மதுரை மீனாட்சி கோவிலில் முன்கூட்டியே கதவு அடைப்பு: பக்தர்கள் எதிர்ப்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2026 11:10
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த எவ்வித முன்னறிவிப்பின்றியும் முன்கூட்டியே கோபுர கதவுகள் அடைக்கப்பட்டதால் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்.,17ல் நடந்தது. நேற்றோடு மண்டல பூஜை நிறைவடைந்தது. செப்.,28 ல் முதல்வர் விஜய் தரிசனம் செய்தார். கும்பாபிஷேகம் நடந்தது முதலே பக்தர்கள் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசாரும், கோயில் நிர்வாகத்தினரும் திணறி வருகின்றனர். கூட்டத்தால் கோயில் நடைஅடைப்பதில் காலதாமதம் ஆகிறது. கோயிலுக்குள் இருக்கும் பக்தர்கள் கூட்டம் வெளியேறுவதில் தாமதம் ஆவதால் நெரிசல் ஏற்படுகிறது.
இதைதவிர்க்க சில நாட்களாக எவ்வித முன்னறிவிப்பின்றி கோயில் கதவுகளை முன்கூட்டியே அடைத்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 7:45 மணிக்கு கோபுர வாசல்கள் அடைக்கப்பட்டு பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் கொதித்தெழுந்த பக்தர்கள் தெற்கு கோபுரம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘கோயிலுக்குள் கூட்ட நெரிசல் உள்ளது. உங்கள் பாதுகாப்பு கருதியே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது’ என்று போலீசார் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்த பக்தர்கள், ‘நாங்கள் வெளியூர்களில் இருந்து வந்துள்ளோம். மீண்டும் எப்போது வந்து அம்மனை நாங்கள் பார்க்க முடியும். முதலிலேயே அறிவிப்பாக வெளியிட்டிருந்தால் அதற்கேற்ப நாங்கள் கோயிலுக்கு வந்திருப்போம்’ என்றனர். தெற்கு கோபுரத்தில் இருந்து பக்தர்கள் நகராததால், வேறு வழியின்றி 200 பேரை மட்டும் போலீசார் உள்ளே அனுமதித்தனர். நேற்றும் விடுமுறை தினம் என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேரில் ஒழுங்குப்படுத்தும் பணியை கண்காணித்தார். தினமும் தொடர்கதையாக நடந்துகொண்டிருக்கும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசாரும், கோயில் நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.