இதய நோய் நீக்கிய கடவுளுக்கு தங்க இதயம் காணிக்கை செலுத்தி பக்தர் நெகிழ்ச்சி
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2026 08:11
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள புகழ்பெற்ற சன்வாலியா சேத் கோயிலில், பக்தர் ஒருவர் 21 கிராம் எடையுள்ள இதய வடிவிலான தங்க ஆபரணத்தைக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார். இதன் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.
இந்தக் காணிக்கைக்குப் பின்னால் நெகிழ்ச்சியான பக்திக் கதை உள்ளது. ராஜஸ்தானின் ஜாலோர் பகுதியைச் சேர்ந்த அந்தப் பக்தர் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். நோயிலிருந்து குணமடைந்து, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற வேண்டும் என சன்வாலியா சேத்திடம் வேண்டிக்கொண்டார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நலம் மேம்பட்டதைத் தொடர்ந்து, தனது வேண்டுதல் நிறைவேறிய மகிழ்ச்சியில் கோயிலுக்கு வந்த அவர், நேர்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக 21 கிராம் எடையுள்ள தங்க இதய ஆபரணத்தைக் காணிக்கையாக வழங்கினார்.
இதுகுறித்து கோயில் அறக்கட்டளை நிர்வாகம் கூறுகையில், பக்தர் காணிக்கை செலுத்தும் கவுன்டரில் தங்க இதயத்தை ஒப்படைத்ததாகவும், தனது பெயர் உள்ளிட்ட விவரங்களைத் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளது. உடல்நலம் குணமடைந்த நன்றியைத் தனித்துவமான முறையில் வெளிப்படுத்திய இந்தப் பக்தரின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.