பதிவு செய்த நாள்
28
செப்
2026
05:09
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தஞ்சாவூர் கலியமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் மன்னர் ராஜராஜ சோழன் ஆட்சியில் கட்டப்பட்டது. பாரம்பரிய புராதன சின்னம் என்பதால் மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலின் எட்டுத்திசைகளில் ஆகம விதிகள்படி அமைக்கப்பட்ட அஷ்டதிக் பாலகர்களின் சன்னதிகள் உள்ளன. நான்கு சன்னதிகளில் சிலைகள் இன்றி பூட்டிய நிலையில் உள்ளன. நான்கு சன்னதிகளில் சிலைகள் பராமரிப்பின்றி சிதைந்துள்ளன. பக்தர்கள் வழிபட முடியவில்லை. பூஜைகள் தடையின்றி நடக்க ஏதுவாக அஷ்டதிக் பாலகர்களின் சன்னதிகளை முறையாக பராமரிக்க வேண்டும். சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகள் நிறுவ அனுமதிக்க மத்திய தொல்லியல்துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் புத்தனேந்தல் அழகர்சாமி பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் இந்திரன் சன்னதியில் இருந்ததாக நம்பப்பட்டு தற்போது காணாமல் போனதாக கூறப்படும் இந்திரன் சிலையை மீட்க வேண்டும். இந்திரன் சன்னதியை மக்களின் வழிபாட்டிற்கு திறக்க வேண்டும். அதற்கு ஓதுவார்களை நியமித்து, வழக்கமான வழிபாடுகள் மற்றும் பூஜைகளை நடத்த வேண்டும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திர விழாவை நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சின்ராஜ் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் கிழக்கு கோபுரம் நுழைவு வாயில் உள்பக்கத்தில் மருத நில அரசன் இந்திரனுக்கு சன்னதி வைத்து ஆராதனை செய்தார் ராஜராஜசோழன். மக்களும் வழிபட்டனர். விழா எடுத்து கொண்டாடினர் என சிலப்பதிகாரம், மணிமேகலையில் சான்றுகள் உள்ளன. மத்திய தொல்லியல்துறையும் சான்று கூறுகிறது. இந்திரன் சன்னதி 40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டு சேதமடைந்துள்ளது. ஆராதனை நடைபெறவில்லை. சன்னதியை திறந்து பூஜை, வழிபாடு நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. கலியமூர்த்தி தரப்பில் வழக்கறிஞர் முருகானந்தம், அழகர்சாமி பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் அழகுமணி, சின்ராஜ் தரப்பில் அவரும் ஆஜராகினர்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பழமையான சின்னங்கள் பாதுகாப்பு சட்டப்படி புது சிலைகளை நிறுவ முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க கோயிலின் பழமையை பாதுகாக்க வேண்டியுள்ளது. சிதைந்த சிலைகளுக்கு பதிலாக புது சிலைகளை நிறுவ வேண்டும். சிலைகள் இல்லாத இடங்களில் புது சிலைகளை நிறுவ வேண்டும். புது சிலைகள் நிறுவ ஏற்கனவே ஸ்தபதி ஒப்புதல் அளித்துள்ளார். அரசு விரும்பினால் நிபுணர்கள், ஸ்தபதிகளின் ஒப்புதலை பெறலாம். இந்நடவடிக்கைகளை கலெக்டர், தஞ்சாவூர் அறநிலையத்துறை இணை கமிஷனர், மத்திய தொல்லியல்துறை திருச்சி உதவி கண்காணிப்பு அலுவலர், கோயிலின் பரம்பரை அறங்காவலர் 3 மாதங்களில் துவங்கி 12 மாதங்களில் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.