுக்கப்பட்டுள்ளது. இக்கருத்தை அந்தக் காலத்திலேயே நடைமுறைப் படுத்தச் சொன்னவர்தான் பள்ளிக்குச் சென்று படிக்காத மேதையாகத் திகழ்ந்த நம் இராமலிங்கர். சென்னையை அடுத்த பொன்னேரியில் சுந்தரம்பிள்ளை என்றொரு ஆசிரியர் இருந்தார். அவரிடம் இராமலிங்கரின் அண்ணன் மகன் வடிவேலு என்பவர் படித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் திடீரென்று ஆசிரியர் வீட்டிலிருந்து வந்த வடிவேலு இராமலிங்கரிடம் சென்று எங்கள் ஆசிரியர் சுந்தரம்பிள்ளை பிரம்பால் அடி அடி என்று அடித்துவிட்டார். அவர் அடிக்கு பயந்து கொண்டு அவரிடம் சொல்லிக் கொள்ளாமல் நான் இங்கு ஓடி வந்துவிட்டேன் என்று கண்கலங்கக் கூறினார். இதைக் கேட்டுப் பெரிதும் வருத்தமடைந்த அடிகள் வடிவேலுக்கு ஆறுதல்கூறி ஒரு காகிதத்தை எடுத்து அதில் பின் வரும் பாடலை எழுதினார்.

படிப்பதுநன் றெனத்தெரிந்த பாங்குடையாய்
மன்றுள் வெளிப் பரம னன்பே
துடிப்பதுநன் றெனத்தெரிந்த சதுருடையாய்
அறநவின்ற தத்துவத்தாய் வீணில்
துடிப்பதிலாத் தூயமனச் சுந்தரப்பேர்
உடையாய் என் தோழ! கேள்நீ
அடிப்பதும்அச் சிறுவர்களை அடிப்பதும் நன்
றலவென்மேல் ஆணை ஆணை

இப்பாடலை ஆசிரியரிடம் எடுத்துச் சென்று வடிவேலு கொடுக்க அப்பாடலைப் படித்து மனம் மாறினார் ஆசிரியர். இப்படி ஆசிரியர்களையே திருத்தும் ஆசானாக விளங்கியவர் தான் நம் அருட்பிரகாச வள்ளல் இராமலிங்க அடிகள்.

3) விலகியது வாதநோய்:
ஒருநாள் வித்வான் கண்ணாடி சுப்பராய முதலியார் என்பவர், பல ஆண்டுகளாகத் தம்மை வாதநோய் வருத்தி வருவதாகவும் அதிலிருந்து தம்மைக் காக்கவேண்டும் என்றும் நம் அடிகளாரிடம் வந்து வேண்டிக் கொண்டார். பெருமானும் அவ்வாறே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் அப்பெருநோயினைத் தீர்த்து அவருக்கு உய்வளித்தார். நோயினின்றும் விடுபட்டு மகிழ்ந்த அவ்வித்வான் நம் அடிகள் மீது,

அகத்தியனோ வான்மிகியோ ஆதிசேடன் தானோ
மகத்துவமாஞ் சம்பந்த மாலோ சகத்திலகுஞ்
சச்சிதா னந்தத்தின் தண்ணளியோ என்னென்பேன்
மெச்சுமதி ராமலிங்க வேள்! எனும் பாமாலையைப் பாடினார்.

4) அன்னமிட்ட அற்புதத் தாயே:
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய நம் பெருமான் சிறுவயதில் பசியோடு இருந்த வேளைகளில் இறைவன் கருணை மனங்கொண்டு பல வேளைகளில் பல வடிவங்களில் வந்து அன்னம் படைத்து அவரது பசியைப் போக்கியுள்ளார். ஒருநாள் இரவு அடிகளார் திருவொற்றியூர் சென்று தியாகேசனை வழிபட்டுவிட்டு வீட்டுக்கு வந்தார். நேரம் கடந்து விட்டதால் உறங்கிக் கொண்டிருக்கும் அண்ணியாரை எழுப்பித் தொந்தரவு தர மணமில்லாமல் பசியுடன் வீட்டுத் திண்ணையில் படுத்துவிட்டார். பசியுடன் படுத்திருந்த வள்ளல் பெருமானுக்கு இறைவனே அண்ணியார் உருவில் வந்து வள்ளலாரை எழுப்பி, அன்னையைப் போல் அன்புடன் அன்னமிட்டு அவர் பசியை ஆற்றிவிட்டு மறைந்து போனார். மற்றொரு நாள் திருவொற்றியூர் திருக்கோயிலிலேயே அடிகளார் பசியோடு படுத்துவிட்டார். சிவபெருமான் ஒற்றியூர் கோயில் குருக்கள் உருவில் வந்து அடிகளார்க்கு அன்னம் படைத்து அவர் அரும்பசியைப் போக்கினார். பிறிதொரு நாள், அடிகளாரின் பசியைப் போக்க, வடிவுடையமாணிக்க அம்மையே நேரில் தோன்றித் தாயினும் சிறந்த தாயாய் விளங்கி அடிகளாருக்கு அமுது படைத்திருக்கிறார்.

அன்னொரு நாள் நம்பசிகண் டந்தோ தரியாது
நன்றிரவில் சோறளித்த நற்றாய் காண் எனவும் (நெஞ்சறிவுறுத்தல்)

தெற்றியிலே நான்பசித்துப் படுத்திளைத்த தருணம்
திரு அமுதோர் திருக்கரத்தே திகழ் வள்ளத்து எடுத்தே
ஒற்றியிற் போய்ப் பசித்தனையோ என்று எனை அங்கு எழுப்பி
உவந்து கொடுந் தருளிய என் உயிர்க்கினிதாந் தாயே! (அருள்விளக்கமாலை 43)

எனவும்,

இருள் இரவில் ஒரு மூலைத் திண்ணையில்நான் பசித்தே
இளைப்புடனே படுத்திருந்த எனைத்தேடி வந்தே
பொருள் உணவு கொடுத்து உண்ணச் செய்வித்தே பசியைப்
போக்கி அருள் புரிந்த என்றன் புண்ணியநற் றுணையே என்னும் (அருள்விளக்கமாலை 48) பாடிய அவரது பாடல்களே சான்றுகளாக விளங்குகின்றன.

3)திருத்தலங்கள் சிறப்புற்றல்

சிறிது நாட்களுக்குப் பின் இராமலிங்க அடிகள் திருமுல்லைவாயில் முதலிய திருத்தலங்களை வணங்கி, பின் பாடி என்றழைக்கப்படும் திருவலிதாயம் சென்று சிவபெருமானை வழிபடுகையில் சிவலிங்கத்திற்கு ஓர் அழுக்குக் கந்தையைச் சுற்றி வைத்திருந்ததைப் பார்த்து மனம் வருந்திய அடிகளார்.

