பதிவு செய்த நாள்
27
செப்
2026
01:09
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் காசிதீர்த்த கிணற்றில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட புனித தீர்த்தத்தால், வாரணாசி ஸ்ரீகாசி விஸ்வநாதருக்கு நேற்று மஹா அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
உ.பி. மாநிலம், வாரணாசியிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கும், திருப்பூர் மாவட்டம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலுக்கும் உள்ள ஆன்மிகத் தொடர்பு தலவரலாற்றில், ‘காசியில் வாசி அவிநாசி’ என்ற குறிப்பு காணப்படுகிறது. இதனை பக்தர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், அவிநாசியில் செயல்படும் நம்பி ஆரூரர் சிவ கைங்கர்ய சபா சார்பில் காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இதற்காக அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து கடந்த 22ம் தேதி 104 சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தத்துடன் காசிக்கு புறப்பட்டுச் சென்றனர். புரட்டாசி பவுர்ணமியான நேற்று காசி விஸ்வநாதருக்கு அவிநாசி கோவில் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, அவிநாசிலிங்கேஸ்வரரின் வஸ்திரம் மற்றும் மலர்மாலைகள் சாற்றப்பட்டன. தொடர்ந்து பன்னிரு திருமுறை பாராயணமும் நடைபெற்றது.
நம்பி ஆரூரர் சிவ கைங்கர்ய சபா நிறுவனர் ஆரூர சுப்ரமண்ய சிவச்சார்யார் கூறியதாவது:
காசிக்கும் அவிநாசிக்கும் உள்ள தொடர்பு ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆன்மிகத் தொடர்பு குறித்து பக்தர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடத்தி வருகிறோம். அவிநாசி கோவில் காசி கிணற்றில் இருந்த புனித தீர்த்தம், சுவாமிக்கு சாற்றிய வஸ்திரம், மலர்மாலைகளை காசிக்கு கொண்டு சென்று வழிபாடு நடத்தினோம். அதேபோல், காசியில் இருந்து புனித தீர்த்தம், காசி விஸ்வநாதரின் வஸ்திரம் மற்றும் மலர்மாலைகளை அவிநாசிக்கு கொண்டு வந்து, அடுத்த வாரம் அவிநாசிலிங்கேஸ்வரருக்கு மஹா அபிஷேகம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.