திருமலையில் பவுர்ணமி கருட சேவை: பெருமாளை தரிசித்த துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27அக் 2026 10:10
திருமலை: திருமலையில் திங்கள்கிழமை இரவு பவுர்ணமியை முன்னிட்டு கருட வாகன சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஜனாதிபதி ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்று, மலையப்ப சுவாமியைத் தரிசனம் செய்தார்.
நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற கருட வாகன சேவையில், மலையப்ப சுவாமி அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு கருட வாகனத்தில் எழுந்தருளினார். கோவிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளிலும் வலம் வந்த பெருமாள், திரண்டிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைணவ மரபில் 108 திவ்ய தேசங்களிலும் கருட சேவை சிறப்பிடம் பெற்றுள்ளது. பெருமாளிடம் முழுமையாகச் சரணடைந்த பக்தர்களுக்கு இறைவன் தொண்டனாகவும் தொண்டர்களின் தொண்டனாகவும் விளங்குகிறார் என்பதை இந்தச் சேவை உணர்த்துவதாக நம்பப்படுகிறது. ஞானம் மற்றும் வைராக்கியத்தின் அடையாளமாகக் கருதப்படும் கருடாழ்வாரைத் தரிசிப்பதன் மூலம் பாவங்கள் நீங்கி, ஆன்மிக நலம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு: இந்த நிகழ்வில் திருமலை திருப்பதி தேவஸ்தான பெரிய ஜீயர், சின்ன ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான செயல் அலுவலர் முத்தடா ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அலுவலர் சி. வெங்கையா சௌத்ரி, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரி முரளி கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மாவட்டப் பொறுப்பு அமைச்சர் அனகானி சத்ய பிரசாத், மாவட்ட ஆட்சியர் டாக்டர் வெங்கடேஸ்வர், திருப்பதி காவல் கண்காணிப்பாளர் சுப்பராயுடு, தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் அதிகாரிகள் பங்கேற்றனர்.