ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அருகே புத்துார் மலையின் பின்புற மலையடிவாரத்தில் கட்டில் பாறை கருப்பசாமி கோயில் அருகே கற்காலத்தை சேர்ந்த 3 மனித வாழ்விடங்களும் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான வெண் சாந்து பாறை ஓவியங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
கள ஆய்வாளர்கள் கூறுகையில்: புத்தூர் மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகை தளங்களை மனிதர்கள் தங்கும் இடங்களாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதன் காரணமாக இப்பகுதிக்கு கட்டில் பாறை என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். கோயிலை சுற்றியுள்ள பகுதியில் பல இயற்கையான பாறை ஒதுக்கிடங்கள் காணப்பட்டாலும் கண்டறியப்பட்ட இந்த மூன்று குகை அமைப்புகள் மட்டும் மழை நீர் உள்ளே கசியாத வகையில் இயற்கையான அமைப்பு காணப்படுகிறது. மேலும் இக்குகை தளங்களில் அரைப்பு, தேய்ப்பு குழிகளும் காணப்படுகின்ற சான்றுகள் அடிப்படையில் இவை கற்கால மனிதர்களின் வாழ்விடங்களாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பாறை ஓவியங்கள்: இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகைத் தளத்தில் விதான பகுதி வெண் சாந்து கொண்டு வரையப்பட்ட பாறை ஓவியங்களில் மனிதர்கள் போல் காட்சிகள் அக்கால மனிதர்கள் வாழ்ந்த சூழலில் கண்ட விலங்குகளின் உருவங்கள், வாள், கேடயம் போன்ற ஆயுதங்கள் வரையப்பட்டுள்ளன.
இதுகுறித்து பேராசிரியர் கந்தசாமி: புத்துார் மலையில் ஏராளமான தொல்லியல் சார்ந்த தடயங்களும் ஏற்கனவே நுண் கற்கால கருவிகளும் கண்டறியப்பட்டு பதிவாகியுள்ளது. மலையைச் சுற்றிலும் குகை தளங்கள், புடவுகள், பாறை இடுக்குகளில் மனிதர்கள் வாழ்ந்துள்ளனர். இங்கு சமண கற்படுகை மலையடிவாரத்தில் தனித்தனி குகைகளும் தியான அறைகளும் காணப்படுகிறது. மீனாட்சிபுரத்தில் பாறை ஓவியங்கள் பழங்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அக்கால மக்களின் தொழில்நுட்பத்தையும் வெண் சாந்தை கொண்டு வரையப்பட்ட ஓவியம் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. வரலாற்று தொன்மை கருதி இவற்றை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.