நாமக்கல்லில் 600 கிலோவில் கோவில் மணி தயாரிப்பு
பதிவு செய்த நாள்
03
அக் 2026 11:10
நாமக்கல்: நாமக்கல்லில், 600 கிலோ எடை கொண்ட கோவில் மணி தயார் செய்யப்பட்டு, படைவெட்டியம்மன் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது. நாமக்கல், மோகனுார் சாலை, முல்லை நகரில் ஆண்டாள் மோல்டிங் லேபர் ஒர்க்ஸ் என்ற நிறுவனம் கோவில் மணி, குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு உள்ளிட்டவற்றை தயார் செய்து, பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், அயோத்தி ராமர் கோவிலுக்கு, 1,000 கிலோ எடை கொண்ட ராட்சத கோவில் மணி, 100க்கும் மேற்பட்ட சிறிய வகையான மணிகள், நாமக்கல்லில் தயார் செய்யப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டன. தற்போது, 600 கிலோ எடை கொண்ட கோவில் மணி கடந்த, 40 நாட்களுக்கு முன் தயாரிக்கும் பணி தொடங்கியது. ப.வேலுார் தாலுகா, பில்லுார் படைவெட்டி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, இந்த மணி தயார் செய்யப்பட்டு, நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. 20 தொழிலாளர்களை கொண்டு பணியை செய்து முடித்தனர். கோவில் மணியை வடிவமைத்த ஸ்தபதி காளிதாஸ் கூறியதாவது: என் தந்தை ராஜேந்திரன் செய்த பணியை, தற்போது என் குடும்பத்தினருடன் இணைந்து செய்து வருகிறேன். கோவில் மணி தயாரிப்பில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறோம். அயோத்தி ராமர் கோவிலுக்கு ஒரு டன், (1,000 கிலோ) எடை கொண்ட மணி தயார் செய்து அனுப்பினோம். தற்போது, 600 கிலோ எடையில் மணி தயாரிக்கப்பட்டுள்ளது. பித்தளை, துத்தநாகம், வெள்ளியீயம், செம்பு மற்றும் இரும்பு கொண்டு மணி தயார் செய்யப்பட்டுள்ளது. 32 லட்சம் ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்பட்ட இந்த மணியின் ஓசை குறைந்தபட்சம், 2 கி.மீ., தொலைவு வரை எதிரொலிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
|