சிந்தை நின்ற சிவானந்தர் செல்வறே
எந்தை யேயெமை யாட்கொண்ட தெய்வமே
தந்தை யேவலி தாயத் தலைவ நீ!
கந்தை சுற்றுங் கணக்கது வென்கொலோ

என்னும் பாடலைப் பாடினார். வள்ளலாரின் வருகைக்குப் பின் அவ்வலிதாயத் திருத்தலம் மிகவும் சீரும் சிறப்பும் பெற்று விளங்குத் தொடங்கியது. அதன்பின் சென்னை ஏழுகிணறு பகுதிக்கு அருகில் உள்ள துலுக்காணத்தம்மன் கோயில் அம்மன் மீது ஒரு பஞ்சகம் பாட, இம்மாரியம்மன் கோயிலில் பலி நீங்கி சிவாலயமாக மாறி சிறப்புப் பெற்றது.

சென்னை கந்தகோட்டத்தில் முருகப் பெருமானை, திருவோங்கு எனத் தொடங்கும் பாடலைப் பாடி,
தருவோங்கு சென்னையிற் கந்தகோட் டத்துள்வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே
பாமாலைத் தொடுத்ததன் பயனாய் இக்கோயிலும் பெருஞ்சிறப்பு பெற்று விளங்குகிறது.

ஏ) சென்னை வாழ்க்கைக்கு விடை கொடுத்தல்:
தாசமார்க்கம் (திருநாவுக்கரசர்) சற்புத்திரமார்க்கம் (திருஞான சம்பந்தர்) சகமார்க்கம் (சுந்தரர்) சன்மார்க்கம் (மாணிக்கவாசகர்) என்னும் நான்கு மார்க்கங்களும் படிப்படியாக உயரிய நிலையை எய்தும் முறைகள் என்று ஆன்றோர் வகுத்துள்ளனர். இந்த நான்கு மார்க்கங்களிலும் நம் வள்ளல் பெருமான் உயர்ந்து ஆனந்தப் பரவசம் அடைந்த நிலையை அவரே.

அடியனாக்கிப் பிள்ளையாக்கி நேயனாக்கியே
அடிகளாக்கிக் கொண்டாய் என்னை அவலம் நீக்கியே (5035 மெய்யருள் வியப்பு)
என்று ஆட்கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வியந்து பாடியுள்ளார்.

உருவ வழிபாட்டிலிருந்து அருவ வழிபாட்டிற்குச் செல்வது படிமுறை, முதலில் அடிகள் முருக பக்தராக இருந்தார். பின்னர் சிவனை வலம் வந்தார் அதன்பின்னர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அடியவரானார். கந்தகோட்டத்து சண்முகன் திருவொற்றியூர் தியாகேசர், தில்லை திருச்சிற்றம்பலமுடையான், வடலூர்ப் பேரொளி என்பது வள்ளலார் சென்ற புனிதப் பயணவழி. வள்ளல் பெருமானின் மரணமில்லாப் பெருவாழ்வில், கந்தகோட்டம்-சரியை திருவொற்றியூர்-கிரியை திருத்தில்லை- யோகம்; உத்திரஞானசபை அமைந்த வடலூர்-ஞானம்; இதுவும் ஒருவகையான படிமுறையே என ஆன்றோர் கூறியுள்ளனர்.

சென்னை வாழ்க்கை தமது ஞான வாழ்வுக்கு உகந்ததல்ல என்பதை உணர்ந்த அடிகளார். ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது பெற்றோருடன் சென்று தரிசனம் செய்த ஆடல்வல்லானைக் காண, தம் குடும்பத்தினரையும் நகரத்தையும் விட்டு நீங்க முடிவு செய்தார் என்பதைப் பின்வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது.

தேட்டிலை மிகுந்த சென்னையில் இருந்தால்
சிறுகுறும் என்றுளம் பயந்தே
நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே
நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க்
களத்திலே தரிந்துற்ற இளைப்பை
ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள்
எந்தைநீ அறிந்தது தானே (6 பிள்ளைபெரு விண்ணப்பம் 58)

வள்ளல் பெருமான் 1855 ஆம் ஆண்டு, தன்னுடைய அன்பர்களான சடைச்சாமி என்ழைக்கப்படும் சிதம்பரசாமிகள், வீராசாமி முதலியார், விசுவநாதய்யர், தொழுவூர் வேலாயுதனார், சகோதரர் பரசுராமபிள்ளை ஆகியோருடன் சென்னையிலிருந்து நடந்தே புறப்பட்டார். (ஒரு சில நூலாசிரியர்கள் வள்ளல் பெருமான் 1858 இல் சென்னையைவிட்டுப் புறப்பட்டார் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், தொழுவூர் வேலாயுத முதலியார் தம் வாக்கு மூலத்தில், என்று குறிப்பிட்டுள்ளதால், அடிகளார் சென்னையை விட்டு, சிதம்பரம் சென்றது 1855 இல் என்றே கருதவேண்டியுள்ளது).

3. பூர்வ ஞான சிதம்பரத்தில் பிரகாசித்தல் (1855-1867)

கோயில் என்றே சைவப் பெருமக்களால் வழங்கப்படும் பெருமைவாய்ந்தது சிதம்பரம் சித்+ அம்பரம்=சிதம்பரம் (சித்-அறிவு; அம்பரம்- ஆகாசம்) சிதம்பரம் ஞானாகாசம், சிதாகசம். சிதம்பரம் என்னும் சொல் நம் பெருமானின் ஊனுடனும் உயிருடனும் கலந்த ஒன்று.

எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து

என்று அடிகள் ஆணையிட்டுக் கூறிய இக்குறள் வெண்பா அடிகளது திருவாயிற் பிறந்தது முதல் இனறளவும் சன்மார்க்கிகளால் மத்திர மொழியாகப் பெரிதும் போற்றப்படுகிறது. பொதுவாக தம்பெயர் முன்பு தந்தையின் பெயரினைத்தான் முதல் எழுத்ததாகப் பயன்படுத்துவது வழக்கம். நம் அடிகளாரோ,

