ஐயப்பன் கோயில்களில் மண்டல விரத காலம் துவக்கம்: 18 படி பூஜை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2026 10:11
பரமக்குடி: பரமக்குடி தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல கால விரதம் கணபதி ஹோமத்துடன் கோலாகலமாக துவங்கியது.
பரமக்குடியில் பூரண புஷ்கலா தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்பன் அருள் படுக்கிறார். இங்கு மூலவர் தவக்கோலத்தில் வீற்றிருக்கிறார். உற்சவர் நின்ற திருக்கோலத்தில் உள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கேரளா மாநிலம் ஆரியங்காவு கோயிலில் நடப்பதை போல் திருக்கல்யாணம் நடப்பது சிறப்பாகும். இந்த ஆண்டு கார்த்திகை மாத மண்டல பூஜை விரத காலம் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 6:30 மணி தொடங்கி சிறப்பு யாகங்கள் நடந்து ஐயனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. அப்போது மூலவருக்கு வெள்ளிக்கவசம் சாற்றி மகா தீப ஆராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் மண்டல காலத்தில் இரவு 8:00 மணி தொடங்கி 18 படி பூஜை மற்றும் ஹரிவராசனம் தினம்தோறும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்க தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையிலான நிர்வாகிகள் செய்துள்ளனர். மேலும் பாரதி நகர் மற்றும் எமனேஸ்வரம் வண்டியூர் ஐயப்பன் கோயில்களிலும் விழா தொடங்கி நடக்கிறது. ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.