நவராத்திரி விழாவிற்கு விளச்சேரியில் தயாராகும் கொலு பொம்மைகள்
பதிவு செய்த நாள்
21
செப் 2026 11:09
திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரியில் நவராத்திரிக்காக கொலு மொம்மைகள் தயாரிக்கிப்படுகின்றன. இங்கு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கு தகுந்தாற்போல் சுவாமி சிலைகள், அரசியல் தலைவர்களின் சிலைகள், மூன்று இஞ்ச் முதல் 10 அடி உயரம்வரை விநாயகர் சிலைகள் மற்றும் இரண்டரை அடி உயர மெகா சைஸ் அகல் விளக்குகள், கிறிஸ்துமஸ் குடில்கள் ஆகியவற்றை களிமண், காகிதக் கூழ், சிமென்டில் தயாரிக்கின்றனர். இங்கு தயாராகும் பொம்மைகள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செய்கின்றன. நவராத்திரி விழாவிற்காக தற்போது கொலு பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன. ஹரிகிருஷ்ணன் கூறுகையில், பரம்பரை பரம்பரையாக பொம்மைகள் தயாரிக்கும் தொழிலில் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகிறோம். நவராத்திக்காக வழக்கமாக தயாரிக்கப்படும் கொலு பொம்மைகளுடன் இந்த ஆண்டு புதிதாக 18 சித்தர்கள், நவ நடராஜர், ராமர் செட், பீஷ்மர் அம்பு படுக்கை, நவ நாச்சியார், அஷ்டதிக்கு பாலர்கள், 64 நாயன்மார்கள், பாண்டுரங்கன், ரகுமாயி, ராமர், அனுமன், தங்கை குதிரை வாகனத்தில் கள்ளழகர், ஹயக்ரீவர், ஆஞ்சநேயர், அனைத்து அம்மன் சிலைகள் ஆகியவை மூன்று இஞ்ச் முதல் ஒரு அடி உயரம்வரை களி மண்ணிலும், நான்கரை அடி உயரம் வரை காகித கூழால் தயாரித்து வருகிறோம். சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு களிமண், காகிதகூழ் ஆகியவற்றால் மட்டுமே சிலைகள் தயாரிக்கிறோம். தமிழகத்தின் பெரும்பாலான கோயில்கள், காதி விற்பனையகங்களில் இங்கு தயாராகும் சிலைகள் விற்பனைக்கு உள்ளன. வெளி மாநிலத்தினரின் ஆர்டரின் பேரிலும் பொம்மைகள் தயாரித்து கொடுக்கிறோம். இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் கொலு பொம்மைகளை விரும்பி வாங்கி செல்கின்றனர் என்றார்.
|