எச்சமய முடிவுகளும் திருசிற்றம் பலத்தே
இருந்தஎன எனக்கருளி இசைவித்த இறையே

தம் தந்தையாகப் பாவித்து சிதம்பரம் இராமலிங்கம் என்று எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார், மேலும் பெயருக்குப்பின்னால் பிள்ளை, முதலியார், ரெட்டியார், தேவர், நாடார் என்று எழுதும் அக்காலத்து வழக்கத்தை மாற்றி, சாதியைத் தவிர்த்த முதற்சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார் நம் வள்ளலார். சிதம்பரம் பல்வேறு பெருமைகளை உடைய திருத்தலம். சிவபெருமானுக்கு உரிய கோயில்களிலேயே மிகவும் பழமை வாய்ந்தது. தில்லைக் காளியம்மனுக்கும் சிவபெருமானுக்கும் நடந்த  நாட்டியப் போட்டியில் காளியை வென்ற சிவபெருமான் நாட்டியம் ஆடுகிற ஆனந்த தாண்டவ மூர்த்தியாக அங்கு காட்சியளிக்கின்றார். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதத்தலங்களுள் ஆகாயத்தலமாக விளங்குவதுதான் சிதம்பரம். சிவபெருமானுக்கென்று ஐந்து சபைகள் உண்டு. அவற்றுள் கனகசபை என்று சொல்லப்படுகின்ற பொன்னம்பலம் தான் சிதம்பரம், பழம்பெருமை வாய்ந்த இக்கோயில் ஆயிரக்கால் மண்டபத்தில்தான் சேக்கிழார் பெருமான் எழுதிய பெரியபுராணம் எனப்படும் திருத்தொண்டர் புராணம் அநபாயச் சோழ மன்னன் காலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. தாழ்ந்த குலத்தில் பிறந்த நந்தனார் சிவன்பால் ஈடுபாடு கொண்டு தில்லை அம்பலவாணரைத் தரிசிக்க இக்கோயிலுக்கு வந்தார். ஆனால் அன்றைய சமுதாய வழக்கப்படி அவரைக் கோயிலினுள் விட அனுமதிக்கப்படவில்லை. அதனால் தெற்குக் கோபுர வாயிலுக்குள், இருந்த நந்தியானது விலகி நந்தனாருக்கு இறைவனை தரிசனம் செய்ய வழிவிட்டது.

அக்கால சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இந்த சைவத் திருத்தலத்தில்தான் நடராஜன் சன்னதியும், வைணவ சமயக் கடவுளான கோவிந்தராஜன் சன்னதியும் ஒரே இடத்தில் இருந்து வழிபடும்படி அருகருகே அமைந்துள்ளது. வைணவத் திருத்தலங்களில் சைவக் கடவுளான சிவபெருமானை வைத்து வழிபடவே ஒப்பமாட்டார்கள் ஆனால் தில்லைப் பெரிய கோயிலில் தில்லை நடராஜனும், தில்லைக் கோவிந்தராஜனும் அருகருகே அமைந்து அருள் பாலிப்பது சைவத்தின் பெருமைக்கு ஒரு சிறப்பாகும். திருவாசகம் அருளிய சமயக்குரவர்களுள் ஒருவரான மாணிக்கவாசகர் சுவாமிகள் தன்னுடைய இறுதி நாட்களை இங்கு கழித்துதான் இறையோடு கலந்தார். ஆகாயத்தலமான இங்கு அவர் இறையோடு ஒன்றியதனால்தான் மாணிக்கவாசகர் பெருமானைத் தம் வழிகாட்டியகப் போற்றிய வள்ளல் பெருமான் வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் என்று பாடியருளினார். இத்தகைய பெருமைகள் வாய்ந்த சிதம்பரத்தை அடைந்து அம்பலவாணரைத் தரிசிக்கவேண்டும் என்ற வள்ளலாரின் நெடுநாளைய ஆசை அவரது 32-வது வயதில்தான் நிறைவேறியது. அதற்கான பயணத்தை வள்ளலார் தொடங்கினார்.

இராமலிங்க அடிகாளாரும் அவரது சில அன்பர்களும் சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கிச் சாலை வழியாக நடந்தே சென்றனர். செல்லும் வழியில் புதுச்சேரி(பாண்டிச்சேரி) சென்று அங்கு ஒரு சிலநாள் தங்கி அங்குள்ள பல அன்பர்களின் ஐயங்களை அகற்றி, அதன்பின் அங்கிருந்த ஒருசில திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டபின் தம்முடன் வந்திருந்த உடல் நலிவுற்ற அண்ணன் பரசுராமபிள்ளை மற்றும் சில அன்பர்களுடன் சிதம்பரத்தைச் சென்றடைந்தார்.

தில்லை நடராஜப் பெருமானைத் தம் அன்பர்களுடன் தரிசித்து வணங்கி, அங்கேயே வடக்குச் சன்னதி வீதியில் ஒரு சத்திரத்தில் அன்பர்களுடன் தங்கியிருந்தார். சிதம்பரத்தில் தங்கி இருந்து கொண்டு அந்நகரைச் சுற்றியுள்ள பல திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டும் பாடல்கள் இயற்றியும் வந்தார்.

1)கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் அறிமுகம்

திருநெல்வேலிக்கருகில் கங்கை கொண்டானைச் சேர்ந்த வேதவிற்பன்னர் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள், சுத்தமல்லி என்னும் ஊரில் பூணூல் குடுமி இவற்றைக் களைந்து துறவறம் பூண்டவர். மனோன்மணியம் எழுதிய ஆசிரியர் சுந்தரம்பிள்ளை இவரை குருவாக ஏற்றுக் கொண்டவர். வேதவிளக்க நூல்கள் பல எழுதிய இவர் சிதம்பரத்தில் கிழக்குச் சன்னிதி வீதி சத்திரம் ஒன்றில் தங்கியிருந்தார். அவரை நம் அடிகள் பார்க்க விரும்பி சுந்தர சுவாமிகளிடம் சிலரை அனுப்பி சமயம் பார்த்து வரக் கூறினார்கள். சுந்தர சுவாமிகளைச் சந்திக்கச் சென்றவர்களிடம் இங்கா சமயம் பார்க்கச் சொன்னது என்று கூறி, அவரே அன்பர்களுடன் நம் அடிகளார் தங்கியிருந்த சத்திரத்திற்கே வந்தார்.

சுந்தர சுவாமிகளோடு வள்ளலாரும் அளவளாவிக் கொண்டு, இருவருமாக மூன்று நாட்கள் வரை ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் ஆலய வழிபாடு முதலியன செய்த நேரம்போக, மீதி நேரங்களில் ஞான மார்க்க பொருள் குறித்து உரையாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கிருந்த ஓர் அன்பர் மகாதேவ மாலையிலிருந்து சில பாடல்களைப் பாடினார். இவை யாருடைய பாடல்கள் என்று சுந்தர சுவாமிகள் வினவ, இவை வள்ளலார் பாடியவை என பதிலிறுத்தார் இதைக் கேட்ட சுந்தர சுவாமிகள் மிகவும் மகிழ்ந்து எங்களை ஆட்கொள்ள வந்த இன்னுருவே இவ்வுருவம் என்று நம் அடிகளைப் புகழ்ந்தார்.

சுந்தர சுவாமிகள் அடிகளாரிடம் விடைபெறும்போது விபூதி கேட்டார். இராமலிங்கரோ, மோனமாக இருந்து, சமநிலையில் மதிக்கப்படுபவர்கட்கு ஞானிகள் விபூதி தருவதில்லை. எனக்கூறி விபூதி தர இசையவில்லை ஆயினும் சுந்தர சுவாமிகள் என்ன செய்தார் தெரியுமா? தன்னிடம் இருந்த விபூதியை வள்ளலாரின் நெற்றியில் பூசி, அந்த விபூதியை தன் வாழைப்பட்டடையில் உள்ள விபூதியில் கலந்து தாமும் அணிந்து மற்ற அன்பர்களுக்கும் வழங்கினார்.

