காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனி விழா; காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பதிவு செய்த நாள்
26
செப் 2026 11:09
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை விழா வெகு விமர்சையாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து, அரங்கநாத பெருமாளை வழிபட்டு செல்வது வழக்கம். தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளையும், அரிசி, பருப்பு ஆகியவற்றை தாசர்களுக்கு படைத்து, தாசர்கள் வழங்கும் சிறிதளவு அரிசி, பருப்பு, காய்கறி வாங்கிச் சென்று, வீட்டில் பொங்கல் வைத்து விரதம் முடிப்பது வழக்கமாகும். இந்தாண்டு கடந்த வாரம் புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா நடந்தது. நேற்று இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறந்து, சிறப்பு திருமஞ்சனம் முடிந்த பின், அலங்காரம் செய்யப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவ மூர்த்தி அரங்கநாத பெருமாள், சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளம் வந்து, கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு திருவாராதனும், மந்திர புஷ்பம், அஷ்டோத்திரம் ஆகியவை செய்யப்பட்டது. அதன் பின் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்பு தீர்த்த பிரசாதம் வழங்கிய பின்பு, பக்தர்கள் வழிபாட்டிற்கு விடப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவர், உற்சவர் அரங்கநாத பெருமாளை வழிபட்டனர். புரட்டாசி சனிக்கிழமை விழாவை அடுத்து, கோவில் முன்பு, 100க்கும் மேற்பட்ட தாசர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த அரிசி, பருப்பு, காய்கறிகளை தாசர்களுக்கு படையல் இட்டனர். பின்பு தாசர்கள் வழங்கிய பொருட்களை பக்தர்கள் வாங்கி வீட்டிற்கு சென்றனர். பக்தர்கள் சிரமம் இல்லாமல் சுவாமியை வழிபடுவதற்கு, தகுந்த தடுப்புகளை கோவில் நிர்வாகத்தினர் அமைத்திருந்தனர். காரமடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முத்துசாமி மற்றும் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.
|