பதிவு செய்த நாள்
17
செப்
2026
07:09
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வேத மந்திரம் முழங்க, 17 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (செப்.17) கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் 2009 ஏப்.8ம் தேதி நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆனால் 2018 பிப்.2ல் கோயிலின் வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தாலும், சீரமைப்பு பணி தாமதமாக நடந்ததாலும் 17 ஆண்டுகள் கழித்து இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கடந்த செப்டம்பர் 8ம் தேதி சாந்தி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் துவங்கின. கோயில் முழுவதும் உள்ள சன்னதிகளுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது சிரமம் என்பதால், நேற்று அம்மன், சுவாமி சன்னதிகளை சுற்றியுள்ள பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு விமானத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து பத்தாம் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை 3.35 மணிக்கு கும்பாபிஷேக பணி விக்னேச்வர பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து புண்யாஹவாசனம் நடைபெற்று பன்னிரண்டாம் கால வேள்வி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கலசங்கள் புறப்பாடு நடைபெற்று, காலை 7.40 மணிக்கு தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் தங்க விமானங்கள் மற்றும் இராஜகோபுரங்களுக்கு ஒரே நேரத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மஹா தீபாராதனை நடைபெற்றது. காலை 10.00 மணிமுதல் பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
* கும்பாபிஷேகத்திற்காக காசியில் இருந்து 1,008 லிட்டர் கங்கை புனித நீரும், 7 புண்ணிய நதிகளில் இருந்தும் 1,008 லிட்டர் புனித நீரும் கொண்டு வரப்பட்டிருந்தது.
* இரவு 7.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் மாசி வீதியில் உலா வந்து வந்து அருள்பாலிக்க உள்ளனர்.
* கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில், செப்.,18ம் தேதி வரை கோவில் பகுதியில் ரோட்டோர கடைகள் வைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.
* பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், மோர் பாக்கெட் அடங்கிய பிரசாதப் பை வழங்கப்பட்டது.
* ஆடி வீதிகளில் 11 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்பட்டுள்ளது.
* முக்கிய இடங்களில் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காண 51 மெகா திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
*புதுமண்டப கட்டுப்பாட்டு அறையில் இருந்து 448 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.