காஞ்சி கைலாசநாதர் கோவிலில் ரூ. 1.92 கோடியில் புதிய வசதிகள்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2026 10:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில், பக்தர்களுக்கான பல்வேறு வசதிகள், சோழமண்டலம் நிறுவனம் மூலம் 1.92 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு நேற்று பயன்பாட்டிற்கு வரும் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது.
காஞ்சிபுரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க கைலாசநாதர் கோவிலில், பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, கோவிலின் வரலாற்று சிறப்புகளை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகள் நிறைவடைந்துள்ளன. சோழமண்டலம் ‘இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ்’ நிறுவனம், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தொல்லியல் துறையுடன் இணைந்து, கைலாசநாதர் கோவிலில் பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசின் பாரம்பரியத்தை தத்தெடு 2.0 திட்டத்தின் கீழ், தமிழகத்திலேயே முதன் முறையாக கைலாசநாதர் கோவில் தத்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், கோவிலின் பாரம்பரிய சிறப்புகளை பாதுகாப்பது, பார்வையாளர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துவது, கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகளை விளக்கும் காட்சிகளை அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், பார்வையாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோவில் வளாகப் பகுதிகளை அழகுபடுத்துதல் மற்றும் தொடர்ந்து பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதிகளை பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் பைனான்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் வெள்ளையன் சுப்பையா, மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரவீந்திர குமார் குண்டு, மத்திய தொல்லியல் துறையின் டைரக்டர் ஜெனரல் யாதுபிர் சிங் ராவத், வெங்கடாசலம், ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா துணை வேந்தர் சீனிவாசன், எம்.ஏ.எம்.அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய வசதிகள் மூலம் கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணியர் மற்றும் பக்தர்கள், கைலாசநாதர் கோவிலின் வரலாற்று பின்னணி, கட்டடக்கலை சிறப்புகள் மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும். மத்திய தொல்லியல் துறையின் டைரக்டர் ஜெனரல் யாதுபிர் சிங் ராவத் பேசுகையில், இந்தியாவில், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் 4,000 பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. பழங்கால ஓவியங்கள், சிற்பங்கள் மற்றும் கலைகளை புதுப்பித்து பாதுகாப்பது நமது வரலாற்றை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு சேர்க்கும். மக்கள் ஒன்றிணைந்து கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்துகொள்ளும் இடங்களாக இதுபோன்ற இடங்கள் விளங்குகின்றன’ என்றார்.