திருத்தணி கோவிலில் திருக்கல்யாண வைபவம் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
பதிவு செய்த நாள்
17
நவ 2026 01:11
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கந்த சஷ்டி நிறைவு விழாவான நேற்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில் திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 10 தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும், காவடி மண்டபத்தில், காலை 8:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை, உற்சவர் சண்முகப்பெருமானுக்கு லட்சார்ச்சனை நடத்தப்பட்டது. சஷ்டி விழாவை ஒட்டி, ஆறு நாட்களும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் உற்சவர் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் மாலை, உற்சவர் சண்முகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 10:00 மணிக்கு, கல்யாண உற்சவர் முருகர், வள்ளி – தெய்வானைக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி காவடி மண்டபத்தில் நடந்தது. முன்னதாக, மலைக்கோவில் அலுவலகத்தில் இருந்து, அறக்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் நித்யா, அறங்காவலர்கள் உஷாரவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் ஆகியோர், சீர்வரிசை தட்டுகளை காவடி மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, உற்சவர் முருகப்பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு, வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழக்க, திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஹோமம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தை தொடர்ந்து, பெண்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் குங்குமம், தாலி வழங்கப்பட்டது. முருகன் மலைக்கோவிலில் பல்லாயிரக்கில் திரண்ட பக்தர்கள், பொது வழியில் மூன்று மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். நுாறு ரூபாய் சிறப்பு தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி கூடுதல் எஸ்.பி., ஷுபன் திமான் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல், கும்மிடிப்பூண்டி ஞானவேல் முருகன் கோவில் உட்பட, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும், திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடந்தது.
|