விடைபெற்றுச் சென்ற சுந்தர சுவாமிகளை வழியனுப்பச் சென்ற சில அன்பர்கள், விவாதம் நடைபெறும் போது நீங்கள் ஏன் இராமலிங்க அடிகளின் எதிரில் அமராமல், பக்கத்தில் அமர்ந்து விவாதித்தீர்கள் என்று வினவ வள்ளல் பெருமான் தன் எதிரில் உட்காருவோர் சக்தியை இழுத்துக் கொள்ளும் ஆற்றல் மிக்க சித்தர் என்று சுந்தர சுவாமிகள் விடை பகர்ந்தார்.

பிறகு இராமலிங்கர் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், நாகப்பட்டினம் மதுரை போன்ற இடங்களுக்குச் சென்று ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு, தமது சிறிய தமயனார் பரசுராமபிள்ளை தங்கியிருந்த கருங்குழி என்னும் ஊருக்கு வந்தார். சிறிது நாட்களில் பரசுராமபிள்ளை காலமாகிவிட்டார். பரசுராம பிள்ளையின் சமாதி கருங்குழியில் உள்ளது அதன்பின் வள்ளலார் வேங்கட ரெட்டியாரின் வேண்டுகோளை ஏற்று அவர் வீட்டிலேயே கருங்குழியில் தங்கிவிட்டார்.

2) தண்ணீரில் விளக்கும் எரிந்தது:
கருங்குழியில் வேங்கட ரெட்டியார் வீட்டில் தங்கியிருந்தபோது இராமலிங்கருக்கென்று ஒரு தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அடிகளார் இரவில் ஒரு மணி நேரமே உறங்குவார். தியானம் செய்வதிலும் அருட்பாக்களைப் பாடுவதிலும் எழுதுவதிலும் மற்றைப் பொழுதைக் கழிப்பார். இரவில் ஒரு மாடத்தில் விளக்கேற்றி வைப்பது வழக்கம்.

ஒருநாள் ரெட்டியாரின் மனைவி வெளியூருக்குப் போக வேண்டியிருந்தது. விளக்கில் எண்ணெய் வேண்டுமளவு ஊற்றி வைத்துவிட்டு, எண்ணெய் வைக்க வேண்டிய கலசம் உடைந்து போனதால், பழகுவதற்குப் புதிதாக ஒரு மண் கலத்தில் தண்ணீரை ஊற்றி மாடத்துக்கு அருகே வைத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

பாடல்கள் எழுதுவதிலேயே கவனமாக இருந்த இராமலிங்கரோ, தண்ணீர்க் கலத்தை எண்ணெய்க் கலம் என்று கருதி நீரையே எடுத்து அவ்வப்போது விளக்கில் இட்டு இரவு முழுவதும் எழுதிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் அவ்வம்மையார் வந்து பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தார். அன்று முதல் அடிகளாரின் தெய்வீகத் தன்மை மற்றவர்களுக்கும் பரவலாகத் தெரியவந்தது. இதுவும் இறைச் செயல்தான் என்பதை வள்ளல் பெருமானே பாடியுள்ளார்.

மெய்விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கு
இல்லை என்றார் மேலோர் நானும்
பொய்விளக்கே விளக் கெனவும் பொங்கிவழி
கின்றேனோர் புதுமை யன்றே
செய்விளக்கும் புகழுடைய சென்னை நகர்
நண்பர்களே செப்பக் கேளீர்
நெய்விளக்கே போன்றொருதண் ணீர்விளக்கும்
எரிந்தது சந் நிதியின் முன்னே

இந்நிகழ்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், மதுரைத் திருஞானசம்பந்த சுவாமிகள் ஆதீனம் சிதம்பர சுவாமிகள் அருளிய வெண்பா வருமாறு

தண்ணீர் விளக்கெரிந்த தன்மைபோல் மாந்தர்தம்
உண்ணீர் சிவம்விளங்க ஓங்குவிக்கும் கண்மணியாம்
நங்கன் இராமலிங்கன் நல்லஅருட் பாமுறையைத்
துங்கமுற மாணா தொழு

3) கருங்குழியில் வள்ளலார்
தண்ணீரில் விளக்கெரிந்த அற்புதத்தைப் போன்றே பல அற்புதங்களை வள்ளல் பெருமான் கருங்குழியில் இருந்த காலங்களில் நிகழ்த்தியுள்ளார்.

அ) சுடர்ப்பூ அளித்த இறைவன்:
வள்ளலார் தம் அன்பர்கள் புடைசூழ வீற்றிருந்த சமயம். இறைவன் நேரில் எழுந்தருளி அங்கிருந்த அன்பர்களுக்கெல்லாம் திருநீறு அளித்துள்ளார். ஆனால் நம் வள்ளற் பெருமானுக்கு மட்டும் திருநீற்றுப் பையிலிருந்து செஞ்சுடர்ப்பூ ஒன்றை அளித்து அருளினாராம். பின்னர் இதைத் தம் திருஅருட்பாவில் பிரசாத மாலை என்னும் பகுதியில் பத்துப் பாடல்களிலும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார் நம் அடிகள்.

ஆ) மனித உருவில் வந்த இறைவன்:
கருங்குழியில் ஒருநாள் நள்ளிரவில் இறைவன் மானிடத்திருமேனி தாங்கி அடிகள் இருக்கும் இடம் தேடி வந்து கதவைத் தட்டித் திறக்குமாறு கூற, அடிகளாரும் கதவைத் திறக்க, வந்த இறைவன் தன் திருவடிகளில் ஒன்றை வாயிற்படியின் அகத்தும், மற்றொன்றை வாயிற்படியின் புறத்தும் வைத்தவாறு நின்று, இது தேவர்க்கும் அரிது; நற்றவர்க்கும் அரிது. உனக்கிது நாம் நல்கினம் என்று உணர்த்திச் சென்றாராம் இந்நிகழச்சியை.

உலகமெலாம் உதிக்கின்ற ஒளிநிலைமெய் இன்பம்
உறுகின்ற வெளிநிலையென றுபயநிலை யாகி
இலகியநின் சேவடிகள் வருந்தியிட நடந்தே
இரவில்எளி யேன்இருக்கும் இடந்தேடி அடைந்து
கலகமிலாத் தெருக்கதவங் காப்பவிழ்க்கப் புரிந்து
களித்தெனையங் கழைத்தெனது கையில் ஒன்று கொடுத்தாய்
அலகில்அருட் கடலாம்உன் பெருமையைஎன் என்யேன்
ஆனந்த வல்லிமகிழ் அருள்நடநா யகனே
என்ற பாடலிலும்(அருட்பிரகாசமாலை) தொடர்ந்து வரும் பாடல்களிலும் குறிப்பிட்டுள்ளதன் மூலம், அடிகளார் நேரடியாக இறையருளைப் பெற்றார் என்பது புலனாகிறது.

