இல்லந்தோறும் இன்பம் பொங்கட்டும்.. இறை உணர்வு தங்கட்டும்: தருமபுரம் ஆதீனம் தீபாவளி ஆசி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2026 08:11
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வெளியிட்டுள்ள தீபாவளி ஆசியுரையில் இந்திய திருநாட்டின் பண்பாட்டுப் பெருமையையும், ஆன்மீக சிறப்பையும், அறத்தின் வெற்றியையும் ஒருங்கே பறைசாற்றும் திருநாளாக தீபாவளி திகழ்கிறது. காலம் காலமாக நம் முன்னோர்கள் போற்றி வளர்த்த நன்னெறிகளையும், இறை வழிபாட்டின் மேன்மையையும் நினைவூட்டும் இத்திருநாள். ஒவ்வொருவர் உள்ளத்திலும் புத்துணர்வையும், நம்பிக்கையையும் விதைக்கின்ற இனிய திருநாள் ஆகும். தீபாவளி கொண்டாடுவதற்கு கொடுமைகளுக்கு துணை நிற்கின்ற நரகாசுரனை கிருஷ்ணர் வென்றதும், ராவணனை வென்று ராமர் அயோத்திக்கு திரும்பிய நிகழ்வும் புராணப் பின்னணியாக அமைந்துள்ளது. இந்நிகழ்வுகள் தீமையை அழித்து நன்மை நிலை பெற வேண்டும் என்ற உயரிய வாழ்வியல் செய்தியை உணர்த்துகிறது. சுடர் சிறிதாக இருந்தாலும் அது தன்னை சுற்றியுள்ள இருளை நீக்கும் ஆற்றல் கொண்டது. அதுபோல மனித உள்ளத்தில் தோன்றும் ஓர் அன்பான எண்ணமும், ஒருவர் செய்யும் சிறிய உதவியும், பிறரிடம் காட்டும் கருணையும் இவ்வுலகில் பெரிய மாற்றங்களை உருவாக்க வல்லவை. மக்களிடையே அன்பு பொறுமை ஈகை நேர்மை ஒற்றுமை ஆகிய நற்பண்புகள் தழைத்தோங்கும் போது ஒவ்வொரு இல்லமும் மகிழ்ச்சியின் உறைவிடமாகும். ஒவ்வொரு உள்ளமும் இறைவன் உரையும் திருக்கோயிலாகவும் திகழும். மொழி, இனம், எல்லைகள் கடந்து மனித நேயமே அனைவரையும் இணைக்கும் உயர்ந்த பண்பாக விளங்க வேண்டும். பிறரது மகிழ்ச்சியில் தம் மகிழ்ச்சியை காணும் மனப்பக்குவம் வளர வேண்டும். அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த சமூகம் உருவாக வேண்டும். இல்லந்தோறும் இன்பம் பொங்கவும் உள்ளம் தோறும் இறை உணர்வு தங்கவும் உலகெங்கும் அமைதியும் அன்பும் இறைவனின் திருவருளால் தீபாவளி திருநாளில் அனைவரது வாழ்விலும் நலமும் வளமும் பெருக வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.