பதிவு செய்த நாள்
02
நவ
2026
02:11
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நவ. 10ல் துவங்கி நவ. 16ல் நிறைவடைகிறது.
கோயிலில் நவ. 10 காலையில் உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகம் கொண்ட சண்முகருக்கு காப்பு கட்டப்படும். அதனைத் தொடர்ந்து விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்கும்.
முக்கிய நிகழ்ச்சியாக நவ. 14ல் வேல் வாங்குதல், நவ. 15ல் சூரசம்ஹாரம், நவ. 16 காலையில் தேரோட்டம், மாலையில் பாவாடை தரிசனம் நடக்கும். அன்று மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்கக் கவசம், மற்ற மூலவர்களான கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படி ஆகும்.
திருவிழா நடைபெறும் 7 நாட்களிலும் மதுரை, வெளியூர்களில் இருந்து வரும் பெண் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்வர். விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தினம் காலை, மாலையில் சரவணப் பொய்கையில் நீராடி கிரிவலம் செல்வர்.
இந்தப் பக்தர்களுக்கு மதியம் தேன், தினை மாவு, சர்க்கரை கலந்த பிரசாதமும், மாலையில் சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறும், இரவில் பாலும் இலவசமாக வழங்கப்படும். தினமும் இரவு 7:00 மணிக்கு கோயிலுக்குள் சுவாமி புறப்பாடாகி திருவாட்சி மண்டபத்தில் 6 முறை வலம் சென்று அருள்பாலிப்பார்.