இ)நோய் நீக்குதல்
கருங்குழியில் வாழ்ந்த பாலு ரெட்டியார் என்பவர்குட்ட நோயினால் பெரிதும் துன்பப்பட்டார். அவர் வள்ளல் பெருமானிடம் வந்து வேண்டிடவே வள்ளலார் திருநீறு கொடுத்துக் குணமாக்கினார். அதுபோலவே, முத்து நாராயண ரெட்டியார் கண் மறைவு நோயினால் அவதியுற்றிருந்தார். அவருக்கும் அடிகளார் திருநீறு கொடுத்துக் குணமாக்கினார். நோயிலிருந்து விடுபட்ட முத்து நாராயண ரெட்டியார் தன் செல்வம் முழுவதையும் அடிகளாருக்கு எழுதிக் கொடுக்க முன்வந்தார். அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த அடிகளார். வேண்டுமாயின் இவ்வூரில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு எழுதிவையுங்க என்றார். ரெட்டியாரும் அவ்வாறு செய்தார்.

தைப்பூச நாட்களில் வடலூரிலிருந்து சித்திவளாகம் செல்லும் நாட்களில், இக்கோயிலில் தங்கி பிரசாதம் பெற்றுப் போவது இன்றும் நடந்து வருகிறது.

கருங்குழியில் ஒருநாள் சில அன்பர்களுடன் இயற்கைக் காட்சிகளைக் கண்ணுற, உலாவ வெளியே சென்றார். அப்பொழுது இடைவழியில் பெருமழை பொழியவே எல்லாருடைய ஆடைகளும் நனைந்துவிட்ட நிலையில் வள்ளல் பெருமானின் ஆடையும் திருமேனியும் நனையாமல் இருப்பதைக் கண்டு வியந்தனர்.

வள்ளலாரின் மாணாக்கருள் ஒருவரான நயினாரெட்டியார் என்பவர் பொன் செய்யும் வித்தையை (ரசவாதம்)அறிய விரும்பினார். பெருமான் ஒரு பாத்திரத்தில் நீர் வார்த்து அதில் ஒரு பொட்டண மருந்திட்டு தம் கையில் சிறிது நேரம் வைத்திருந்து கொடுத்தார். அதனை மறுநாள் திறந்து பார்க்க அது தங்கச் சுண்ணமாக இருந்தது. பிறகு பெருமான் அதை எடுத்துத் தெருமணலில் கொட்டிவிட்டார் அவா அற்றோருக்கே அது இயலும் என்று ரெட்டியாருக்கு உணர்த்தினார்.

கருங்குழியில் சுமார் பதினாறு ஆண்டுகள் வள்ளலார் தங்கியிருந்து பல அரிய செயல்களைச் செய்து கொண்டே அங்கிருந்து கடலூர், நெல்லிக்குப்பம், செஞ்சி முதலிய ஊர்களுக்குச் செல்வதும் மீண்டும் வருவதுமாக இருந்தார். கருங்குழியில் கோயில் கொண்டிருந்த விநாயகப் பெருமான் மீது

நாவி னாலுனை நாடொறும் பாடுவார்
நாடு வார்தமை நண்ணிப் புகழவும்
ஓவி லாதுனைப் பாடவுந் துன்பெலாம்
ஓட வும்மகி ழோங்கவுஞ் செய்குவாய்
காவி நேர்களத் தான்மகி ழைங்கரக்
கடவு ளேநற் கருங்குழி யென்னுமூர்
மேவி யன்பர்க் கருள்கண நாதனே
விளங்குஞ் சித்தி விநாயக வள்ளலே

என்ற பதிகம் பாடிப் பரவசப்பட்டார்.

4) இராமலிங்க அடிகளின் தோற்றம்:
வள்ளற் பெருமான் வரலாறு என்னும் நூலில் வே திருவேங்கடம் அவர்கள் கருங்குழியில் வள்ளலாரின் நிலை என்று பின்வருமாறு எழுதுகிறார்

கருங்குழியில் வள்ளலார் இருந்த காலத்தில் பெருமானின் உருவம் மற்றும் செய்பாடுகளை குறித்து தொழுவூர் வேலாயுத முதலியார் தமது வாக்குமூலக் குறிப்பில் குறிப்பிடுவதாவது.

(கருங்குழியில் பெருமான் தங்கியிருந்த காலத்தில், பல முறைகள், சற்றேறக் குறைய நீண்ட கால அளவில் இவர் எங்கு சென்றுள்ளார் என்று ஒருவரும் அறியாதவாறு மறைந்திருப்பார். இராமலிங்கம் தன் உருவ அமைப்புத் தோற்றத்தில் ஓரளவு உயரமானவர், மெலிந்த மனிதர் மிக மெலிந்தவர், உண்மையில் இயல்பாக எலும்புகள் தெரியும் படியானவர். ஆயினும் உயரமான அமைப்பில் ஒரு வலிமையான மனிதர், மிக விரைந்து நடப்பவர் என்பதுடன், சிவந்த தூய முகத்துடனும் நீண்டு மெலிந்த மூக்குடனும், மிக அகன்ற ஒளிவீசும் கண்களுடனும், முகத்தில் நிலையான வருத்தக்குறி தோற்றத்துடனும் இருந்தார். இவருடைய கடைக்காலத்திற்கு முன்பு தலை முடியை மிக நீளமாக வளர்த்திருந்தார். மேலும் யோகிகளுக்கு சற்றும் வழக்கத்தில் இல்லாதவாறு காலணிகள் அணிந்திருந்தார். இரண்டு வெள்ளைத் துணிகளே அவரது ஆடைகளாகும். உண்பதிலும் பருகுவதிலும் மிகுந்தளவு குறைத்தே உண்ணும் வழக்கமுள்ளவர். எங்கும் என்றும் அவர் ஓய்வெடுத்ததாகத் தெரியவில்லை. சுத்த சைவ உணவே கொள்பவராவார். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறையே உணவு உட்கொள்வார். அதுவும் மிகச் சிறிய அளவேதான். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு உணவு அருந்தாமல் உபவாசம் மேற்கொள்ளும் காலங்களில் இளவெந்நீரில் சிறிது சர்க்கரை கலந்து பருகுவதைத் தவிர வேறு எந்த உணவையும் அவர் பொதுவாகவே உண்பதில்லை.

மேற்கண்ட வாக்குமூலக் குறிப்புகள் மிக இன்றியமையாதனவாகும். சிலர் பெருமானார் முக்காடு போட்டிருந்ததால் மொட்டையடித்திருப்பார் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நீண்ட தலைமுடியும் மீசையும் பெருமானுக்கு உண்டு. காலுக்கு ஆற்காட்டுச் சுவடு அணிந்திருந்ததாகச் சிலர் கூறுவதுண்டு காலுக்குக் கவசந்தரித்தே நடத்தல் வேண்டும் என நித்திய ஒழுக்க விதிகளில் பெருமான் அறிவுறுத்தியுள்ளார். நம் உடம்பில் 0.6 வால்ட் மின்சக்தி உள்ளதாக அறிவியலார் குறிப்பிடுகின்றனர். இந்த மின்னேற்ற சக்தி காலுக்குக் கவசமின்றி நடந்தால் பூமியில் பாய்ந்து உடம்பு பலம் குறையும். இதனால் சிலர் வெறுந்தரையில் படுத்து களைப்பாறுவது கூடத் தவிர்க்கப்பட வேண்டும்.

