கோதாவரி ஆரத்தியில் உலக சாதனை: 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியினர் ஒரே நேரத்தில் வழிபாடு!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2026 11:11
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், கோதாவரி ஆற்றங்கரையில் 650 கிராமங்களைச் சேர்ந்த 6,233 பழங்குடியின பக்தர்கள் ஒரே நேரத்தில் தீபம் ஏந்தி ஆரத்தி எடுத்தனர். ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் நடைபெற்ற இந்த பிரம்மாண்ட நிகழ்வு, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
நாசிக் கோதாவரி ஆற்றங்கரையில் நடைபெற்ற இந்த சிறப்பு ஆரத்தியில், 6,233 பக்தர்கள் ஒரே நேரத்தில் தீபங்களை ஏந்தி, ஒரே சீராக வழிபாடு நடத்தினர். ஆற்றங்கரை முழுவதும் ஆயிரக்கணக்கான தீபங்கள் ஒளிர்ந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. இந்த சாதனைக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
650 கிராமங்களை ஒன்றிணைத்த நிகழ்வு: மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 650 பழங்குடியின கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இதில் பங்கேற்றனர். பழங்குடியின மக்களின் பாரம்பரியம், கலாசாரம் மற்றும் ஆன்மிக நம்பிக்கையைப் பறைசாற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. நாசிக் - திரிம்பகேஸ்வர் சிம்ஹஸ்த கும்பமேளா கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்த கோதாவரி ஆரத்தி நடைபெற்றது. அக்டோபர் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் கும்பமேளா நிகழ்வுகள் தொடங்கின. ஜனாதிபதி திரௌபதி முர்மு, மகாராஷ்டிர ஆளுநர், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சுனேத்ரா பவார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒரு வாரத்திற்குள் நாசிக் பகுதியில் இரண்டு உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இந்த மாபெரும் கோதாவரி ஆரத்தி நகரின் ஆன்மிக மற்றும் கலாசாரப் பெருமையை உலக அரங்கில் எடுத்துக்காட்டியுள்ளது.