திருப்பரங்குன்றம் கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்ய பணிகள் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2026 04:10
திருப்பரங்குன்றம்: தமிழக அரசின் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிர்வாகமே பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்வதற்கான ஆரம்பகட்ட பணிகளை நிர்வாகம் துவக்கி உள்ளது.
கோயிலில் கடந்த ஆண்டு வரை பஞ்சாமிர்தம் விற்பனை தனியாருக்கு ஏலம் விடப்பட்டது. கடந்த ஆண்டு ரூ. 31.14 லட்சத்திற்கு பஞ்சாமிர்தம், விபூதி விற்பனை ஏலம் போனது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசாதங்களை கோயில் நிர்வாகமே தயாரித்து விற்பனை செய்வதை தொடர்ந்து பஞ்சாமிர்தத்தையும் தயாரித்து விற்பனை செய்ய புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசு ஜூன் மாதம் உத்தரவிட்டது. அதன்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சாமிர்தம் விற்பனை ஏலம் ரத்து செய்யப்பட்டது. அரசின் உத்தரவுப்படி கோயில் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்யவதற்கான ஏற்பாடுகள் செய்வதற்கு கால தாமதம் ஆகும் என்பதால் அதுவரை சோலைமலை முருகன் கோயிலில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கி ஜூலை 1 முதல் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சோலைமலை முருகன் கோயிலில் தயாரித்து விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தம் அங்கு வரும் பக்தர்களுக்கே போதுமானதாக இருந்ததால், அங்கிருந்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தேவையான பஞ்சாமிர்தத்தை பெற முடியவில்லை. குன்றத்து கோயிலுக்குவரும் பக்தர்களுக்கு போதுமான அளவில் பஞ்சாமிர்தம் கிடைக்காததால் இடையில் சில நாட்கள் பஞ்சாமிர்தம் விற்பனை தடைபட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. செய்தியின் எதிரொலியாக சோலைமலை முருகன் கோயிலில் இருந்து மீண்டும் பஞ்சாமிர்தம் பெறப்பட்டு விற்பனை துவங்கியது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகமே பஞ்சாமிர்தம் தயாரிக்க பணிகளை துவக்கியுள்ளது. பஞ்சாமிர்தம் தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்குவதற்காக மூன்று நிறுவனங்களிடமிருந்து விலை புள்ளிகள் பெறப்பட்டுள்ளது. பஞ்சாமிர்தம் தயாரிக்க தேவைப்படும் கற்பூரவல்லி வாழைப்பழம், கால் கிலோ, அரை கிலோ அளவில் பஞ்சாமிர்தம் அடைக்க லேபிள் ஒட்டிய தரமான டப்பாக்கள் சப்ளை செய்வதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. தவிர பஞ்சாமிர்தம் தயாரிக்க தேவைப்படும் நாட்டு சக்கரை, கற்கண்டு, பேரிச்சம்பழம், தேன், ஏலக்காய், நெய் உள்ளிட்ட பொருள்களை அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் கோயில் நிர்வாகமே நேரடியாக கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிந்து கோயில் நிர்வாகம் பஞ்சாமிர்தம் தயாரித்து பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.