திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா: 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பதிவு செய்த நாள்
10
நவ 2026 10:11
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், இன்று நடந்த கந்த சஷ்டி தொடக்க விழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். திருத்தணி முருகன் கோவிலில், இன்று கந்த சஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.காலை 9:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் சண்முகப் பெருமான் எழுந்தருளினார். பின், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் நித்யா, அறங்காவலர்கள் ஆகியோர் பங்கேற்று, லட்சார்ச்சனை விழாவை தொடங்கி வைத்தனர். பின், லட்சார்ச்சனைக்கு கட்டணம் செலுத்திய பக்தர்கள் மட்டும் காவடி மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டு, உற்சவருக்கு லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. மீதமுள்ள பக்தர்கள், காவடி மண்டபத்தில் அமர்ந்து, லட்சார்ச்சனையை காண ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வரும் 15ம் தேதி காலையில் சந்தன காப்பு, மாலை 5:00 மணிக்கு காவடி மண்டபத்தில் சண்முகப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி, மறுநாள் காலை 10:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. ஆறுபடை வீடுகளில், கடைசி நாளில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால், திருத்தணி முருகப்பெருமான் சினம் தணிந்த இடம் என்பதால், சூரசம்ஹாரத்திற்கு பதிலாக புஷ்பாஞ்சலி நடக்கும். இன்று கந்த சஷ்டி விழா தொடக்கம் என்பதால், வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், இரண்டு மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோட்டா ஆறுமுகசுவாமி கோவில், சித்துார் மாவட்டம், நகரி கரகண்டீஸ்வரர் கோவில், சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், கந்த சஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
|