5) கூடலூர்(கடலூர்) பயணம்:
இராமலிங்க அடிகளாரின் பெருமைகளைக் கேட்ட கூடலூர் மு. அப்பாசாமி செட்டியார் என்னும் அன்பரொருவர் அடிகளாரை அழைக்க, அவ்வழைப்பினை மறுக்காது கூடலூர் சென்றார். இக்காலத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கூடலூரில் இரசவாதத்தில் மயக்குற்றவராய் இருந்த தேவநாயகம் பிள்ளைக்கு அருள்நெறி காட்டி அவரை ஆட்கொண்டார் அடிகளார்.

அப்பாசாமி செட்டியார் வாழைத்தோட்டத்தில் வாழை இலையிலிருந்த பாம்பு தீண்டியது. அடிகளாருக்கு இரத்தம் கசிந்தது. அவ்விடத்தில் திருநீற்றைப் பூசினார். சிறிதுநேரத்தில் தீண்டிய பாம்பு மாண்டது.

பலபுலவர்கள் அமர்ந்து ஒரு விவாதத்தில் ஈடுபட்டனர். ஒருவர் கைவல்யத்தில் (59-ம் பாட்டு) உள்ள பின்வரும் பாட்டை,

இந்த சீவனால் வரும் அறு பகையெலாம்
இவன் செயல் என்னாமல்
அந்தத் தேவனால் வரும் என்ற
மூடர்கள் அதோகதி அடைவார்கள்
இந்தச் சீவனால் வரும்அறு பகையெலாம்
இவன் செயல் அல்லாமல்
அந்தத் தேவனால் அன்று எனும்
விவேகிகள் அமலவீடு அடைவாரே  (கைவல்யம்-சந் 59-ம் பாட்டு)

பாடிக்காட்டி, அவனன்றி ஓரணுவும் அசையாது என்று வாதம் புரிந்தவரை மறுத்தார். இவ்விருவருக்கும் ஏற்பட்ட ஐயத்தைப் போக்க நம் அடிகளாரிடம் சென்றபோது அவர் ஒரு கதையைக் கூறி அதன்மூலம், பேதம், அபேதம் அறியாது நிற்கும் மனிதர்களுக்கு உரிய விளக்கத்தைக் கூறினார். பேதம் உணர்ந்தவர்களுக்கு இந்த சீவனால் வரும்.... என்ற மேற்கண்ட பாடல் பொருந்தும் என்றும், பேதம், அபேதம் அறியாதவர்களுக்கு அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது பொருந்தும் என்றும் விளக்கமளித்தார் நம் அடிகளார்.

கூடலூர் திருப்பாதிரிபுலியூரில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் பிரம்ம சமாஜத்தார் விக்கிரக ஆராதனையை மறுத்து உரையாற்றினார். இதற்கு அன்பர்கள் பெருமானிடம் முறையிட, அதற்கு அவர் அந்த சமாஜத்தினருக்குத் தாங்கள் விக்கிரக ஆராதனையை மறுப்பது இன்னின்ன வகைகளினால் தகுதியன்று ஒரு கடிதம் அனுப்பினார். அக்கடிதத்தைக் கண்டு மறுக்க இயலாதவர்களாய், போலி மறுப்புக் கடிதம் ஒன்றை அவர்களுள் ஒருவராகிய தரஸ்வாமி நாயக்கரைக் கொண்டு எழுதுவித்தனர். பிறகு நடந்த வண்ணம் உரைத்தல் என்னும் நூலில் குறித்தபடி நாமெல்லாம் நமது பக்குவத்திற்குத் தக்கபடி விக்கிரக ஆராதனை செய்து அதனால் அருளைப் பெற்று, அதனால் அறிவு விளங்கி, அதனால் பிரம சுகத்தை அனுபவிக்கலாம் என்ற அடிகளாரின் கருத்தை உணர்ந்து அவர்கள் அமைதியானார்கள்.

மஞ்சக்குப்பம் தாசில்தாராக இருந்த வேங்கடசுப்பு ஐயர் என்பவர் இரக்கமின்றித் தாம் வண்டிகளில் ஏறிக் கொண்டு செல்கின்ற இடங்களுக்கெல்லாம் ஊதுகொம்பு வைத்து ஊதிக் கொண்டே வருவதற்கென ஒரு சக்கிலியை நியமித்துப் பல நாட்களாக அம்மாதிரியே நடத்தி வந்தார். இதையறிந்த அடிகளார் வேங்கடசுப்பு ஐயர் பிசங்கத்திற்கு வந்தபோது, நீர் வண்டியிலேறிச் செல்லும் பொழுது நும் போன்ற ஒரு மனிதன் பல மைல்கள் தூரம் நடந்து ஓடி வருவதென்றால், இதைவிட வேறு ஜீவகாருண்யமற்ற செயல் என்னவிருக்கிறது. அல்லாமலும் இந்த வாழ்வு எத்தனை நாளைக்கு நிலைத்திருக்கப் போகிறது. ஆதலால் இனி அவ்வழக்கத்தை அறவே விட்டுவிடுங்கள். இல்லையானாலும் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு முன்னமேயே அவனை அனுப்பி வைத்து, அந்த ஊருக்கு அருகே நீங்கள் போனதும் அவன் ஊதுவதை வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.

6) வேட்டவலம் ஜமீன்தாரை ஆட்கொள்ளல்:
வேட்டவலம் என்னும் ஊருக்கு ஜமீன்தாராகிய அப்பாசாமி பண்டாரியாருக்கு மனைவியர் இருவர். மூத்த மனைவிக்கு பிரமராக்ஷஸம் என்கிற பேயும், இளைய மனைவிக்கு மகோதர நோயும் பற்றியிருந்தது. வள்ளல் பெருமானின் பெருமையை உணர்ந்த ஜமீன்தார் பெருமானைத் தம் வீட்டிற்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார், வீட்டில் ஒரே மாதிரியான இரு நாற்காலிகளை வைத்து தான் மனத்திலே எண்ணிக் கொண்டிருந்த குறிப்பிட்ட நாற்காலியில் பெருமான் அமர்ந்தால் அவர் தம்மை ஆட்கொள்ள வந்த பெரியார் என்று தீர்மானிக்கலாம் என்று எண்ணியிருந்தார்.

