திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா தொடங்க உள்ளது. இதை தொடர்ந்து, 10 நாட்கள் நடக்கும் விழாவில், பஞ்சமூர்த்திகள், தினமும், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். விழாவில், பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்தல், விழாவில் வீதி உலாவில், சுவாமி அலங்காரம் செய்யப்பட உள்ள வாகனங்கள், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வரும் தேர், பத்திரிசை அச்சடித்தல் உள்ளிட்ட பல்வேறு பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்ள, இன்று பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதை முன்னிட்டு, அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமி சன்னதி தங்க கொடி மரத்தில் அருகில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில், அதிகாலை, மங்கல இசை ஒலிக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, ராஜ கோபுரம் முன்பு பந்தக்கால் நடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.