ஆவடி: அயப்பாக்கம் தனியார் குடியிருப்பு வளாகத்தில், ஓ.எஸ்.ஆர்., எனும் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் பாதையை மறித்து கட்டப்பட்ட சுந்தர விநாயகர் கோவிலை, வருவாய் துறை அதிகாரிகள் நேற்று இடித்து அகற்றினர். ஆவடி அடுத்த, அயப்பாக்கம் -– திருவேற்காடு சாலையில் உள்ள ‘வி.ஜி.என்., பிளாட்டினா’ என்ற தனியார் குடியிருப்பு வளாகத்தில் சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கோவில், ஓ.எஸ்.ஆர்., இடத்திற்கான பாதையை மறித்துள்ளதாக புகார் எழுந்தது. குடியிருப்பு தலைவராக ஸ்ரீனிவாசன் என்பவர், கோவிலை இடிக்க, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், கோவிலை இடிக்க உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை, குடியிருப்புக்கு சென்ற ஆவடி தாசில்தார் கண்ணன் உள்ளிட்ட வருவாய் துறையினர், ‘பொக்லைன்’ இயந்திரம் வாயிலாக கோவிலை இடித்து அகற்றினர். கோவிலை இடிக்க குடியிருப்பு மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை, போலீசார் கட்டுப்படுத்தினர்.