நம் பெருமான் மாளிகைக்குள் நுழைய ஆரம்பித்தபோது, வெளிவாயிலை அடைந்த பிரம்ம ராக்ஷஸம் பிடித்த முதல் மனைவி ஓடிவந்து, அவரது காலில் விழுந்து வணங்கி, ஐயா அவர்களே, நான் போய் வருகிறேன். உத்தரவு கொடுங்கள் என்று கூறி திருநீறு வாங்கித் தரித்துக் கொண்டார். பிரம்மராக்ஷஸம் அவரை விட்டு நீங்கியது. அதன்பின், அடிகளார் உள் நுழைந்து ஜமீன்தார் மனத்தில் எண்ணிக் கொண்டிருந்த நாற்காலியிலேயே அமர்ந்தார். வியப்பின் உச்சத்திற்கே சென்ற ஜமீன்தார் வள்ளலாரின் திருவடிகளில் விழுந்து வணங்கி தனக்கு நேர்ந்த துன்பங்களைக் கூறினார். இளைய மனைவியாரின் மகோதர நோயையும் மூன்று வேளை திருநீறு கொடுத்துத் தீர்த்தருளினார். ஜமீன்தார் சுத்த சத்துவ உணவுகொள்பவராக மாறினார். வேட்டவலத்தில் உலவிய பாம்பு, தேள் போன்றவற்றை ஊருக்குப் புறத்தே விடச் செய்தார். உயிர்ப்பலி இடுவதைத் தவிர்க்கச் செய்து பால்பொங்கலிட்டுப் படைக்கக் கட்டளையிட்டார். அது முதல் வேட்டவலம் ஜமீன்தார் நம் அடிகளாரால் ஆட்கொள்ளப்பட்டார்.

7) கல்பட்டு (இராமலிங்கம்) ஐயாவை ஆட்கொள்ளல்
விழுப்புரம் வட்டத்தைச் சேர்ந்த கல்பட்டு என்னும் ஊரில் பிறந்தவர் யோகி இராமலிங்கம். அவர் வள்ளல் பெருமானிடம் ஆட்பட்டு அன்பரானார். இவருக்கும் வள்ளலாரின் பெயரான இராமலிங்கம் என்பதே பெயரானதால் அன்பர்கள் இவரை கல்பட்டு அய்யா என்றே அழைத்து வரலாயினர். நம் அடிகளார் அவரையும் அழைத்துக் கொண்டு வடலூர் வந்து சேர்ந்தார்கள். வடலூரில் ஓர் ஆசிரமும் அமைத்துக் கொடுத்தார்கள். சத்திய தருமச்சாலையின் கீழ்ப்புறம் தற்போது கல்பட்டு அய்யாவின் சமாதி அமைந்துள்ளது.

8) தடைக் கற்கள்:
இராமலிங்க அடிகளுக்கு முன்பும் சரி, அவர்களுக்குப் பின்பும் சரி, கடவுளின் அருளைப் பெற்று ஞானப்பழமாய்க் காட்சியளித்து உபதேசங்கள் செய்தவர்கள் எத்தனையோபேர் இருந்தாலும், அடிகளாருக்கு இணையாக சமயத்துறையிலும், சமுதாயம் சார்ந்த பொதுத்துறையிலும் ஒருமைப்பட்டுணர்வு ஏற்பட மாபெரும் புரட்சியைச் செய்தவர்கள் அல்லது செய்ய முயற்சித்தவர்கள் ஒருவரும் இல்லை.

ஏதோ கடவுளின் அருளைப் பெற்றோம். சிவனே என்று இருந்தோம் என்று ஒதுங்கிச் சுயநலமாக வாழாமல், மனித சமுதாயம் விழிப்படைய, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ என்ன செய்யவேண்டும் என்று தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தைப் பற்றிச் சிந்தித்த முதல் ஞானியும் வள்ளலார்தான்.

இந்த மக்கள் ஏன் அறிவு வளர்ச்சி பெறாமல் இருக்கிறார்கள், அவர்களுடைய அறியாமைக்கும் தாழ்வுக்கும் தடைக்கற்களாக இருப்பவை எவை? என்பதைக் கண்டறிந்து அந்தத் தடைகளை அகற்றி, முன்னேற்றப் படிகளை அமைத்து மனித சமுதாயத்தை உயர்த்த முனைந்தவர் நம் அடிகளார்.

சமுதாயம் விழிப்படையத் தடைக் கற்களாய் இருப்பவை சாதியும், சமயமும்தான் என்பதை நன்கறிந்தவர் நம் பெருமானார்.

இந்தக் கணினி யுகத்திலேயே தினமும் சாதிச் சண்டைகளும், மதவிரோத போக்குக்களும் தவிர்க்க முடியாத சமுதாயக் கொடுமைகளாய் இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சியடைந்த இக்காலத்திலேயே இப்படியென்றால் அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் சண்டைகள் நிகழ்ந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கவே சங்கடமாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளையெல்லாம் பார்த்துப் பார்த்து மனம் நொந்துபோன வள்ளல் பெருமான், இறைவனுக்கே ஒரு விண்ணப்பம் எழுதினார். அந்த விண்ணப்பம் வருமாறு;

எல்லாமுடைய அருட்பெருஞ்சோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி
எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய
சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் உலகாசார
சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆசிரமம் முதலிய எங்கள்
மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்
மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருப்பாட்டுரிமை
எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும்
லிலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்
எல்லாமாகிய தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்சோதி ஆண்டவரே!
தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

வறுமையைவிட மிகவும் கொடுமையானது இந்தச் சாதிவெறி, வறுமையைக்கூட நமது உழைப்பினாலும், முயற்சியினாலும், கூட்டுறவினாலும் விரட்டிவிடலாம் ஆனால் இந்தச் சாதிவெறியையும் மதவெறியையும் எந்தவிதத்திலும் விரட்டியடிக்க இயலாது. ஏனெனில் அது பரம்பரை பரம்பரையாய், இந்த மண்ணில் புரையோடிவிட்ட ஒரு நோய்.

மிகப் பழங்காலத்தில் எல்லாம் இப்படிப்பட்ட கொடுமைகள் இல்லை. திருவள்ளுவர்கூட, செய்யக்கூடிய, தொழிலைக் காரணமாக வைத்துதான் வேறுபாடு இருந்ததே தவிர, பிறப்பால், உயிர்த்தன்மையால் எல்லாரும் சமம் என்று கூறியுள்ளார். அவர் காலத்தில் இந்தப் பாகுபாடுகள் அதிகம் இல்லை.

தமிழ் மூதாட்டி அவ்வையார், சாதி இரண்டொழிய வேறில்லை என்று பாடியதுகூட, தருமம் கொடுத்தோர், கொடாதோர், என்ற இரண்டு வகையினரைத்தான் இரண்டு சாதியாகப் பிரித்துக் காட்டினார். ஆனால் இந்த மண்ணுக்கே சொந்தமில்லாத, சம்பந்தமில்லாத வேற்று இன மக்கள் இங்கு வந்து குடியேறிய பிறகுதான், அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள இங்குள்ள மக்களைச் சாதி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் சூழ்ச்சியாகப் பிரித்து, பகையுணர்வைப் புகுத்தி, மனிதநேயப் பண்பையே குழிதோண்டிப் புதைத்துவிட்டனர்.

சாதிகள் என்பவை பொய்யனவை, கற்பனையாக அமைந்தவை. அவற்றைப் பேசுவதும், பேணுவதும், பயனற்றவை. அர்த்தமற்றவை என்று இடித்துரைத்தார் வள்ளலார்.

