பதிவு செய்த நாள்
28
செப்
2026
05:09
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் விஜய் இன்று (செப்., 28) காலை மதுரைக்கு வருகை தந்தார். விமான நிலையத்தில் உற்சாக தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதுரைக்கு வந்துள்ள முதல்வர் விஜய், வழியெங்கும் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை பார்த்து கை அசைத்தபடி ரோடு ஷோ நடத்தினார்.
முதல்வர் விஜய், வழியில் மீனாட்சி அம்மன் வேடத்தில் வரவேற்பு அளித்த குழந்தையை எடுத்து கொஞ்சினார். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை முதல்வர் விஜய் துவங்கி வைத்தார். அவர் குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை அணிவித்தார். அவர் குழந்தைகளை சிறிது நேரம் தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.
காந்தி மியூசியம்: தொடர்ந்து ரூ.10 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள காந்தி மியூசியத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்; காந்தி பயன்படுத்திய கண்ணாடி, டிஜிட்டல் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை முதல்வர் விஜய் பார்வையிட்டார். அவர் காந்தியின் பெருமைகளை எடுத்துரைக்கும் வீடியோவை பார்த்தார்.
மீனாட்சிஅம்மன் தரிசனம்: மதிய உணவு, ஓய்வுக்குப்பின் மாலை 4:00 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு கிளம்பினார். வழிநெடுகிலும் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து மாலை 4.20 மணிக்கு மீனாட்சிஅம்மன் கோயில் வந்தார். அவருக்கு கோவில் நிர்கவாகம் சார்பில் பூர்ணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதரை தரிசனம் செய்தார். பின் அனைத்து சன்னிதிகளில் வழிபட்ட முதல்வர் விஜய் அங்கிருந்து விமான நிலையம் சென்று சென்னை புறப்பட்டார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், 17 ஆண்டுகளுக்கு பின், மகா கும்பாபிஷேகம் செப்., 17ம் தேதி கோலாகலமாக நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிறைவை தொடர்ந்து மீனாட்சி அம்மன் கோயிலில் செப்.,18 முதல் மண்டல பூஜை நடைபெற்று வருவது குறிபிடத்தக்கது,
பலத்த பாதுகாப்பு: முதல்வர் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், விமான நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை வரை சாலையின் இருபுறமும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.