மாசாணியம்மன் குண்டம் விழா: மயான பூஜை இடம் அகலப்படுத்தும் பணி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2013 11:02
ஆனைமலை: மாசாணியம்மன் கோவில் மயான பூஜை நடைபெறும் இடம் அகலப்படுத்தும் பணியை பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் குண்டம் விழா நிகழ்ச்சி தொடங்கி 28ம் தேதி அலங்கார பூஜையுடன் விழா முடிவடைகிறது.வரும் 23ம் தேதி இரவு 1.00 மணிக்கு மயானபூஜை நடைபெற உள்ளது. மாசாணியம்மன் கோவிலுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகம் எதிர்பார்க்கப் படுவதால் கூட்ட நெரிசலை சமாளிக்கும் பணியில் பேரூராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர். மயான பூஜை நடைபெறும் இடத்தில் கடந்த ஆண்டு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதையடுத்து, இந்த ஆண்டு இடப் பற்றாக்குறையை சமாளிக்க பேரூராட்சி நிர்வாகம் முயற்சி எடுத்து வருகிறது. மயான பூஜை நடைபெறும் இடத்தை ஒட்டிய ஒரு ஏக்கர் தனியார் இடம் 23ம் தேதி ஒரு நாள் இரவு பக்தர்கள் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனைமலையை சேர்ந்த சவுகத்அலி என்பவர் மயான பூஜை நடைபெறுவதற்காக தற்காலிகமாக இடம் ஒதுக்கியுள்ளார்.மயான பூஜைக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பக்தர்கள் அமர வசதியாக இடம் சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகளை ஆனைமலை பேரூராட்சி தலைவர் சாந்தலிங்ககுமார், செயல் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் கண்காணித்து வருகின்றனர்.