நால் வருணம் ஆச்சிரமம் முதலாம் நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே என்று எள்ளி நகையாடினார்.

கடவுள் பெயரால் தோன்றுகின்ற மதங்களின் அடிப்படை நோக்கமே மனித குலம் பயனுற வாழவேண்டும் என்பதுதான். ஆனால் மதத்தின் காரணமாகவே உலகின் பல்வேறு பகுதிகளில் பெரும் கலவரங்களும், போர்களும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கின்றன. சமாதானத்தையும், உயிர்நேயத்தையும் போதிக்க வேண்டிய சமயங்கள் எல்லாம் தத்தம் வலிமையை, ஆளுமையைக் காட்டிப் பிற மதங்களை அழிப்பதிலும், அடிமைப்படுத்துவதிலுமே குறியாய் இருக்கின்றன. சாதி, மதம் இவற்றைச் சாராமல் அறிவின் வழியில் வாழவேண்டும் என்பதும் வள்ளலார் வகுத்த நெறிகளில் ஒன்று எனவே,

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்

என்று பாடிய வள்ளலார், மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார். பல பாடல்களில் சாதி சமயங்களை அடிகளார் கடிந்து கொண்டுள்ளார். அவற்றுள்,

மதத்திலே அபிமாங் கொடுழல்வேன்
சாதி மதம் சமய மெனும் சங்கடம் விட்டறியேன்
சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி

சீர்திருத்தப் பாடல்கள் மூலம் தான் சார்ந்திருந்த சைவத்தைப் புனரமைக்க வள்ளல் பெருமான் எவ்வளவோ முயன்றார் முடியவில்லை. முடிவில் சன்மார்க்கத்தின் அடுத்த நிலையில், சமரச சுத்த சன்மார்க்கத்தைக் காட்டிய வள்ளலார் சன்மார்க்க முரசாக முழங்கும் பாடல்:

கிழக்குவெளுத் தததுகருணை அருட்ஜோதி உதயம்
கிடைத்ததென துளக்கமலம் கிளர்ந்ததென தகத்தே
சழக்குவெளுத் ததுசாதி ஆச்சரமா சாரம்
சமயமதா சாரம்எனச் சண்டையிட்ட கலக
வழக்குவெளுத் ததுபலவாம் பொய்ந்நூல்கற் றவர்தம்
மனம்வெளுத்து வாய்வெளுத்து வாயுறவாதித்த
முழக்குவெளுத் ததுசிவமே பொருள்எனும் சன்மார்க்க
முழுநெறியில் பரநாத முரசு முழங்கியதே

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளில் கோத்தரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலை கின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
என்று புனிதகுலம் பெறுமாறு புகன்ற நம்பெருமான்.

சாதிசமயச் சழக்கைவிட் டேன்அருட்
ஜோதியைக் கண்டேனடி அக்கச்சி
ஜோதியைக் கண்டேன டி....
என்று இறைவனைக் காண இப்படியொரு வழிமுறையையும் கூறிச் சென்றுள்ளார்.

9) திருவருட்பா முதல் நான்கு திருமுறைகள் வெளியீடு
வள்ளல் பெருமான் அருளிய பாடல்களைத் தொகுத்து அவற்றை திருமுறைகளாக வகுத்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார். மொத்தம் ஆறு திருமுறைகளாக இவை தொகுக்கப்பட்ட போதிலும் முதன் முதலில் 1867 ஆம் ஆண்டு, இறுக்கம் இரத்தின முதலியார்,சிவானந்தபுரம் செல்வராய முதலியார், புதுவை வேலு முதலியார் போன்றவர்கள் ஒத்துழைப்புடன் தொழுவூர் வேலாயுதம் முதலியார் தொகுத்த இராமலிங்க சுவாமிகள் என்று வழங்கக் கூடாது என்று வள்ளலார் தடுத்துவிட்டதால் திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்கம் பிள்ளையவர்கள் என்று குறிப்பிடப்பெற்றது. இதனைக் கண்ணுற்ற நம்பெருமான் மனவருத்தம் அடைந்தார் எனினும் ஓரளவு சமாதானம் அடைந்து திருவருட்பிரகாச வள்ளல் ஆர் என்னும் சிதம்பரம் இராமலிங்கம் என்று வைத்துக் கொள்ள இசைந்தார். இதன்பிறகு சில நாட்கள் கழித்து ஐந்தாம் திருமுறையும் வெளியானது. சுத்த சுன்மார்க்க இலட்சியங்களும், பெருமானின் சீர்திருத்தக் கருத்துக்களும் நிறைந்த ஆறாந்திருமுறை வள்ளல் பெருமான் மறைவுக்குப் பின்தான் வெளியிடப்பட்டது.

10. இதுவே தகுதியான இடம்:
கருங்குழியியை உறைவிடமாகக் கொண்டிருந்த நம்பெருமான் அவரது சன்மார்க்க சிந்தனைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தருமசாலை ஒன்றையும் வழிபாட்டுக்கு ஞானசபை ஒன்றையும் உருவாக்கும் எண்ணத்தில் அதற்கான பெருவெளி ஒன்றைத் தேடி, தம் அன்பர்களுடன் கருங்குழிக்கு வடபுறமுள்ள பார்வதிபுரம் எனப்படும் வடலூருக்கு வந்தார்.

திருச்சிற்றம்பலம், திருக்கூடலையாற்றூர், திருமுதுகுன்றம், திருவதிகை, திருவிரும்பை மாகாளம், திருப்பாதிரிப்புலியூர், தியாகவல்லி போன்ற சிவத்தலங்களுக்கு நடுவிலும், தென் பெண்ணை, திருக்கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு ஆகிய நதிகள் நான்கு பக்கம் சூழப்பெற்றதாகவும் எந்தவித இடையூறும் இல்லாமல் நல்ல சூழலில் இருந்து இன்புறுவதற்கு ஏற்றதாயும். மேடாக உள்ள ஒரு பரந்த வெளியில் நின்று பார்த்தார். தில்லை நடராசர் ஆலய கோபுரங்கள் நான்கும் அங்கு நன்றாகத் தெரிந்தன. சிதம்பர ஆலய தரிசன வாய்ப்புள்ள இதுவே தகுதியான இடம் என்று முடிவு செய்தார். அதுதான் பார்வதிபுரம் என்று அழைக்கப்படுகிற வடலூர்.

நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின்
அடிப்பார்வை யும்வடக்கே யார்ந்து கொடிப்பாய
நின்று வளர்மலைபோல் நெஞ்சே பார்த்தால் தெரியும்
இன்றெவ் விடத்தெனிலிப் பாட்டு

 
மேலும் வள்ளலார் »
temple
4. உத்தர ஞான சிதம்பரத்தில் (வடலூரில்) ஓங்கிய (அருட்) பெருஞ்ஜோதி(1867-1870) பூர்வ ஞான சிதம்பரம் என்பது தில்லையும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.